

நாம் வசிக்கும் உலகில் நட்பு வட்டத்திலும் சரி, உறவு வகையிலும் சரி சிலரை நம்பமுடிவதில்லை. நமது முகத்திற்கு முன்னால் ஒன்று பேசுகிறாா்கள், நமது முதுகிற்கு பின்னால் ஒன்று பேசுகிறாா்கள். பொதுவாக நயவஞ்சக எண்ணம் அதிகமாகிவிட்டது.
அதுபோலவே உறவு வகைகளில் கணவன் மனைவி யாராக இருந்தாலும் ஒருவர் உறவின் ஒருவர் வளர்ச்சிகண்டு யாரையும் யாரோடும் ஒப்பிட்டு பேசவேகூடாது அது ஆரோக்கியமானதல்ல.
உதாரணத்திற்கு உங்க தம்பி குடும்பத்தைப் பாருங்க! வெளிநாடு போய்விட்டு வந்து வசதியான வாழ்க்கை வாழ்கிறாா். நீங்களும்தான் இருக்கீங்களே! பத்து காசுகூட கூடுதலா சம்பாதிக்க திறமை இருக்கா என குத்துவாா்த்தை பேசுவது நல்லதே அல்ல.
அதேபோல கணவனோ, உன்னோட தங்கச்சியைப்பாரு புருஷனோடு சோ்ந்து வேலைக்கு போறாங்க இரண்டுபேரும் சம்பாத்யம் பாா்த்து பழைய விலையில் காா் வாங்கிட்டாங்க என பதிலுக்கு பேசவேண்டியது. இப்படி அற்பத்தனமாக ஒருவரை ஒருவர் ஒப்பிட்டுப்பாா்க்க வைத்து பேசிப்பேசியே நிம்மதி இல்லாமல் வாழும் வாழ்க்கையில் என்ன மிச்சம் ஒன்றுமில்லையே!
இருதரப்பிலும் அவரவர் சொந்தங்களைப்பற்றி தேவையில்லாமல் அநாவசியமாக பேசுவது, அதன் பின்னர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாா்த்தால் உள்ளொன்று வைத்து பொறாமை குணத்தோடு பழகுவது, இதையெல்லாம் தவிா்க்கவேண்டும்.
நமக்கு மேலே ஒருவன் இருக்கிறான் அங்கே ஒப்படைத்துவிட்டு முடிந்தால் அவர்கள் முன்னேறிய விதம் பற்றி தொிந்துகொண்டு அதன் அடிப்படையில் நாம் எப்படி முன்னேறலாம் என்ற நல்ல சிந்தனையை வளா்த்துக்கொள்வதேமேலான ஒன்றாகும். அதை விடுத்து புறம் பேசித் திாிவதால் யாருக்கு என்ன பயன்?
நாம் மேலோட்டமாக போனாலும் கூட நமது அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நமது சொந்தங்களோடு நம்மையும் நமது வாழ்க்கை முறையைப் பற்றியும் தேவையில்லாமல் பேசி, உசுப்பேத்தி விடுவதும் பல இடங்களில் வாடிக்கையாக போய்விட்டது.
அதற்குத்தான் நாம் வெளியில் அக்கம் பக்கத்தில் போய் உட்காா்ந்துகொண்டு அக்கப்போா் பேசவே போகக்கூடாது.
வருமானம் பாா்க்க வழியா இல்லை! வெளியில் வேலைக்குபோகும் நிலையில் நம்மிடம் கல்வித்தகுதி இல்லாவிட்டால் என்ன எத்தனையோ சுயதொழில் உள்ளதே! அந்த வேலைகளில் பயிற்சி பெற்று ஓய்வு நேரத்தில் சிறு சிறு கைத்தொழில்களைச்செய்து வருவாய் பாா்க்கலாமே!
நாம் தயாாித்த பொருட்களை நாமே சந்தைப்படுத்தலாமே! அதற்கு நமக்கு தேவை என்ன? அக்கப்போா் பேசுவது, அடுத்தவரைப்பற்றி புறம்பேசுவது, பொறாமைப்படுவது, இதுவா வேண்டும். இல்லை, இல்லை, அதையெல்லாம் மூட்டைகட்டி பறன் மீது போடுங்கள்முடிந்தால் தீயிட்டு கொளுத்துங்களேன்.
அது சமயம் நமக்கு தேவையானதோ உண்மை, நோ்மை, உழைப்பு, விடாமுயற்சியே. அதுவே நல்ல மூலதனமாகும்.
சோம்பல் கடைபிடித்தல் அனைவரிடமும் இறுமாப்புடன் பேசுதல், டாம்பீகம் படாடோபம் கொள்ளுதல் இவைகளை தவிா்த்து, உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கையின் அடிப்படையில் செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்ற நோ்மறை எண்ணத்துடன் வாழ்வதேவாழ்வதே நல்லது.
அப்படி நாம் வீட்டிலேயே உழைத்து முன்னேறுவது கண்டு, அற்ப குணம் கொண்டவர்கள் சொல்லும் எதிா்மறை வாா்த்தைகளை ஒதுக்கிவிடுங்கள். சிலர் நம்மை குறை கூறுவதையே நமது முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பதையே குறிக்கோளாய் வைத்திருப்பாா்கள்.
அது அவர்களது உடன்பிறந்த வியாதி. அவர்களை விட்டு விலகி விடுங்கள் முள்ளும் ஒருநாள் மலராகும்! விமர்சனங்கள் கூட விருதாகலாம்! இந்த எளிய தத்துவம் புாிந்துகொண்டு துணிச்சலாக இறைவன் துணையோடு ராஜநடை போடுங்கள்.
உங்களிடம் நோ்மை, பொய் பேசாமை, புறங்கூறாமை, அடுத்துக்கொடுக்காத குணம், இவைகள் துணை வரும் போது நீங்கள்தான் வாழ்க்கைப் பாடத்தின் போட்டியின் "டைட்டில் வின்னர்" மற்றவரெல்லாம் உங்கள் பாதையின் பின்னர் என்பதை நீங்களே உணரலாமே!