
பெற்றோர் அனைவரும் ஆசைப்படும் ஒரு விஷயம் தங்கள் குழந்தைகள் படிப்பில் எப்போதும் முதல் மாணவ மாணவியராக இருக்க வேண்டும் என்பதே. அதற்காக அவர்கள் எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்யத் தயாராய் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் தியாகம் எதையும் செய்யத் தேவையில்லை. கீழ்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே அவர்களின் மனதில் படிப்பில் ஆர்வம் ஏற்பட்டு சிறப்பாகப் படிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
1.பெற்றோர் செய்ய வேண்டிய முதல் விஷயம் உங்கள் பிள்ளைகளிடம் எப்போது பார்த்தாலும் படி படி என்று நச்சரிக்காதீர்கள். இது அவர்களின் மனதில் படிப்பைப் பற்றிய ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். மேலும் உடன் படிக்கும் மாணவர்களுடன் ஒருபோதும் ஒப்பிடாதீர்கள்.
2.சரியாக படிக்கவில்லை என்பதற்காக அடிக்காதீர்கள். அடிப்பதன் மூலம் அவர்களை படிக்க வைக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். அன்பான அணுகுமுறை நல்ல பலனைத் தரும்.
3.மதிப்பெண் பட்டியலைக் கொண்டு வந்து கொடுத்தால் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் வாங்கியிருந்தாலும் திட்டாதீர்கள். அடுத்தமுறை முயற்சி செய்து இன்னும் நல்ல மதிப்பெண்களை வாங்க முயற்சிக்க வேண்டும். உன்னால் முடியும் என்று அன்பாகச் சொல்லுங்கள். அவர்கள் புரிந்து கொள்ளுவார்கள்.
4.பெற்றோராகிய நீங்கள் உங்கள் ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியில் மூழ்கிவிடாமல் உங்களுக்குப் பிடித்தமான இலக்கியங்கள் முன்னேற்ற நூல்கள் முதலானவற்றை படியுங்கள். எந்த ஒரு குழந்தையும் தன் அப்பாவையே முதல் ஹீரோவாக நினைக்கும். அப்பா படிக்கிறாரென்றால் தானும் படிக்கவேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனதில் இயல்பாகவே தோன்றிவிடும்.
5.விடுமுறை தினங்களில் உங்கள் பகுதியில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள், உயிரியல் பூங்கா, கோட்டைகள், ஏரிகள் முதலான இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்த சுவாரசியமான தகவல்களை அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
6.வாரத்திற்கு ஒருமுறை நூலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளை உறுப்பினராக்கி அவர்களுக்குப் பிடித்தமான நூல்களை வீட்டிற்கு எடுத்து வந்து படிக்க ஊக்கப்படுத்துங்கள். சிறுவயதில் ஏற்படும் வாசிப்பு வழக்கம் அவர்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும். சாதனையாளர்களைப் பற்றி படித்துப் பாருங்கள். அவர்களில் பெரும்பாலோர் மிகுந்த வாசிப்பு வழக்கம் உடையவர்களாக இருந்திருப்பார்கள்.
7.விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர் முதலான முக்கிய பிரமுகர்கள் பங்கு பெறும் கூட்டங்களுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். அவர்களுக்கு அங்கு தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் நேரில் காணும் உங்கள் பிள்ளைகள் வருங்காலத்தில் அவர்களைப்போல தாமும் ஆக வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்.
8.நன்றாகப் படித்து மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் முதலான உயர் பதவிகளில் அமர்ந்தால் உங்களால் மக்களுக்கு சிறப்பான முறையில் உதவிகளைச் செய்ய முடியும் என்பதை அவர்களின் மனதில் விதைத்துக் கொண்டே இருங்கள்.
9.குறிப்பாக அறிவுக்கண்களைத் திறக்கும் ஆசிரியர்களை வாழ்நாள் முழுவதும் மிகவும் மதித்து நடக்க வேண்டும் என்பதை அவ்வப்போது எடுத்துக் கூறுங்கள். ஆசிரியர்களை வழியில் எங்கே பார்த்தாலும் வணக்கம் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளின் ஆசிரியர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லுங்கள். இதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகள் தாமாகவே தங்கள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள்.
10.புத்தக வெளியீட்டு விழா, இசை நிகழ்ச்சிகள், நாட்டுப்புறக் கலைகள், நடன நிகழ்ச்சிகள் முதலானவற்றிக்கு அழைத்துச் செல்லுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆர்வம் ஏற்படும். அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள அது தொடர்பான புத்தகங்களையோ இணையத்தையோடு நாடுவார்கள்.
மேற்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள். நிச்சயம் ஒரே ஆண்டில் நல்ல பலனை நீங்கள் காண முடியும்.