

பெரும்பாலான மக்கள் இவ்வுலகில் பிறவி எடுத்ததே பணம் ஈட்டுவதற்காகத்தான் என்ற எண்ணத்துடனே வலம் வருகிறார்கள். பணம் மட்டுமே அவர்களின் இதயத்துடிப்பாக இருக்கிறது.
இவ்வுலகில் வாழ்வதற்காகவே பணத்தை ஈட்டவேண்டும் என்று எண்ணுவதுடன் பணக்காரன் என்ற பெயரை மிகவும் கௌரவமாக எண்ணுகின்றனர். அதனால் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைதியாக வாழ்ந்து கழிப்பதற்கு பதிலாக பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்து இறந்தும் விடுகின்றனர்.
அவர்களுடைய மனம் குறுகிய வட்டத்தில் இருப்பதனால் தங்களுடைய குழந்தைகளுக்கும் கல்வி அறிவை கொடுக்க முன் வருவதில்லை. இதை யாராவது கேட்டால், "நானெல்லாம் படித்தா இவ்வளவு பணம் சம்பாதித்தேன்" என்று எதிர் கேள்வி கேட்பார்.
கல்வி கற்பது வேறு; பணத்தை ஈட்டுவது வேறு என்பதையே அவர்கள் அறியவில்லை. கல்வியும், செல்வமும் மனிதனுக்கு இரண்டு கண்கள் போன்றவை .ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றால் மனிதன் சோபிக்க மாட்டான். ஒருவனுக்கு கல்வி அறிவு மட்டும் இருந்தால் போதாது. அவன் பணமும் சம்பாதிக்க தெரிந்திருக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய அறிஞனாக இருந்தாலும் பணம் இல்லை என்றால் அவனை மக்கள் புறக்கணிக்கத்தான் செய்வார்கள். பாரதி என்ற சூரியனை கூட அவனுடைய வறுமை என்னும் மேகங்கள் மறைத்துக்கொண்டிருந்தன.
மரணம் என்ற புயல் காற்று அந்த மேகங்களை விரட்டி அடித்த பிறகு தான், அவனுடைய ஒளி வெள்ளத்தை மக்களால் தரிசிக்க முடிந்தது. ஆகவேதான் ஒரு அறிஞன் ,"வருவாய் இல்லாத படிப்பு நொண்டித் தன்மையுள்ளது. படிப்பில்லாத வருவாய் குருட்டு தன்மையுள்ளது என்று கூறினான்.
பணக்காரன் போன்று பாவனை செய்பவன் ஒருபோதும் பணக்காரன் ஆகமாட்டான் .இன்று உலகில் எங்கு பார்த்தாலும் பணக்காரன் போல பாவனை செய்யவே பெரும்பாலான மக்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். மற்றும் சிலர் பிறரை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மற்றும் சிலர் மக்கள் தம்மைப் பணக்காரன் என்று கருதி மதிக்க வேண்டுமென்று இவ்வாறு போலி வேஷம் போடுகின்றனர்.
குடம் ஓட்டையாக இருந்தால் அதில் எவ்வளவு தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டினாலும் அது நிரம்பாது. அற்ப வருவாய் உள்ளவன், ஆடம்பரம் செய்வது பனிக்கட்டியை சஹாரா பாலை வனத்திற்குக் கொண்டு செல்வதைப் போன்றது.
பிரெஞ்சுப் பழமொழி ஒன்று கூறுகிறது, 'தம்முடைய தகுதிக்கு அதிகமாகச் செலவழிப்பவர்கள் தம்முடைய கழுத்தைச் சுற்றிக் கயிற்றை முறுக்கிக் கொள்கிறார்கள்' என்று.
அற்ப வருவாயைக் கொண்டு சிலர் செய்யும் ஆடம்பரம் உலகத்திற்கே பொறுக்காதுபோல் இருக்கிறது.
பீட்ரஸ் கூறுவது போன்று, 'பணக்காரர்களைக் காப்பி' அடிக்கிற அந்த ஏழைகள் அழிந்தொழிகின்றார்கள். இவ்வாறு நான் கூறுவதி ஃலிருந்து பணக்காரன், பிச்சைக்காரன் போன்று வேஷம் தரித்துக் கொண்டு இருக்க வேண்டுமென்பது பொருள் அன்று; தகுதிக்குத் தக்கபடி வாழ வேண்டுமென்பதுதான் பொருள் அப்படி வாழ்வதில்தான் பெரும் பேறும், பேரின்பமும் இருக்கிறது.
எனவே பணத்திற்காக நாம் அடிமையாகாமல், நமக்குப் பணம் அடிமையாகி, ஆக்கப்பணிகள் செய்யத் தூண்டுவதே சிறப்பானது.
