
நாம் சிறுவர்களாக இருந்தபொழுது ஆற்றுக்குக் குளிக்கச் சென்றால் புதை மணலில் கால் வைத்து விடாதே பார்த்து போ என்று கூறுவார்கள்.
அதேபோல் தோட்டத்தில் விளைந்திருக்கும் காய்கறி, கனிகள், பூ பறிக்க சென்றால் முட்செடி நிறைந்ததாக இருந்தால் அவற்றை கவனமாக பறித்துவா. கை, கால்களில் முட்கள் குத்திக் கொள்ளும்படி பறிக்காதே என்று கூறுவார்கள்.
அதேபோல் இரவில் தனியாக நடக்காதே. எங்குச் சென்றாலும் துணையுடன் செல் என்பார்கள். இவை எல்லாம் எதைக் குறிக்கிறது என்றால் பாதுகாப்பு நடவடிக்கைகளைத்தான். அவர்கள் ஒவ்வொன்றையும் பாதுகாப்பு பாதுகாப்பு என்று கூறுவது இல்லை. அவர்கள் கூறும் வார்த்தையிலிருந்து இதெல்லாம் பாதுகாப்புக்காக கூறுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் ஆழமாக சிந்தித்துப் பார்த்தோமானால் உனக்கு நீதான் பாதுகாப்பு. ஆதலால் நீ செய்யும் எந்த செயலையும் கவனமாகசெய். அதுதான் உனக்கு பாதுகாப்பை தரும் என்பதை அறிவுறுத்துவதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். இதற்கு இந்தக் குட்டிக்கதை சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.
புறா ஒன்று கூண்டில் அடைபட்டு கிடந்தது. புறாவின் கூண்டின் அருகே கிளி ஒன்று வந்தது. புறாவே நான் உன்னை பார்க்கின்ற போதெல்லாம் நீ கூண்டுக்குள்ளேயே அடைபட்டு கிடக்கின்றாய். கூண்டை விட்டு நீ எப்போதுதான் வருவாய் என்று கேட்டது கிளி.
கிளியே நான் பிறந்தபோதிலிருந்தே இந்த கூண்டில்தான் வளர்க்கப்பட்டேன். அதனைப் போன்று இப்போது வளர்ந்த பின்பும் இந்த கூண்டில் உள்ளேயே இருக்கிறேன் என்றது புறா.
புறாவே நீ உலக மகா கோழைதான். என்னைப் பார். நான் எவ்வளவு சுதந்திரமாக இங்கு வாழ்கிறேன். எனக்கு சுதந்திரமே பாதுகாப்பு. உனக்கு இந்த கூண்டே பாதுகாப்பு என்று கூறியவாறு ஏளனத்துடன் கி..கி...கி என்று கத்தியது.
கிளியின் சத்தத்தை கேட்ட பூனை ஒன்று அங்கு வந்தது. ஒரே பாய்ச்சலாக கிளியின் மீது பாய்ந்து அதனைப் பிடித்துக் கொண்டது.
சுதந்திரமே எனக்குப் பாதுகாப்பு என்று புறாவை ஏளனப்படுத்திய கிளி பூனையின் பிடியில் சிக்கிக் கொண்டது.
அதனால் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக சென்று வருவோம். எப்போதுமே நமக்கு நாம்தான் பாதுகாப்பு.