

வாழ்க்கை என்பது கடையில் வாங்கும் பொருளே அல்ல. அது இறைவன் நமக்கு கொடுத்த வரம். பந்தம், பாசம், அன்பு, நேசம், இவையெல்லாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்ளும் மிகப்பொிய விஷயம். இறைவன் தந்த வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் இருக்கத்தான் செய்யும். இவை அனைத்தையும் கடந்துதான் நாம் பயணிக்க வேண்டும்.
நாம் கையாளும் பொருட்களை நாம் சில தேவைக்காக பயன்படுத்தும்போது கைதவறி கீழே விழுந்து, அதில் இருந்த பொருட்களும் வீணாகிப் போய்விடுமே!
அதற்காக நாம் சோா்ந்தா போய்விடுகிறாம். அதை விடுத்து அடுத்த வேலைகளில் நமது கவனத்தை சிதறவிடாமல் தொடர்வதில்லையா? அது போலத்தான் லாபமோ, நஷ்டமோ எதையும் எதிா்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வரவேண்டும். இது விஷயத்தில் நமக்கு நாமேதான் ஆசான். நமக்கு நாமே நீதிபதியல்லவா!
நாம் கடந்து செல்லும் பாதையில் கவனம் வைத்தால் அனைத்துமே சரியாகிவிடும். நாம் நடந்து செல்லும்போது முன்கால் போகும் பாதையில்தானே பின்கால் செல்கிறது. அதை விடுத்து முன்கால் ஒரு பக்கமும், பின்கால் வேறு பக்கம் பயணிக்க முடியுமா! அது எப்படி சாத்தியமாகும். அதேபோலத்தான் சில மூடநம்பிக்கைகள் தேவையல்லாத காாியங்களைச் செய்தல், அந்த நாள் சரியில்லை, இந்தநாள் சரியில்லை என தொட்டதற்கெல்லாம் நாடி பாா்த்தால் சரியாகவா வரும்.
நாம் கடந்துபோன பாதை கரடுமுரடாக இருந்தாலும் அடுத்து தொடர் பயணம் செல்லும் பாதையை சரிபாா்த்து நடப்பதில்லையா!
எது நடந்தாலும் அதை எதிா்கொள்ளும் பக்கவமே வாழ்க்கையில் வெற்றி நடை போடும் நபரிடம் இருக்கவேண்டும் அதுதான் சிறப்பானது.
ஒரு காாியத்தை முடிக்க பலரிடம் யோசனை கேட்பது தவறல்ல, ஆனால் இறுதியாக எடுக்கும் முடிவு நம்கையில்தான் உள்ளது.
அவர் சொன்னாா் நாள் சரியில்லை, இவர் சொன்னாா் நட்சத்திரம் சரியில்லை, வேறு ஒருவர் சொன்னாா் போகும் திசை சரியில்லை, மேலும் ஒருவர் சொன்னாா் திதி சரியில்லை என்று என அவரவர் சொன்னாலும் முடிவு நமதானதே. எந்த நாளும் நட்சத்திரமும் பழுதே கிடையாது. மாறாக நமது மனதுதான் பழுதாகி உள்ளது.
அந்த பழுதினை சீர்தூக்கிப்பாா்த்தால், பழுது நீக்கம் செய்துவிட்டால் வாழ்க்கை எனும் வண்டி சீராக ஓடுமே!
இதில் என்ன பிரச்னை வந்தது. மனசாட்சியோடு நாம் எடுக்கும் எந்த காரியமும் தோல்வியில் அமையாதே! விதைக்கும் விதை பழுதாய் இருந்தால் விளைச்சல் எப்படி வீட்டுக்குவரும்?
ஆக, மனதில் அழுக்கினை, பழுதினை வைத்துக்கொண்டு அடுத்தவரையோ நாள் நட்சத்திரம் அடங்கிய கிழமைகளையோ, குறை சொல்வதால் எதுவும் நிகழப்போவதில்லை. நமது முயற்சியே நமக்கான நல்ல விதை. அதை காலத்தே வாழ்க்கை எனும் நிலத்தில் விதைத்து விவேகம் எனும் நீா் ஊற்றினால் வசந்தம் எனும் விளைச்சல் பழுதில்லாமல் வீடு தேடிவருமே!
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேருமே! அதை கொடுக்கின்ற பெருமையெல்லாம் இறைவழி சாருமே!
