

மற்றவர்களை மன்னிக்க முடியாததற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது நினைவாற்றல் மற்றும் அது ஏற்படுத்தும் வலி. சில சமயங்களில் மன்னிப்பதில் தார்மீகக் கடமை மற்றும் தனிப்பட்ட விருப்பங்களுக்கு இடையே ஒரு மோதல் இருக்கலாம். நடந்த தவறை நினைவில் வைத்துக்கொண்டு, அது ஏற்படுத்தும் வலியை நினைப்பது மன்னிக்கத் தடையாக இருக்கலாம்.
காயங்கள் ஏற்படுத்திய வடு மனதளவில் ஆழமாகப் பதிந்து விடும்பொழுது அதை மறப்பதோ மன்னிப்பதோ கடினமாகிவிடுகிறது. நடந்த தவறை மனம் தொடர்ந்து நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதால், அந்த எதிர்மறை எண்ணங்களை அகற்ற வழி இல்லை எனும் பொழுது மன்னிப்பது கடினமாகிறது.
மற்றவர் செய்த தவறு நம்முடைய சுயமரியாதையை பாதித்திருக்கலாம் அல்லது அவர்கள் மீது நாம் வைத்த நம்பிக்கையை பாதித்திருக்கலாம். அதனால் நம்மைத் தவறாக நடத்தியவர்களை மன்னிக்க மனம் ஒப்புவதில்லை. ஆனால் நம்முடைய மனதிற்கு அது சரியான செயல் இல்லை என்று தோன்றும் பொழுது, மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்ற தார்மீகக் கடமையுடன் மனதளவில் மிகவும் போராட வேண்டியுள்ளது.
சில சமயங்களில் நாம் பிறரை மன்னிக்கும்போது அது அவர்களின் தவறான செயல்களுக்கு நாம் சம்மதம் தெரிவிப்பதாக எண்ணிவிடுகிறோம். இதனால் நம்முடைய அகங்காரம் தூண்டப்பட்டு நாம் மன்னிப்பதை தவிர்த்து விடுகிறோம்.
மன்னிப்பு என்பது நடந்த செயலையோ, ஏற்பட்ட காயத்தையோ மறப்பது அல்ல. மாறாக அது ஒரு மனநிலை மாற்றம். அது காயத்தின் தாக்கத்திலிருந்து நம்மை விடுபட உதவுகிறது. ஆனால் எல்லோருக்கும் அந்த மன்னிக்கும் மனப்பான்மை வருவதில்லை. சிலர் இயற்கையாகவே மன்னிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆனால் வேறு சிலருக்கு அது கடினமான செயலாக இருக்கும். இது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயத்தைப் பொறுத்தது. மன்னிப்பு என்பதை நாம் எளிதாக சொல்லி விடுகிறோம். ஆனால் இதை வாழ்வாக்குவது என்பது மிகவும் கடினம்.
நாம் மற்றவரை மன்னிக்கத் தடையாக இருப்பது எது தெரியுமா? நம்முடைய நினைவுகள்தான். அதாவது அடுத்தவர் நமக்கு இழைத்த தவறுகள் நம் மனதில் நீங்காமல் நினைவாக பதிந்து விடும்பொழுது நம்மால் அடுத்தவரை மன்னிக்க முடிவதில்லை. பிறரை மன்னிப்பது தங்களை பலவீனம் ஆக்குகிறது என்று நினைக்கிறோம். ஆனால் மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வதுதான் நமக்கு நாமே செய்து கொள்ளும் நன்மையாகும். தவறை மறப்பதும், நம் நினைவுகளை வேறு நேர்மறையான விஷயங்களால் நிரப்புவதும் மனம் அமைதி பெற உதவும். அதற்கு மன்னிப்பை எவ்வாறு பயிற்சி செய்வது?
சில நேரங்களில் தவறு செய்தவர்களுக்கு அவர்களின் செயல்களின் விளைவுகள் புரியாமல் இருக்கலாம். இந்நிலையில் பச்சாதாபத்தின் மூலம் மன்னிப்பது சாத்தியமாகும். பிறரை மன்னிப்பதன் மூலம் நமக்கு நாமே சிறந்த பரிசு ஒன்றை கொடுத்துக் கொள்கிறோம். இது நம் மன அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் பெரிதும் உதவும். தேவையற்ற நினைவுகளை தவிர்த்து நம்முடைய மனதை வேறு நல்ல நேர்மறையான எண்ணங்களால் நிரப்பவேண்டும்.
மேலோட்டமாக மன்னிப்பதை விட மனப்பூர்வமாக மன்னிப்பது என்பது சிறந்தது. தவறு செய்வது என்பது மனித இயல்பு. அதை மறப்பதும் மன்னிப்பதும் சிறப்பு மன்னிக்க கற்றுக்கொள்ளும் பொழுதுதான் விட்டுக் கொடுக்க கற்றுக்கொள்கிறோம். ஒருவரை மன்னிப்பது என்பது நம்மை காயப்படுத்தியவருக்கு தரும் பரிசல்ல மாறாக நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சிறந்த பரிசாகும்!