

'பருவத்தே பயிர் செய்' என்பது ஒரு பழமொழி. இது விவசாயத் தொழிலுக்கு மட்டும் தொடர்புடைய பொன்மொழி என்று எண்ணக் கூடாது. உழைத்து வாழ்க்கையில் உயரவேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டுச் செயற்பட்டாலும் அங்கெல்லாம் அந்தப் பொன்மொழி அவர்களுக்குப் பொருந்தும்.
நீங்கள் ஈடுபட்டிருப்பது விவசாயத் துறையாக இருந்தாலும் சரி, தொழில்துறையாக இருந்தாலும் சரி, வணிகத் துறையாக இருந்தாலும் சரி. எந்தச் சமயத்தில் எந்த முயற்சியினை செய்தால் முழு வேகத்தில் வெற்றி நமது காலில் விழும் என்பதை நன்கு தெரிந்து, பிறகு தொழிலில் ஈடுபட வேண்டும்.
நவீன மயமான விவசாய இயந்திரங்களைக் கண்டுபிடித்து உலகுக்கு அளித்த மேதையின் பெயர் மெக்கார்மிக் என்பதாகும். அவருடைய தந்தையார் விவசாயத்துடன் மரம் அறுக்கும் தொழிற்சாலை ஒன்றையும் நடத்தி வந்தார். மெக்கார்மிக்கின் உள்ளத்தைக் கவர்ந்தது இயந்திரத் தொழில்தான். எப்போதும் இயந்திரத் தொழிற்சாலைப் பக்கமே அவர் சுற்றிக் கொண்டிருப்பார்.
இயந்திரங்கள் வேலை செய்யும் விதத்தையும், அவற்றின் இயந்திர அமைப்புகளையும் கூர்ந்து நோக்கிப் பரிசீலனை செய்வார். தாமும் புதிதாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடித்து உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.
விவசாயத் தொழிலுக்குத் தேவையான, மனித உழைப்பைக் குறைக்கும் இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்தால் விவசாயிகள் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று மெக்கார்மிக் கருதினார். அதனால் முதலில் அறுவடை செய்வதற்கு உதவும் இயந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மெக்கார்மிக் ஈடுபட்டார்.
மெக்கார்மிக் இயந்திரத்தைப் பலமுறை தயார் செய்து இயக்கிப் பார்த்தார். தோல்விதான் ஏற்பட்டது. ஏறத்தாழப் பத்து ஆண்டுகள் படாதபாடுபட்டு இயந்திரத்தைத் திருத்தமாகச் செய்து முடித்தார்.
அவர் தயாரித்த அந்த முதல் அறுவடை இயந்திரத்தை முதலில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் தயாரிக்க முடிந்தது. ஏழு இயந்திரங்களை விற்பதற்குள் அவர் படாத பாடுபட வேண்டியிருந்தது. தொடக்கத்தில் இயந்திரங்களின் விலை விவசாயிகளின் வாங்கும் சக்தியை மீறியிருந்ததே அதற்குக் காரணமாகும். என்றாலும் அவருடைய முயற்சி பிற்காலத்தில் மகத்தான வெற்றியைப் பெற்று அதிக லாபத்தையும் தேடித்தந்தது. அறுவடைக்கான இயந்திரம் தயாரிப்பதுதான் அப்போது வெற்றிகரமான தொழிலாக அமையும் என்ற நுண்ணறிவு நான் அவருடைய வெற்றியின் இரகசியம் எனலாம்.
அறுவடை இயந்திரத்திற்குப் பதிலாக வேறு ஏதாவது ஒரு இயந்திரத்தை அவர் கண்டுபிடித்திருந்தால் அந்த இயந்திரம் எவ்வளவு சிறப்பானதாக அமைந்திருந்தாலும் அது அவருக்கு வெற்றிகரமான சாதனையாக அமைந்திருக்காது.
காலப்புரட்சிக்கு ஏற்பச் சூழ்நிலைகளின் தன்மைக்கு இணங்க நெளிவு சுளிவுடன் ஒத்துழைத்து வாழ்வதே சிறந்த பயனை நல்கும். காலத்தின் அருமையைக் கட்டாயம் ஒருவன் உணர்ந்திருக்க வேண்டும்.
உழைப்பின் மீதும், நம் திறமையின் மீதும் சரியானபடி நம்பிக்கை யிருந்தால், தொழிலில் தோன்றக்கூடிய எந்த நெருக்கடியையும் சமாளித்து வெற்றிகாண முடியும். அத்துடன் காலத்தின் தேவையைக் கவனத்தில் கொண்டு உழைத்தால் வெற்றியோடு கூடிய புகழும், பொருளும் கிடைக்கும்.
சரித்திரத்தின் பொன்னேடுகளில் தங்கள் பெயரை முத்திரையாகப் பதித்துக் கொண்டவர்களின் செயல்கள் யாவும், இப்படித்தான் காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்டவையாகவே இருக்கின்றன.