

இங்கிலாந்தின் பிரதமராக வின்ஸ்டன் சர்ச்சில் இருந்தபோது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் தினந்தோறும் திட்டமிட்டு பல கேள்விகளை எழுப்பி அவருக்கு தொந்தரவு கொடுத்தனர். ஆனால் வின்ஸ்டன் சர்ச்சில் இதற்கெல்லாம் கொஞ்சமும் அசரவில்லை. தினமும் வாயில் நீண்ட சுருட்டுடன் 'ஜம்'மென்று காரிலிருந்து இறங்கிப் பாராளுமன்றத்துக்குச் சரியான நேரத்தில் வந்து கொண்டுதான் இருந்தார். இதைக்கண்ட எதிர்க்கட்சியினர் அயர்ந்து போயினர். ஒருநாள் சர்ச்சிலிடம் இத்தனை தொல்லையிலும் உங்களால் எப்படி ஆனந்தமாய் இருக்க முடிகிறது என்று வாய்விட்டுக் கேட்டேவிட்டனர்.
அதற்கு அவர், "நீங்கள் ஏதோ எனக்குத்தொல்லை கொடுப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கணையையும் எனக்கு அளிக்கும் ஏதோ ஒரு விளையாட்டு பொம்மையாகவே கருதுகிறேன். நான் அப்படியும், இப்படியுமாக உங்களுக்குச் சொல்லும் பதில் மூலம் விளையாடி மகிழ்கிறேன். எல்லாம் அவரவர் மனப்பான்மையிலிருந்து எழுவதுதான்" என்று விளக்கம் கொடுத்தார்.
எதையும் ஏற்றுக்கொள்ளத் துணிவுடன் இருந்தால், உங்கள் துணிவைக் கண்டதும் துன்பம் ஓடிப்போய் ஆனந்தமே எதிரில் வந்து நிற்கும். மற்றும் உங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை அமைதியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருந்தால், அது உங்கள் மகிழ்ச்சிக்கும் ஆனந்தத்திற்கும் ஆதாரமாக இருக்கும்.
இந்த நிலைக்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொண்டால், அதன்பிறகு உங்களைத் துன்பம் அணுகாது; நீங்கள் வருத்தம் கொள்ள மாட்டீர்கள். 'எதையும் தாங்கும் இதயம்' என்கிறார்களே அது இதுதான்.
நீங்கள் எண்ணித் துணிந்தபின் உலகமே உங்களை வாளெடுத்து எதிர்த்து நின்றாலும் கொண்ட முயற்சியைக் கை விடாதீர்கள். 'கேவலமான முறையில் பிறரை உலகத்தைத் திருப்தி செய்ய நீங்கள் ஒரு கணமும் எண்ணாதீர்கள். 'பயத்திற்கு அணுவளவும் இடம் கொடாதீர்கள்' என்றெல்லாம் எழுச்சியுறப்பேசுகிறார் ஆன்மிகத் துறவி விவேகானந்தர்.
உலகில் நீங்கள் ஆனந்தமாக வாழவேண்டுமானால் உங்களுக்கு எதற்கும் பின்வாங்காத தைரியம் வேண்டும். தைரியவானுக்குத் தோல்வியே கிடையாது. தோல்வியே இல்லையென்றால் நீங்கள் மகிழ்ச்சியோடு வாழவேண்டியதுதானே.
உலகில் மாபெரும் காரியங்கள் எவையும் தைரியமின்றித் தோன் யிருக்க முடியாது. பெரும் அரசியல் புரட்சிகள் உலகில் ஏற்பட்டு வெற்றியடைந்திருக்க முடியாது. எந்தப் பிரச்னையிலும் உங்களுக்கு சிறிதளவேனும் பயம் ஏற்பட்டால் உடனே புறமுதுகு காட்டி ஓடக்கூடாது. அவ்விதம் செய்தால் அபாயம் இன்னும் அதிகமாகிவிடும்.
அதற்குப் பதிலாக எதிர்த்து நின்றால் அந்த அபாயம் அவசியம் குறைந்து விடும். பயம்-அச்சம் என்பதே சலன புத்தியால் ஏற்படுவதே. சந்தர்ப்பம் எப்பொழுது வரும் என்று நீங்கள் எதிர்நோக்கிக் கவனமாயிருக்க வேண்டும். வந்த சந்தர்ப்பங்களைப் பணிவுடனும் யுக்தியுடனும் கைப்பற்ற வேண்டும்.
அவற்றைத் தீவிரத்துடனும் முழு முயற்சியுடனும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உங்களுடைய சாதனைக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு ஆனந்த வாழ்வு கிடைக்கும். எப்பொழுதும் எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றி பெறுவதிலே ஒரு தனிப்பெருமையும் உண்மையான மகிழ்ச்சியும் உண்டு.