

சில நபர்கள் எதற்கெடுத்தாலும் அதிகம் பயப்படுவார்கள். இன்னும் சிலர் எந்த காரியமாக இருந்தாலும் அதை நம்மால் சரியாகச் செய்ய முடியுமா என்றெண்ணி செய்யத் தயங்குவார்கள். நீங்கள் அத்தகைய நபராக இருந்தால், பயத்தை கைவிட்டு எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்யத் தொடங்குங்கள். எதற்கும் பயப்படாமல், பிறரை விட உங்களால் எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள்.
நாம் எந்த ஒரு செயலை செய்யும்போதும் அதில் உள்ள நிறை குறைகளை சற்று ஆராய்ந்து திட்டமிடுவது சிறந்தது. அவ்வாறு நாம் செய்யும் செயலில் தெளிவு இருப்பின் எவ்வித பயமும் இருக்காது. ஒருவேளை தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது? என்று கேட்டால், எதையுமே செய்யாமல் தோல்வியைக் கண்டு அஞ்சுவதற்கு, ஒரு விஷயத்தை செய்து பார்த்து ஆகச்சிறந்த அனுபவங்களைப் பெற்று தோல்வி அடைவது எவ்வளவோ மேல்.
பயப்படுவதால் உங்களால் எதையுமே சாதிக்க முடியாது என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் செயல்களைத் துணிந்து செய்தால், நிச்சயம் வெற்றி உங்கள் வசம்தான். எதையுமே முயற்சிக்காமல் வாழ்க்கை நீங்கள் நினைத்தபடி சிறப்பாக மாறாது. எதுவாக இருந்தாலும் நீங்கள் அதில் தைரியமாக இறங்கி தன்னம்பிக்கையுடன் வேலை செய்தால், எதையும் சாதிக்கலாம். அதாவது நீங்கள் நினைத்தால், உங்களுக்கு விருப்பம் இருந்தால் அகிலத்தையும் வெல்லலாம்.
ஒரு மனிதனிடம் இருக்கும் பயம் ஒரு கட்டத்திற்கு மேல் அவனை அழித்துவிடும். வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் தயங்கிக்கொண்டே இருப்பவர்கள் ஒருபோதும் வளரமாட்டார்கள். சரியோ தவறோ தைரியமாக ஒரு விஷயத்தில் இறங்கி ரிஸ்க் எடுப்பவர்களுக்கு வெற்றி உற்ற நண்பனாக மாறுகிறது.
எனவே, அனைத்துக்கும் பயந்துகொண்டு சிந்தனையிலேயே தோற்றுவிடாதீர்கள். முயற்சித்துப் பார்த்து தோற்றாலும் பரவாயில்லை, வாழ்க்கையில் தைரியமான முன்னெடுப்பு என்பது மிகவும் அவசியமாகும். உங்களுக்கு வெற்றி வேண்டுமானால் பயத்துக்கும் தயக்கத்திற்கும் எண்டு கார்டு போட்டுவிட்டு செயலில் இறங்குங்கள்.