
ஒரு சிற்பி கருங்கல்லில் சிலையைப் பார்க்கிறான். முதலில் கற்பனையில்தான் பார்க்கிறான். பிறகு அந்தக் கல்லில் அதன் அரிய கற்பனைக்குத் தேவையில்லாதவற்றை அவன் செதுக்கி அப்புறப்படுத்தும்போது அவன் கற்பனையில் பார்த்த சிலை அவனுக்குக் கிடைத்துவிடுகிறது.
நீங்கள் ரசிக்கும் சிற்பங்களெல்லாம் இன்னொருவர் ரசனையின் விளைவுகள் என்பதை மறந்துவிடக்கூடாது. படைப்பும் ரசனைதான்; வாழ்க்கையும் ரசனைதான்.
ரசிக்கத் தெரியாததால் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவன் தோற்றத்திலேயே கடுகடுப்பை வெளிப்படுத்துகிறான். அவனால் மனம்விட்டு சிரிக்க முடிவதில்லை. அவனைப் பொறுத்தவரையில் சிரிப்பது கூட ஆடம்பர விஷயம்.
நீங்கள் சிரித்து பேசினால் குழந்தை உங்களிடம் ஓடி வருகிறது. மனிதர்களோடு நீங்கள் சிரித்துப்பழகினால் அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். சிரிப்பு என்பது ஒரு வசீகர சக்தி.
காந்தியடிகளுக்கு மோகனதாஸ் என பெயர் இருந்தாலும் அவருடைய மோகனப் புன்னகை மிகவும் பிரசித்தமான விஷயம்.
நேருவின் தோற்றத்தை வர்ணித்த மேல்நாட்டு எழுத்தாளர் ஒருவர் கிரேக்க தேவதைபோல வசீகரப் புன்னகையுடையவராக அவர் விளங்குகிறாரெனக் குறிப்பிட்டார்.
சிலருடைய முகத்தில் விழித்தால் அன்றைக்கு சோறு கிடைக்காது என்று சொல்லுவது வழக்கம். தோற்றம் அழகாக இல்லை என்பது இதன் பொருளல்ல. அவருடைய முகத்தில் மகிழ்ச்சிப் பொலிவு இல்லையென்பதையே அவ்வாறு குறிப்பிடுகிறோம்.
பிரச்னைகளும் கவலைகளும் தவிர்க்க முடியாதவை. அதற்காக அதிலேயே மூழ்கிவிட வேண்டுமென்று அர்த்தமில்லை.
'வறுமையிலும் காதலிலும்தான் இலக்கியமே பிறக்கிறது" என்கிறார் பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் விக்டர் ஹ்யூகோ.
விக்டர் ஹ்யூகோ ஈரத்துணியை வயிற்றில் இறுக்கமாகக் கட்டிக் கொண்டு உன்னதமான நாவல்களை எழுதினார் என்பது வரலாறு.
வறுமையில் வாடிய பாரதியார் சாகா இலக்கியங்களைப் படைத்தார். அதாவது வறுமையால், ரசனை உணர்ச்சியை அவர்கள் இழக்கவில்லை . அதையே ஆயுதமாகக் கொண்டுதான் வறுமைக் கொடுமையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றார்கள்.
வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருக்கும் அனைத்து இன்பங்களும் ரசனையின் விளைவாகத் தோன்றியவைகளே.
காட்டில் மூங்கில் புதரில் முற்றிய மூங்கிலொன்று அசைந்தாடிக் கொண்டிருந்தது. வண்டு ஒன்று அந்த மூங்கிலைத் துளைத்தது. இவ்வாறு சில துளைகள் அந்த மூங்கிலில் தோன்றவும் வேகமாக வீசுகின்ற காற்று அந்தத் துளைகளில் நுழைந்து வெளியே வரும்போது இனிய ஓசை கேட்டது.
சாதாரணமாகக் காற்றடிக்கும்போது மூங்கிலில் ஒசை ஏற்படுவதுண்டென்றால் இந்தத் துவாரங்களின் வழியாக காற்று நுழைந்து வெளியேறியபோது ஏற்பட்ட ஒசை சற்று மாறுபட்டதாக இருந்தது. இயற்கையை ரசித்த மனிதன் இதைப் பார்த்தபோது சாதாரணக் காற்றிலிருந்து இனிய ஓசையை உண்டாக்க முடியுமென்பதை புரிந்துகொண்டான்.
புல்லாங்குழல் என்கின்ற இனிய கருவி அவனுக்குக் கிடைத்தது. காற்றின் சிறு அசைவையே உள்ளத்தை கிறங்கவைக்கும் சங்கீதமாக்கிட முடியுமென்றால், இயற்கையிலுள்ள ஏனைய விஷயங்களை மனித மனோதர்மத்துக்குள் கொண்டுவர முடியுமானால், அதிலிருந்து கிடைக்கும் இன்பம் எவ்வளவு எல்லையற்றதாக இருக்கும். இயற்கை தரும் இன்பத்தை அனுபவிக்கும் இதயத்தை நாம் ஏன் பெற முயலக்கூடாது?