

எந்தச் சூழ்நிலையிலும் துணிவாக முடிவெடுப்பதும், தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை அள்ளிக்குவிக்க வழிவகுக்கும். எந்த ஒரு செயலை செய்ய முற்படும்பொழுதும் அது சற்று கடினமாக இருந்தாலும் அல்லது புதிதாக தொடங்கினாலும் அதை செய்ய முற்படும்பொழுது கொஞ்சம் தயக்கம் வருவது அனைவருக்கும் உண்டு. அதை மற்றவர்களிடம் கூறினால் அவர்கள் செய்யாதே என்று எதிர்மறையாக கூறிவிடுவார்களோ என்ற பயமும் ஏற்படும்.
அதற்குப் பதிலாக நாம் செய்ய முனைந்ததை செய்து பார்த்துவிடலாமே. அதுபோல் திட்டமிட்டு செய்யும் பொழுது எதை எப்படி செய்யலாம் என்றும் அதில் தவறு நேர்ந்தால் எப்படி திருத்திக்கொள்ளலாம் என்ற வழிமுறையையும் கற்றுக்கொண்டு கையாள முடியும்.
நடக்கக் தொடங்கும் குழந்தை கீழே விழுந்து எழுவதில்லையா? வாழ்க்கையில் எத்தனையோ வருடங்களாக சமைத்து வருகிறோம். உப்பு, காரம், புளிப்பு போன்றவை ஏதாவது ஒரு நாள் சமையலில் அதிகமாகிவிடுகிறதா இல்லையா? அப்படியே அதிகமானாலும் அதை செவ்வனே சீர்படுத்தி சாப்பிடும் அளவிற்கு கொண்டு வந்து விடுகிறோம்தானே. அதுதானே வெற்றி.
பெரிய விருந்து விசேஷம் போன்ற வீட்டு விஷயங்களில் கை வைக்கும் பொழுது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்பது அவசியம். அவர்களும் நல்லதையே கூறுவார்கள். அவர்கள் அனுபவமும் நம் அனுபவத்தோடு சேர்ந்து கை கொடுக்கும் .அப்பொழுது எடுக்கும் காரியத்தில் வெற்றி பெறலாம். இது ஒரு அணுகுமுறை.
ஆனால் நாமாகவே சொந்தமாக நம் முயற்சியில் ஏதோ ஒரு கலையை கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறோம் அல்லது மற்றவர்களுக்கு ஒரு ஆலோசகராகவே பணியாற்ற விரும்புகிறோம் என்றால், வீட்டில் நிறைய முட்டுக்கட்டைகள் போடுவார்கள். அதை முன்கூட்டியே தெரிவித்து விட்டு வெற்றி பெறலாம் என்றால் சற்று கடினமே .
ஆதலால் நாம் எடுத்த காரியத்தை பலமுறை சிந்தித்து அந்த செயலை செய்ய முற்படும் பொழுது எது வந்தாலும் எதிர்கொள்வோம் என்ற மனப்பான்மையுடன் செய்ய ஆரம்பித்தோமானால் மற்றவர்களின் எதிர்மறை பேச்சுக்கு ஆளாக நேரிடாது. இதனால் நமக்குள்ளே நிறைய ஐடியாக்கள் தோன்றும்.
மன குழப்பம் இல்லாமல் இருப்பதால் வெற்றி பெறுவதும் எளிதாக முடிந்துவிடும். ஆதலால் துணிந்து திட்டமிட்டு மனதிற்குள்ளே எண்ணியதை எண்ணியாங்கு செய்து வெற்றி கிட்டிய பிறகு மற்றவர்களிடத்தில் கூறினால் அதற்கு அவர்களும் எதிர்மறையான பதிலை தர முடியாது. அப்பொழுது நாம் செய்ய முற்படும் செயல்களுக்கு தடை போட மாட்டார்கள். அப்படி பிறர் தடை போடாதவாரும் நம் செயல்கள் வெற்றியில் முடியவேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து செயலை தொடங்குவோம் ஆக. அதுதான் வெற்றிப்பாதைக்கு வழி வகுக்கும்.