
எந்த நிலையிலும் உற்சாகம் நம் வசம் இருந்தால் வாழ்க்கை நம் கையில். காலையில் எழுந்திருக்கும் பொழுதே ஏதோ ஒரு இனம் புரியாத உற்சாகம் நம் மனதில் ஒட்டிக்கொள்ள வேண்டும். கானல் நீருக்கு நடுவே நயாகரா வந்து விழுவதுபோல உற்சாகத்துடன் நாளை துவக்கினால் எந்த வேலையிலும் சுணக்கம் வராது. உற்சாகம் என்பது நம் உள்ளிருந்து பிறப்பது மட்டுமல்ல. பிறரது மென்மையான புன்சிரிப்பிலிருந்தும் கூட பெற்றுக்கொள்ள முடியும்.
எல்லாவற்றையும் சிறப்பாக்கும் மனிதர்களும் நம்முடன்தான் இருக்கின்றனர். நாம்தான் அவர்களின் அருமையைப் பற்றி அறிந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கிறோம்.
அருமையான நட்பு வட்டத்தில் இருக்கும்பொழுது மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். நம்மைப் புரிந்துகொள்ளும் மனிதர்களுடன் பழகும் பொழுது நம்மை அறியாமலே உற்சாகம் என்பது ஊற்றெடுத்து பெருகும். மழலை பேசும் குழந்தைகளுடன் சிரித்து பேசும்பொழுது நம்மை அறியாமலே உற்சாகம் கரை புரண்டோடும். காதுக்கு இனிமையான இசையை கேட்கும் பொழுது நம் உள்ளத்தோடு உடலும் உற்சாகம் கொள்ளும். இவை அனைத்துமே நம்மை ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும்.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகுடன் செய்யப் பழகலாம். பிறருடைய சின்ன சின்ன விஷயங்களையும் பாராட்டுங்கள். பிரதிபலன் பாராமல் பிறரின் நற்செயல்களுக்காக ஒரு நாளில் எத்தனை பேரை நம்மால் தட்டிக் கொடுத்து பாராட்ட முடியுமோ அவ்வளவு முறை பாராட்டுங்கள். அது பன்மடங்காகப் பெருகி நம்மிடமே திரும்பி வரும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பிறரை சந்தோஷப்படுத்துங்கள். அதன் மூலம் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
வாழ்வில் எதிர்ப்படும் ஒவ்வொரு தருணத்தையும் போற்றவும், இயற்கையை அதன் அதிசயங்களை கண்டு ரசிக்கவும், விரும்பும் விஷயங்களை சந்தோஷத்துடன் செய்து முடிக்கவும் செய்தால் நம்மை அறியாமலே உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள பழகவேண்டும்.
நமக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ அதை செயல்படுத்த முனைய வேண்டும். வாழ்க்கையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் தேவையற்ற எண்ணங்களையும், எதிர்காலம் குறித்த பயங்களையும் தூக்கி எறிந்து விட்டு இன்றைய நாளில் எப்படி உற்சாகமாக இருக்கலாம் என்று சிந்தித்து செயல்பட்டாலே போதும்.
உற்சாகம் என்பது நாம் விரும்புகின்ற செயல்களில் ஈடுபடும் பொழுதோ, நமக்கு முக்கியத்துவம் இருப்பதாக எண்ணும் பொழுதோ, நேர்மறையான அணுகு முறையை கொண்டிருக்கும் பொழுதோ உண்மையான உற்சாகத்துடன் வாழ்கிறோம் என்பதற்கான அறிகுறிகளாகும். உற்சாகத்துடன் வாழவும், உற்சாகத்துடன் பேசவும், செயல்படவும் நமக்கு நிறைய பயிற்சிகள் தேவை. முக்கியமாக எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நேர்மறையான எண்ணங்களுக்கு இடம் கொடுக்கவும்.
நமக்கு பிடிக்காத ஒரு விஷயத்தில் உற்சாகத்தை தக்க வைத்துக் கொள்வது மிகவும் கடினம். நம் ஆர்வங்களை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை நம் விருப்பங்களுடன் இணைத்து விரும்புவதை நோக்கி செயல்பட பயிற்சி செய்து சிறு சிறு விஷயங்களையும் கொண்டாடத் தொடங்கினால் உற்சாகம் பிறக்கும்.
ஒரு காரினுடைய எஞ்சினின் சக்தியுடன் நம் உற்சாகத்தை ஒப்பிடலாம். எஞ்சினுக்கு போதுமான சக்தி இல்லையென்றால் கார் ஓட்டுவது கடினமாகும். அதுபோல்தான் உற்சாகம் இருந்து குறிக்கோள் இல்லையென்றால் பயனற்றது. உற்சாகம் என்பது நம் இலக்கை அடைய உதவும் சிறந்த சக்தியாகும்.