வாழ்க்கையில் உயரவேண்டும் என்றால் வலிகளைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி நமக்குத் தேவை அப்படி இருந்தால் மட்டுமே நாம் வாழ்க்கையில் மேன்மேலும் உயரமுடியும்.
வலிகளை ஏற்றுக்கொள்ளாத வரையில் வாழ்க்கையில் வளங்களைக் காணமுடியாது. பெரும்பாலான வெற்றியாளர்களின் சாதனைகளை உரம் போட்டு வளர்ப்பதே அவர்களின் பெருந் தோல்விகளும், பொறுக்க முடியாத வலிகளும்தான்.
வலி வந்தபோதுதான் நாம் இந்த பூமிக்கு வருகிறோம். வலியோடுதான் நம் தாய் நம்மைப் பிரசவிக்கிறாள். வலிகளால் நிரப்பப்பட்டதுதான் இந்த வாழ்க்கை.
உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வலிகளைப் பொறுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும்போதுதான் அழகான உடற்கட்டைப் பெறமுடிகிறது.
இப்படித்தான் இந்த வாழ்க்கையிலும் வலிகளை ஏற்றுக் கொள்ளும்போதுதான் வளமான வாழ்க்கை வாழ முடியும்.
'வலியை அனுபவியுங்கள்'; அதை பரிபூரணமாக உணருங்கள், ஒரு கட்டத்திற்குப் பின், அந்த வலியிலிருந்து நீங்கள் விலகி நின்று கவனிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
'வலி குறைந்த பின், அதற்கான தீர்வு எளிதாகிவிடும்', வலி என்பது ஒரு துன்பம். அந்த துன்பம் ஓர் எச்சரிக்கை; அது ஒரு வழிக்காட்டியும் கூட. வலி நம்மை நம் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வாழத் தூண்டி, அதன் மூலம் சுய மேம்பாட்டிற்கு வழிகாட்டும்...
நமக்கு ஏற்படும் அனைத்து வலிகளையும், நமக்கான மாற்றத்திற்கானதாக மாற்றிக் கொள்ளும் சூத்திரம்
தெரிந்தால் போதும்; அது உடல் வலியானாலும், மன வலியானாலும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
வலிகளை வெற்றிகளாக்கும் நுட்பங்களைக் கற்றுக் கொள்வோம். ஒவ்வொரு வலியிலிருந்தும் எதையாவது ஒன்றைக் கற்றுக் கொள்வோம்.
அனைத்து வலிகளும் நம்மைப் பக்குவப்படுத்தவே என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் குறிக்கோளை எட்டிட வேண்டுமானால் சிறிய வலிகளைப் பொறுத்துத்தான் ஆகவேண்டும். வலிகளையும், இடையுறுகளையும் தாண்டிச் செல்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றார்கள்.
வாழ்க்கையில் நம் வலிகளை உரமாக எடுத்துக் கொண்டு நாம் வளர்ச்சியின் பாதையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்போம். எதுவுமே சுலபமாக கிடைக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் உங்கள் வளர்ச்சி உங்கள் கண்முன்னே தெரியும்.