

கற்றலுக்கு அடிப்படைத்திறன் கேட்டலே யாகும். அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேசக் கற்றுத்தரும். அப்பேச்சும் வெல்லும் சொல்லறிந்து சொல்லச்சொல்லும்.
பிறர் பேசுவதை கேட்கப் பழகிக்கொண்டால் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். நாம் பேசும்போது சுருக்கமாக பேசினால் நம் வார்த்தைகளில் ஆழ்ந்த சிந்தனை வெளிப்படும். அப்போதுதான் நாம் சொல்லும் சொல் வெல்லும் சொல்லாக இருக்கும்.
ஒருவர் உள்ளத்தில் இடம் பிடிக்க வேண்டுமானால், ஒரு தலைவரிடம் மக்களுக்காக ஏதாவது உரிமை கோர வேண்டுமானால் ரத்தின சுருக்கமாய் சொல்ல வேண்டியவைகளை தகுந்த சொற்களைப் போட்டு, அதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்பொழுது தான் நாம் கேட்கின்ற கோரிக்கைகளுக்கு பலன் கிடைக்கும்.
அந்த பலத்தினால் கோரிய உரிமையும் கிடைக்கும். அதைக் கேட்டவரும் செவ்வனே முடித்துக் கொடுக்க திட்டமிடுவார். அதையே நகைச்சுவையாக கேட்போர் கருத்தை கவரும் வண்ணம் வார்த்தைகளை பிரயோகப்படுத்தும் பொழுது அது குற்றச்சாட்டாகவே இருந்தாலும் அதனோட கனம் குறைந்து போகும். அதோடு அதை செய்து கொடுக்கவும் முன் வருவார்கள்.
ஆப்செட் பிரிண்டிங் நிறுவன திறப்புவிழா நடந்த பொழுது அங்கு நாடார் வகுப்பினருக்கு முதலமைச்சர் உதவி புரியவில்லை என்று அரசு மேல் குறை கூறப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், நான் நாடார்களுக்கு துணை செய்வதில்லை என்பது உண்மைதான் என்று சொல்லி நிறுத்திவிட்டு, என்னை நாடியவர்களுக்குத்தானே துணை செய்ய முடியும். நாடாதவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று சொல்லி சபையை திசை திருப்பி சிரிக்க வைத்து குற்றச்சாட்டோட கனத்தைக் குறைத்தாராம்.
இதுபோல் சில குழந்தைகள் கூட ஏதாவது பொம்மை வேண்டும் என்றால் பெற்றோர்களிடம் மெதுவாக பாவனை போட்டு, நான் இந்த வேலையை செய்துவிடுகிறேன். எனக்கு பொம்மை வாங்கி தருவீங்களாம்; என்று கேள்வி கேட்டுக்கொண்டே வேலை செய்து பொம்மையை நினைத்தவாறு வாங்கி வைத்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். இதைத்தான் வெல்லும் சொல் என்பது.
அது குழந்தைப் பருவத்தில் இருந்தே பழக்கமானால் எந்த இடத்திலும் நற்பெயரைப் பெறலாம். இதனால் அவர்களுக்கு அதிகமான உறவு, நட்பு வட்டம் பெருகும். அவர் சொல்லுக்கு அனைவரும் தலை வணங்குவார்கள்.
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை என்ற பாடல் வரிகள் ஆயிரம் அர்த்தங்களை தன்னுள்ளே பொதிந்து வைத்துள்ளது. சொல்ல வேண்டிய அத்தனை விஷயங்களும் அந்த சொல்லாத ஒரு சொல்லில் பதுங்கி கிடப்பதால், அந்த ஒரு சொல்லை சொல்லாமல் விடுவதால்தான் அந்த சொல்லுக்கு அப்படி ஒரு சிறப்போ என்று சிந்திக்கத் தோன்றும்.
ஆதலால் சொல்லவேண்டிய விஷயங்களை வெல்லும் சொல் அறிந்து சொல்வோம்; வெற்றி வாகை சூடுவோமாக!