

நீங்கள் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு, ஆறுதலை அரவணைத்துக்கொண்டு அனுபவத்தை மட்டும் பாடமாக கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், அனுபவம் என்பது, நம் ஆற்றலுக்கான சக்தி வாய்ந்த கிரியா ஊக்கி, மறந்துவிடாதீர்கள்.
எந்த இடத்திலும், எந்த நிலையிலும் மனம் உடைய வேண்டாம். இறுதி மூச்சு உள்ளவரை, வாழ்க்கையில் எல்லாம் முடிந்துவிட்டது என்று ஒன்றும் இல்லை. மாறிவரும் காலமும், வளர்ந்து வரும் அறிவியல் மாற்றங்களும், நமக்கு பல நல்ல எளிமையான அனுபவங்களை, வழிமுறைகளை பின்பற்ற ஏதுவாக உள்ளது என்பது நிதர்சனமான உண்மை என்பதை மறந்துவிடாதீர்கள்,
மெழுகுவர்த்தி எரியும்போது, இருளை அகற்றுகிறது. இருள் அகலும் போது, வெளிச்சம் வெளிப்படுகிறது. அதுபோல தான் வாழ்க்கையும். உங்கள் மனதில் சாதிக்கும் சக்தி, கொழுந்து விட்டு எரியும் போது, அவநம்பிக்கை அகன்று, நம்பிக்கை வேட்கை நாளங்கள் வலுப்பெற்று, ஆதிக்க வெளிச்சம் போடுகிறது.
உள்ளுக்குள் ஏற்படும் தயக்கம், உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தைக் கூட முடக்கிவிடும், மறந்து விடாதீர்கள். அதனால் தயக்கம் என்னும் முடக்குவாத எண்ணங்களை களைந்துவிட்டு, முன்னேற்றத்திற்கு காரணமாக விளங்கும் தீர்க்கமான பார்வையில் கவனம் செலுத்தி, முன்னேறும் சிந்தனையை சிந்தையில் கடத்தி, வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள்.
வாழ்க்கையில் முயற்சி என்பது தூண்டுகோல். அனுபவம் என்பது ஊன்றுகோல் அதற்குள் அயர்ச்சி என்னும் களவு கோல் தவிர்த்து, வெற்றிக்கு களமாடுங்கள். தோல்வி தோள் ஏறினால், தயங்கிக் கொண்டே இருக்காதீர்கள். அனுபவம் சொல்லும் பாடத்தை நினைவில் நிறுத்தி, அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்று, முயன்று பாருங்கள். முயன்றால் எதுவும் முடியும், முடியாது என்று எதுவும் இல்லை உணருங்கள். முயற்சியில் மனஉறுதி இருந்தால், வெற்றி உங்கள் கைகளில்.
வாழ்க்கையில் சோதனை காலங்கள் வரும். அப்போது வீட்டிற்குள் முடங்கி விடாதீர்கள். எதனையும் வென்று எடுக்கும் அருமருந்து தான் அனுபவம். சோதனைகளை தாங்கி, உங்களை எழுந்து நடமாட வைக்கும் மனப்பக்குவத்தை தரும். அந்த காலத்தை கடக்க உதவும் சிறந்த நண்பன்தான் அனுபவம் என்று புரிந்து, சிந்தனையை சீர்தூக்கிப் பார்த்து, அதிலிருந்து விலகி வர முயலுங்கள், எல்லோர் வாழ்விலும் அனுபவம் ஏற்படுவது சகஜம். அது எந்த நிலையில், எந்த இடத்தில் கிடைப்பதை பொறுத்து, வாழ்வியல் சிந்தனைகள் மாறும்.
நல்ல இடத்தில் இருந்து வந்தால், வாழ்க்கையில் நல்வழி தடம் பதிக்க, நம்மோடு நிலவாக பயணிக்கும். மோசமான இடத்தில் இருந்து வந்தால், நம்மை வீழ்த்தி, வீதிக்கு வரச்செய்யும். அதற்கு தான், நல்ல மனிதர்களோடு நாம் நிற்க வேண்டும். அப்போதுதான் தெளிவான புரிதலில் நம்மை நல்ல நிலைக்கு அது இட்டுச்செல்லும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அனுபவத்தை நம் தாயாக நினைக்கும் பட்சத்தில் உச்சி முகர்ந்து, நம் வாழ்க்கையை தாலாட்டும். நண்பனாக நினைத்தால் நம் தோளோடு தோள் நிற்கும். கற்றுத்தரும் ஆசானாக நினைத்தால் கரம்பிடித்து, நல்ல மனிதனான உருவாக்கி அழகு பார்க்கும். இது அனுபவத்தின் அனுபவக் கூற்று. எனவே, அனுபவத்தால் வாழ்க்கைக்கு ஞான ஒளி ஏற்றுங்கள்!