
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவராகத்தான் ஆசிரியர்கள் இருப்பார்கள்.
சில ஆசிரியர்கள் பாடத்தையும், வகுப்பறையையும் தாண்டி மாணவர்களுடைய தனிமனித வாழ்க்கையில் அக்கறை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இம்மாதிரி ஆசிரியர்களால் பலரின் வாழ்க்கையே பின்னாளில் மாறி இருக்கும். வாழ்வில் பல வெற்றிகளை பெற, உயர் நிலையை அடைய பலருக்கும் பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் தந்த உந்துதல் தான் காரணமாக இருந்திருக்கும்.
அதனால்தான் நம் முன்னோர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அப்பா அம்மாவிற்கு பிறகு ஆசிரியரை தெய்வத்துக்கு முன்னால் வைத்து வரிசைப்படுத்தி உள்ளார்கள்.
காலம் எவ்வளவுதான் மாறினாலும் கற்பித்தல் முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்பம் காரணமாக ஆன்லைனிலேயே பாடம் படிக்கலாம், பாட்டு படிக்கலாம் என்று பல வசதிகள் ஏற்பட்டாலும் ஏதோ ஒரு முறையில் கற்பித்தல் முறை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
படிப்பு, பாடம், இசை, நடனம், கை வேலைகள், மேற்படிப்பு என்று எதைக் கற்க வேண்டுமானாலும் அதற்கு ஒரு ஆசிரியர் அவசியம் என்கிற நிலை மட்டும் இன்னும் மாறவில்லை. வெறும் பாட த்திட்டங்களை மட்டும் நடத்தும் ஆசிரியர்களாக இல்லாமல் மாணவர்களின் எதிர்காலத்தை பற்றியும் சிந்தித்து அதற்கான திட்டமிட்டு வடிவமைக்கும் ஆசிரியர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
பிள்ளைகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்த இந்த ஆசிரியர்கள் தவறுவதே இல்லை. மாணவர்களின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அதற்காக பாடுபடும் ஆசிரியர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆசிரியர்களின் முயற்சியால் எவ்வளவோ மாணவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. பொருளாதார நிலையிலும் வளர்ந்திருக்கிறார்கள். மாணவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டுபிடித்து அவர்களை அந்த வழியில் நடத்திச் சென்று வாழ்வில் உயர்வு பெற வைப்பவர்கள்தான் ஆசிரியர்கள்.
சில மாணவர்களிடம் கடுமை காட்டும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்குக் காரணம் அந்த மாணவனை நல்வழிப்படுத்தி நேர் வழியில் அழைத்துச்சென்று வாழ்வில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக காட்டும் கடுமையாகத்தான் இருக்குமே தவிர அதில் வன்மம் இருக்காது.
ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சிக்கு பின்பும் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வாழ்க்கை தருகிறார்கள். ஆனால் ஆசிரியர்களோ பிள்ளைகளுக்கு வாழும் கலையை கற்றுத்தருகிறார்கள்.
சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் உதவுகிறார்கள். அவர்களிடம் இருக்கும் சிறந்த திறமைகளை வெளிக் கொணர உதவுகிறார்கள்.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியமான பங்களிப்பை தரும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
தனி நபர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, சமூகத்தின் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் சிறந்த பங்காற்றும் ஆசிரியர்களை கௌரவித்து போற்றுவது அவசியம். அறிவையும், ஞானத்தையும் பரப்பும் வகையில் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுப்பவர்கள் ஆசிரியர்கள்.
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வெற்றிபெற சரியான வழிகாட்டுதல் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நன்கு படித்த குடிமக்கள் இருக்க வேண்டியது அவசியம். அதனை ஆசிரியர்கள் சரிவர செய்வதால்தான் நாடு உன்னதமான நிலையை அடைகிறது.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை போதிப்பதோடு மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடிமக்களாக பிள்ளைகளை உருவாக்கவும் செய்கிறார்கள். அதனால்தான் இவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுபவர்களாகவும், அதிக பாராட்டிற்கும், அங்கீகாரத்திற்கும் தகுதியானவர்களாகவும் இருக்கிறார்கள்.