
படித்து முடித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு ஒரு புத்திமதி சொல்வார்கள். 'வாய்ப்பு கிடைக்கும்வரை காத்திருக்காதே வாய்ப்புகளை தேடிச்செல்' என்று. அதேபோல் 'வாய்ப்பு என்பது தேடிப்போவதை விட நம்மால் உருவாக்கப்படுபவையாக இருந்தால் வெற்றியும் நிச்சயம்' என்பார்கள். இப்படி என்றால் அப்படி, அப்படி என்றால் இப்படி என இருவேறு கருத்துகளை அள்ளி வீசுவார்கள்.
சிலருக்கு அவர்கள் நினைத்தது போலவே வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு அவர்களின் திறமையும் ஒரு காரணமாக இருக்கும். வேறு சிலருக்கோ திறமைகள் இருந்தும் வாய்ப்புகள் வாயில்வரை வந்து நழுவி சென்றதும் உண்டு. செல்வதும் உண்டு.
அப்படிப்பட்டவர்கள் வாய்ப்புகளைத் தவரவிடும்போது மன அழுத்தத்துக்கு ஆளாகி தனக்கு மட்டும் ஏன் இப்படி என்று நொந்து கொண்டால் அவர்களுக்கு எதிரில் இருக்கும் வேறு ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு கிட்டாமலே போய்விடும்.
சமீபத்தில் படித்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது .
ஒரு ஐடி நிறுவனத்தில் தூய்மைப் பணிக்கு வறுமையான குடும்பம் சார்ந்த பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஒரு இளைஞன் விண்ணப்பித்திருந்தான். அந்த நிறுவனத்தின் ஹெச் ஆர் அவனிடம் ஒரு சின்ன இண்டர்வியூ செய்தார்.
என்னப்பா, தினமும் ஒழுங்கா வேலைக்கு வருவியா? முன் அனுபவம் இருக்கா?
அதெல்லாம் சரியா வந்துடுவேன் சார். முன் அனுபவம் ஏதும் இல்லை. ஆனால் நன்றாக வேலை பார்ப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கு என்கிறான் அவன்.
ஹெச் ஆர்க்கு அவன் பதில் பிடித்துப்போக தகவல் பரிமாற்றத்திற்கு அவனுடைய மெயில் முகவரியை கேட்கிறார்.
'ஈ மெயிலா? எனக்கு இண்டர்நெட் சம்பந்தப்பட்ட எதுவும் தெரியாது. அதற்கு அவசியமும் வந்ததில்லை' என்றான் அந்த இளைஞன்.
கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? இங்கு எல்லாமே நெட் வழியேதான் என்று வேலை இல்லை எனத் திருப்பி அனுப்பப்பட்டான்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட அவனுக்கோ தான் எப்படியாவது சம்பாதித்துக் காட்டவேண்டும் என்ற ஆர்வம்.
கையில் அம்மா தந்த 1000 ரூபாய் இருந்தது.
அதைக் கொண்டு மண்டியில் தேங்காய் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். கணிசமான லாபம் கிடைத்தது. லாபத்தில் மீண்டும் தேங்காய் மீண்டும் விற்பனை.
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய தேங்காய் வியாபாரி ஆகிவிட்டான்.
இப்போது அந்த வியாபாரியான இளைஞர் சொல்கிறார். "நல்லவேளை எனக்கு மெயில் இல்லை. இருந்திருந்தால் இன்னும் அந்தக் கம்பெனியில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பேன்."
இது கதையோ அல்லது நிஜமோ, இது போன்ற சம்பவங்கள் நம் வாழ்வில் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. மளிகை கடை வைத்து முதலாளியாக உட்கார்ந்த இடத்தில் ஐ டி ஃபீல்டை விட அதிகம் சம்பாதிப்பவர்களும் உண்டு.
வாய்ப்புகள் விலகும்போது அதையே நினைத்து வருந்தாமல் எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி வேறு வழியில் நமது திறமைகளை குவித்தால் நிச்சயம் விலகின வாய்ப்பை விட அதிக வெற்றியை நாம் பெறலாம்.