

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை யாரும் பின்பற்றுவதே இல்லை. ஒவ்வொருவரும் எதோ ஒன்றிற்காக போராடிக் கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை என்பதை முதலில் உணர்வது அவசியம்.
அதேபோல் எல்லோரும் கடந்த காலத்தைப் பற்றியே பேசிக்கொண்டு, தேவை இல்லாமல் கால விரயம் செய்கிறார்கள். அப்படி செய்யும் சூழ்நிலை நினைக்கும் போது, நிகழ்காலத்தை மறந்து கோட்டை விட்டு விடுகிறார்கள். கடந்த காலம் கடந்துப் போயாச்சு. இனி உங்கள் எதிரில் இருப்பது எதிர்காலம் உணருங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு நூலகம் போன்றது. அதில் ஒவ்வொரு புத்தகமும், ஒவ்வொரு புத்தகத்தின் பக்கமும் முக்கியமானவை என்பதை போன்று, வாழ்க்கையில் பலப் பல சாதனைகளை படைத்து, நீங்களும் வருங்காலங்களில் பல புதிய புத்தகங்களை எழுதுங்கள்.
வாழ்க்கையில் எதிர்ப்படும் சில ஏமாற்றங்கள் நம்மை தாக்கும் சக்தி கொண்டவையாக இருக்கும். ஆகவே யார் யார் உங்களோடு இருந்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் வலு சேர்ப்பார்கள் என்பதை தெரிந்துகொண்டு, தேவை இல்லாத ஆணிகளை பிடுங்கி தூர எறியுங்கள்.
எந்த நேரத்திலும் அல்லது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், உங்களை ஏற்றம் காணச் செய்தவர்களை மறந்து இழந்து விடாதீர்கள். வீழ்த்த நினைத்தவர்களை என்றுமே ஏறெடுத்தும் பார்க்காதீர்கள்.
வாழ்க்கையில் வெற்றி காணவேண்டும் என்றால், தனக்கென ஒரு குறிக்கோளை நிலை நிறுத்திக்கொண்டு செயலாற்றுகள். இந்த பரந்து விரிந்து காணும் இவ்வுலகில் ஒவ்வொரு மனிதனும் போராட வேண்டி இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
வாழ்க்கையில் போராட்டங்கள் இல்லாமல் எதுவுமே வெற்றிபெற இயலாது என்பதை போல், போராட்டம் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பு இல்லாமல் போய்விடும். நம்முடைய ஆற்றலின் திறமையும் முயற்சியும் வெளி உலகிற்கு தெரியாமல் போய்விடும்.
பூந்தோட்டத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக பல மலர்கள் பூக்கிறது. ஆனால் அந்த மலர்கள் நிலைத்து இருப்பது இல்லை. அதேபோல்தான் நம் வாழ்க்கையில் வரும் இன்பமும் துன்பமும் வருவதும் போவதும். ஆகவே இன்பம் வரும்போது ஆரவாரம் இல்லாமல் கடந்து போங்கள். துன்பம் வரும்போது, சோர்ந்து போய் விடாமல், அதனை கடந்து போக முயலுங்கள்.
வாழ்க்கையில் ஆயிரம் காரணிகள் இருக்கு வாழ்வதற்கு. உங்களுடைய பார்வை தீர்க்கமாக இருந்தால், எல்லாமே உங்கள் கண்முன்னே தெரியும். வாழ்க்கையை அழகானதாக மாற்றிக்கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது என்று உணர்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றிக்கான பாதை தெரியும்.
வாழ்க்கையில் சாதனைப் படைத்து முன்னேறும் எண்ணம் உதிக்கும் போது, வான் நட்சத்திரகளும் உங்கள் கையில், கடலுக்குள் இருக்கும் முத்துக்களும் உங்கள் கையில். இது அதீத புகழ்ச்சி அல்ல. அதீத ஆர்வத்தின் வெளிப்பாடு என்பதே உண்மை.
வாழ்க்கையில் போராடுவதற்கு நூறு காரணங்கள் இருக்கலாம். இடை இடையே தடங்கள்கள் உங்களுக்கு வாழ்க்கையில் குறுக்கிடலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு அபரிமிதமான ஆற்றல் தங்களிடம் உள்ளது என்று நினைத்து, வாழ்ந்து ஜெயித்துக் காட்டுங்கள். களை எடுத்த பயிரும், சோதனைகளை எதிர்த்து, தகர்த்து போராடும் மனமும் வீணாக போனது இல்லை.