
வாழ்க்கை என்பது ஒரு போர்க்களம். போராட்டங்கள் அதன் அத்தியாயங்கள். போராட்டங்களின்றி கிடைக்கும் வெற்றிக்கு மதிப்பில்லை. வெற்றியோ தோல்வியோ நிற்காமல் சென்று கொண்டே இருக்க வேண்டும். ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுக்கும். அந்தப் பாடத்தை கற்க மறுத்தால் வாழ்க்கை கடினமாகும். வாழ்கின்ற ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழப் பழகவேண்டும். ஏனென்றால் எப்பொழுது எதை இழப்போம் என்பது நமக்கே தெரியாது.
போராட்டமே இல்லாத வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை. போராட்டத்தை சந்திக்காத எந்த உயிரும் வெற்றி பெற்றதும் இல்லை. போராட்டம் நம்மை வலிமையாக்குகிறது. அனைத்து வழிகளிலும் நம்மை வளர ஊக்குவிக்கிறது. போராட்டங்கள் வாழ்வில் நமக்கு நிறைய அனுபவ பாடங்களைத் தருகின்றன. கடினமான காலத்தை அதாவது வாழ்வில் கடினமான கட்டத்தை நாம் விடாமுயற்சி மற்றும் பொறுமையுடன் எதிர்கொண்டால் வாழ்க்கையில் வளம் பெறலாம். சிக்கல்களை சமாளிக்க புதிய அணுகுமுறைகளை முயற்சிக்கலாம். சமயோசிதமாக இருப்பது நம் இலக்குகளை அடைய உதவும்.
ஒரு பிரச்னையில் உழன்று போராடும்பொழுது விரக்தி அடையாமல் மாற்று யோசனைகளையும், தீர்வுகளையும் யோசிக்க முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் அதிலிருந்து வெளிவர முடியும். போராட்டமானது நமக்குள் மறைந்திருக்கும் திறன்களை வெளிக்கொணரும். சிக்கல்களை தீர்க்கும் புதிய கோணங்களை உருவாக்கும். அதனால் பிரச்னைகளை புதிய கோணத்தில் பார்க்க உதவுவதுடன் அதனை தீர்ப்பதற்கான வழியையும் கண்டுபிடிக்கும். இந்த எல்லாவிதமான ஆற்றலும் நாம் ஒரு பிரச்னையை சந்திக்கும் போதுதான் உண்டாகிறது.
போராட்டங்கள்தான் நமக்கு முன்னுரிமையை கற்பிக்கிறது. அதாவது உண்மையில் நமக்கு முக்கியமான பணி எது என்பதை உணர வைக்கிறது. பல வேலைகள் மற்றும் பொறுப்புகளை எதிர்கொள்ளும் பொழுது எல்லாமே நமக்கு முக்கியமாக தோன்றினாலும் ஒவ்வொரு வேலைக்கும் நம் அவசர கவனம் தேவைப்படுவதில்லை. எது மிகவும் அவசியமோ அதற்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக்கொடுக்கிறது. இதனால் நம்மால் வீணடிக்கும் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.
போராட்டங்களை சந்திக்கும் போதுதான் அதனை எவ்வாறு சமாளிக்கிறோம், எப்படி அதிலிருந்து விரைவாக மீளுகிறோம் என்பதை நம் ஆற்றல் தீர்மானிக்கிறது. நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் கண்காணிக்க கற்றுக்கொள்வதுடன், நம்மை நாமே புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. வாழ்க்கையில் போராட்டங்களை எதிர்கொள்ளும் போதுதான் நாம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாகிறோம். நம்முடைய தேவைகள் எது என்பதையும், அவற்றை அடைய எந்த மாதிரியான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறது.
போராட்டம் என்பது வாழ்வின் ஒரு அங்கம். அது எப்படி சிக்கலான சமயங்களில் நம்மை அதிலிருந்து வெளிவர தயார் படுத்துகிறது, வலுப்படுத்துகிறது என்பதை உணர்த்துகிறது.
போராட்டங்கள் தான் நம் தன்னம்பிக்கையை வளர்க்கும், கடினமான சவால்களை எதிர்கொள்ள பழக்கும். போராட்டங்களை எதிர்கொள்ளும்போது தான் நம் பலம் எது, பலவீனம் எது என்பதை அறிந்து கொள்ள முடியும். நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கும். வாழ்வில் எதிர் கொள்ளும் சவால்களை கடக்க உதவும் போராட்டங்கள்தான் நம் அணுகுமுறையை மாற்றும். ஒரு விஷயத்தை நாம் எப்படி பார்க்க வேண்டும், எப்படி அணுகினால் அந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்ற அணுகுமுறையையும் கற்றுத்தரும்.
போராட்டங்களை போராடி வெல்வோம்!