
சிலர் எப்பொழுதும் எங்கு சென்றாலும் தன் மாநிலத்தவரைப் பார்த்துவிட்டால் அவர்களின் தாய்மொழியைத் தவிர வேறு மொழியைக் கலந்து பேசவே மாட்டார்கள். இன்னும் சிலர் இடத்திற்கு தகுந்தவாறு வெளியில் சென்றுவிட்டால் ஆங்கிலத்தை மட்டும் பேசிக் கொண்டிருப்பார்கள். சிலர் எல்லா மொழியையும் ஒரே மாதிரி கற்றுக்கொண்டு சிறப்புற பேசுவார்கள். எந்த இடத்திற்கு போனாலும் அங்குள்ள மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு அந்தந்த மொழியை பயன்படுத்திக் கொண்டு நன்மை அடைவார்கள். இதனால் தான் சொல்ல வந்த கருத்தை சரியாக அந்தந்த மக்களுக்கு விளங்கும்படி புரிய வைப்பார்கள்.
ஆனால் வீட்டில் தாய் மொழியைத் தவிர வேறு எதையும் பேச மாட்டார்கள். அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களும் உண்டு. தனக்கு இத்தனை மொழி தெரிந்திருக்கிறது என்று கூட மற்றவரிடம் கூற மாட்டார்கள். இப்படி பல்விதமான மக்களை வெளியில் சென்றால் காணமுடிகிறது.
அதுபோல நாம் பள்ளியில் படிக்கும்பொழுது மேலதிகாரி யாராவது வருகிறார்கள் என்றால், நம் பள்ளி ஆசிரியைகள் நன்றாக படிக்கும் மாணவிகளைப் பார்த்து உன்னிடம் இந்தக் கேள்வியை கேட்பேன். அதற்கு நீ இப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூறி வைத்து விடுவார்கள். நாமும் அதற்கு தகுந்தாற்போல மேல் அதிகாரி வந்திருக்கும் பொழுது பதில் கூறி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தருவது உண்டு.
அதுபோல் போலந்து நாடு ரஷ்யர்களின் ஆதிக்கத்தில் இருந்த சமயம், தாய் மொழியான போலிஷில் மாணவர்களுக்கு பாடம் போதிக்கப்பட்டன. அந்நிலையில் போலந்து நாட்டின் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். பள்ளிகளில் மாணவர்களுக்கு தாய் மொழியான போலிஷில் பாடங்கள் நடத்துவது என்றும், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மின்சார மணியில் ஒருமுறை ஓசை எழுப்பி ஆசிரியர்களை எச்சரிக்கை செய்தால் அச்சமயம் ரஷ்ய மொழியில் பாடங்களை நடத்துவது என்றும் முடிவுக்கு வந்தனர்.
அப்படித்தான் அவர்கள் செயல்பட்டு வந்தனர். ஒரு பள்ளியில் திடீரென அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது தலைமை ஆசிரியர் மின்சார மணியை அழுத்தினார். அதில் கோளாறு காரணமாக மணி அடிக்கவில்லை. ஆசிரியர்கள் வழக்கம்போல் போலிஷில் பாடங்களை நடத்திக்கொண்டு இருந்தனர். அதிகாரி ஒரு வகுப்பில் நுழைந்தபோது திடுக்கிட்ட வகுப்பாசிரியை பாடத்தை நிறுத்தி சில செய்கைகளை செய்து காட்டினார்.
சந்தேகப்பட்ட அதிகாரி இப்பொழுது என்ன பாடம் நடத்தினீர்கள் என்று கேட்டபோது ஆசிரியர் தையல் வகுப்பு நடத்தினேன் என்றார். திருப்தி அடையாத அதிகாரி ஒரு மாணவியை எழுப்பி ரஷ்ய மொழியில் கேள்விகள் கேட்க அம்மாணவி சிறப்பான பதில் அளிக்கவும் அதிகாரி அந்த இடத்தை விட்டு அகன்றார்.
உடனே அந்த ஆசிரியை மாணவியை அன்புடன் கட்டிப்பிடித்துக் கொண்டார். அப்போது அம்மாணவி நமக்கு நம் தாய் மொழியில் கல்வி கற்க கூட உரிமை இல்லையே என்று கதறினார். பின்னாளில் அம்மாணவி சிறந்த விஞ்ஞானி ஆகி புதியதாக தனிமம் ஒன்றை கண்டுபிடித்தபோது அதற்கு தன் தாய் நாடான போலந்து நினைவாக 'போவோனியம்' என்று பெயரிட்டார்.
அம்மாணவிதான் இயற்பியல், வேதியல் என்று இரு துறைகளிலும் நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதை மேடம் மேரி கியூரி ஆவார்.
தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் அனைவரும் இது போன்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு புதிதாக ஒரு பொருளை கண்டுபிடித்து அதற்கு நம் தாய் மொழியில் பெயர் வைப்போம் ஆக. மற்றவர்கள் கண்டுபிடித்து அவரவர் மொழியில் பெயர் வைத்ததை நம் தாய் மொழிக்கு ஏற்ப மொழி மாற்றம் செய்வதை விட, நாமே கண்டுபிடித்து நம் தாய்மொழி பெயரை வைப்பதுதான் சிறப்பு. அதைத்தான் மேடம் மேரி க்யூரி போதித்திருக்கிறார். செய்வோம்; நம் தாய் மொழிக்கு சிறப்பு சேர்ப்போம்!