

வாழ்க்கையில் நம்ம எல்லோருக்குமே ஒரு குறிக்கோள் இருக்கும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை உயிரிருந்தும் உயிர் இல்லாததற்கு சமமாகும். சரி, எல்லோராலும் அந்த குறிக்கோளை அடைய முடிகிறதா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில்.
முக்கால்வாசி பேர் ஒரு குறிக்கோளை நோக்கி காலை எடுத்து வைப்பார்கள் ஆனால் பாதியிலேயே பின்வாங்கி விடுவார்கள். ஏனென்றால், அவர்களால் முடியுமோ முடியாதோ என்ற சந்தேகம் மனதிற்குள் தோன்றும். இல்லை என்றால் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக தெரிந்துவிடும்.
ஆகவே அவர்கள் ஒரு பயணத்தை நோக்கி பாதி தூரம் சென்றுவிட்டு பின்பு பாதியிலேயே அதை விட்டு விடுவார்கள். இந்த காரணத்தினால்தான் நிறைய பேருடைய குறிக்கோள் முடியாமலேயே பாதியிலேயே நின்று விடுகிறது. ஆனால் இது தவறு. நாம் ஒன்றை நினைத்து செய்ய தொடங்கியவுடன் முடிந்த வரையில் பின் வாங்காமல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த குறிக்கோளை அடையமுடியும். சரி, அந்த குறிக்கோளை அடைய முன் வைத்த காலை பின் வைக்காமல் இருக்க என்ன வழி என்று பார்க்கலாமா…
முதலில் திட்டத்தை உங்களுக்கு ஏற்றவாறு திட்டமிடுங்கள். உங்களால் அதை செய்ய முடியுமா முடியாதா என்று ஒரு தடவைக்கு பல தடவை யோசித்துப்பாருங்கள். பிறகு அதை செயல்படுத்த தொடங்குங்கள்.
இரண்டாவதாக அந்தத் திட்டத்திற்கு என்னென்ன வேண்டும் என்பதை முதலிலேயே உட்கார்ந்து குறித்துக்கொள்ளுங்கள்.
மூன்றாவதாக எவ்வளவு நாட்களில் முடிக்கலாம் என்பதை வரையறுத்துக் கொள்ளுங்கள்.
நான்காவதாக இடையில் ஏதாவது ஒரு தடை வந்துவிட்டால் அதை எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பதையும் யோசித்து எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
ஐந்தாவதாக திட்டத்தை நிறைவேற்றுவதற்கான எல்லா முடிகளையும் சரியாக கையாளுங்கள்.
ஆறாவதாக இடையில் எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள். ஒருமுறை நிறுத்திவிட்டால் பிறகு அதை செய்வதற்கு விருப்பம் இருக்காது, மேலும் அந்தத் திட்டம் நிறைவதற்கான காலமும் பின் சென்றுவிடும்.
ஏழாவதாக, ஒரு திட்டத்தை முடிக்கும்வரை நம் உடலையும் மனதையும் கூடியவரை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும்.
கடைசியாக அந்தத் திட்டம் நிறைவேறும் வரை அதைப்பற்றி எல்லோரிடமும் பேசாதீர்கள். ஏனென்றால் நிறைய பேர் திட்டம் வெற்றி பெறாமல் இருப்பதற்கு இதுதான் மூல காரணம். எல்லோரிடமும் நான் இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று சொல்லும்போது அவர்கள் உங்களுக்கு சில ஐடியாக்களை கொடுப்பார்கள்.
நீங்கள் ஒரு ஐடியா வைத்திருப்பீர்கள், அதை விட்டுவிட்டு அவர்கள் கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செய்யும்போது கண்டிப்பாக நம்மை அறியாமல் தவறுகள் நிறைய ஏற்பட்டு நம் திட்டம் முடங்கி போவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. ஆகவே திட்டத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லாமல் இருப்பதே நல்லது.
இந்த எட்டு குறிப்புகளை நினைவில் வைத்து உங்களின் குறிக்கோளை நோக்கி திட்டமிட்டு செயல்படுங்கள். முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி அடையுங்கள்!