

வாழ்க்கை என்பது நாம் எடுக்கும் முடிவுகளின் தொகுப்பு. சில சமயம் நாம் எடுக்கும் ஒரு சிறு முடிவு, வாழ்நாள் முழுவதும் வருத்தத்தை ஏற்படுத்திவிடும். "அன்று ஏன் அப்படிச் செய்தேன்?" என்று நாம் வருந்தாமல் இருக்க, ஆண்டி ஸ்டான்லி (Andy Stanley) எழுதிய “Better Decisions, Fewer Regrets என்ற புத்தகத்தில் இருந்து சில எளிய 10 வழிகளைப் பற்றி (Motivation articles) இந்தப் பதிவில் பாப்போம்.
1. அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள்
பெரும்பாலான தவறான முடிவுகள் உணர்ச்சிவசப்படும்போது எடுக்கப்படுபவை. கோபத்திலோ அல்லது அதிக மகிழ்ச்சியிலோ இருக்கும்போது ஒரு முடிவை எடுக்காதீர்கள். ஒரு நிமிடம் நிதானமாக யோசிப்பது, பின்னாளில் வரும் பெரிய ஆபத்தைத் தவிர்க்கும்.
2. புத்திசாலித்தனமாக யோசியுங்கள்
ஒரு முடிவை எடுக்கும்போது, அது உங்களுக்குப் பிடித்துள்ளதா அல்லது சுலபமாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்காதீர்கள். அதற்குப் பதில், உங்கள் பழைய அனுபவம், இப்போதைய நிலைமை மற்றும் எதிர்கால ஆசை - இவை மூன்றையும் வைத்துப் பார்க்கும்போது, இப்போது எது சரியான செயல்? என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இது உங்களைத் தவறான முடிவுகளில் இருந்து காப்பாற்றும்.
3. பழைய தவறுகளை மறக்காதீர்கள்
கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைத்து வருத்தப்பட வேண்டாம். ஆனால், அந்தத் தவறுகள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்த பாடத்தை மட்டும் மறந்துவிடாதீர்கள். ஒருமுறை பட்ட அடி, மீண்டும் அதே தவறைச் செய்யாமல் உங்களைக் காப்பாற்றும் வேலியாக இருக்கட்டும்.
4. எதிர்காலத்தை நினைத்துப்பாருங்கள்
உடனடி லாபத்திற்காகத் தவறான வழியில் செல்லாதீர்கள். இப்போது லாபமாகத் தெரியும் விஷயம், பின்னாளில் பெரிய சுமையாக மாறலாம். எனவே இன்று கொஞ்சம் கஷ்டப்பட்டாலும், நாளை நிம்மதி தரும் உண்மையான செயல்பாடுகள் அவசியம்.
5. லாபத்தைவிட நேர்மையே முக்கியம்
சில குறுக்கு வழிகள் நமக்கு வசதியாகத் தெரியலாம். ஆனால், ஒரு நல்ல மனிதன் தன் நேர்மையை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டான். கஷ்டம் வந்தாலும் சரியான பாதையில் செல்வதே உங்களுக்குப் பெருமை சேர்க்கும்.
6. மனசாட்சியின் குரலுக்குச் செவிசாய்த்தல்
ஏதாவது ஒரு வேலையைச் செய்யும்போது உங்கள் மனதுக்குள் "இது சரியில்லை" என்று தோன்றினால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் உள் உணர்வு சொல்லும் அந்த எச்சரிக்கைதான் வரப்போகும் ஆபத்திலிருந்து உங்களைக் காப்பாற்றும் ஆயுதம்.
7. மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்
எல்லாமே எனக்குத் தெரியும் என்று நினைக்காமல், அனுபவம் உள்ளவர்களிடம் பேசுங்கள். குறிப்பாக, உங்கள் முகத்திற்கு நேராக உண்மையைச் சொல்லும் நண்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்களின் கருத்து உங்கள் முடிவை இன்னும் அழகாக்கும்.
8. தெளிவான மனமே வெற்றி தரும்
குழப்பமான மனநிலையில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். சரியான கேள்விகளை நீங்களே கேட்டுக்கொண்டால் மனம் தெளிவாகும். தெளிவான மனதோடு எடுக்கும் முடிவுதான் உங்களுக்கு தன்னம்பிக்கையையும் நன்மையையும் தரும்.
9. வாழ்க்கை ஒரு பயணம் - திசை முக்கியம்
நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு சின்ன முடிவும் உங்கள் வாழ்க்கையை ஒரு வழி நடத்தி செல்லும். தவறான பாதையில் வேகமாக ஓடுவதை விட, சரியான பாதையில் மெதுவாக நடப்பதே புத்திசாலித்தனம்.
10. கேள்விகளே வழிகாட்டி
எல்லாவற்றிற்கும் உங்களிடம் பதில் இருக்காது. ஆனால், ‘இந்தச் செயலைச் செய்தால் என் பிள்ளைகள் என்னைப் பெருமையாகப் பார்ப்பார்களா?’ என்பது போன்ற நல்ல கேள்விகளை உங்களுக்குள் கேட்டால், சரியான விடை தானாகக் கிடைக்கும்.
பணம் சேமிப்பது முதல் குடும்பத்தை வழிநடத்துவது வரை, நாம் எடுக்கும் முடிவுகளே நம் வாழ்க்கையை உருவாக்குகிறது. நிதானமாகவும், நேர்மையாகவும் முடிவெடுத்தால் தேவையற்ற வருத்தங்கள் இன்றி நிம்மதியாக வாழலாம்!