வாங்க நூற்றுக்கு நூறு வாங்கலாம்!

Motivation image
Motivation imageImage credit - pixabay.com
Published on

ன்றைய இளம்தலைமுறையினரிடம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் எதிர்பார்க்கும் ஒரே ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு. தேர்வுகளில் நூற்றுக்கு நூறு வாங்கும் மாணவ மாணவியரை இந்த சமுதாயம் பிரமிப்புடன் பார்க்கிறது. விருதுகள் கொடுத்து பாராட்டி மகிழ்கிறது. குறைவாக மதிப்பெண்களைப் பெறும் மாணவ மாணவியருக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்று முத்திரையிட்டு அவர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கிவிடுகிறது.

ஒரு மாணவனோ மாணவியோ தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? இந்த கேள்வியை நாம் அனைவரும் நமக்குள்ளே கேட்டுப் பார்த்து விடை தேட வேண்டிய நேரமும் அவசியமும் வந்து விட்டது. ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் மாணவச் செல்வங்களை நம்பித்தான் இருக்கிறது. நல்ல பண்புகளை இளம் வயதில் வளர்த்துக் கொண்டு வாழப்பழகும் மனிதனே பிற்காலத்தில் உலகம் போற்றும் உயர்ந்த நிலையை அடைகிறான். ஒரு மாணவன் தேர்வில் மட்டுமின்றி அனைவரையும் மதிக்கும் நல்ல குணத்திலும், பிறருக்கு உதவும் கருணை உள்ளத்திலும், எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கடைபிடித்து வாழ்வதிலும், உடல் நலத்தினை பேணிக்காப்பதிலும் நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும்.

வாழ்க்கையில் அறிவிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா அல்லது அன்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமா? வாழ்க்கையில் அன்பு நெறியை முதன்மையாகக் கடைபிடித்து வாழ்ந்த பலர் உலகம் போற்றும் உத்தமராக மக்கள் மனதில் பதிந்து போற்றப்படுகின்றனர். அன்பு நெறி மனதில் வளர்ந்தால் அறிவும் ஆற்றலும் நம்மைத் தேடி வந்தடையும்.

இதையும் படியுங்கள்:
அன்பெனும் நீர் ஊற்ற மகிழ்ச்சியும் வெற்றியும் தேடி வரும்!
Motivation image

எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை முழுமையாக நூற்றுக்கு நூறு ஈடுபடுத்திக் கொள்ளும் மனப்பக்குவத்தை மாணவ மாணவியர் வளர்த்துக் கொள்ள வேண்டும். படிக்கும்போது நூறு சதவிகித கவனம் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். விளையாடும்போது நூறு சதவிகித கவனம் விளையாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். சாப்பிடும்போது நம் கவனம் முழுக்க முழுக்க சாப்பாட்டிலேயே இருக்கும்படி பழகிக் கொள்ள வேண்டும். பல மாணவ மாணவியர் விளையாடும்போது நாளை நடக்க இருக்கும் தேர்வுகளைப் பற்றி சிந்தித்தபடியே விளையாடிக் கொண்டிருப்பார்கள். படிக்கும்போது விளையாட்டைப் பற்றி யோசித்துக் கொண்டே படிப்பார்கள். இதில் ஒரு சதவிகிதமாவது நன்மை இருக்கிறதா என்று ஐந்து நிமிடங்கள் யோசித்துப் பாருங்கள். இது மாணவ மாணவியருக்கு மட்டுமின்றி அனைவருக்குமே பொருந்தும். பலர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வீட்டைப் பற்றி சிந்திப்பவர்களாக இருக்கிறார்கள். வீட்டிற்கு வந்ததும் வேறு எதையாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த செயலே மூலகாரணமாக அமைந்து விடுகிறது.

முன்பெல்லாம் பள்ளிகளில் போதனை வகுப்பு என்றொரு வகுப்பு இருந்தது. அவ்வகுப்பில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களின் எதிர்காலத்தை செம்மையாக அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் சிறந்த கதைகள், பெரியோர்களின் வாழ்வில் நடந்த தன்னம்பிக்கையூட்டும் சம்பவங்கள், நாட்டுப்பற்றை வளர்க்கும் வீரக்கதைகள் போன்றவற்றை எடுத்துச் சொல்லி பண்பையும் நாட்டுப்பற்றையும் மாணவர்களின் மனதில் பதிய வைப்பார்கள். இதன் காரணமாகவே அக்கால மாணவர்களின் மனதில் நாட்டுப்பற்றோடு கருணையும் நிரம்பி வழிந்தது. தாய் தந்தையரை தெய்வம் போல மதித்து பாதுகாத்தார்கள்.

தற்காலத்தில் ஒரு மாணவ மாணவியர் பெறும் அதிக மதிப்பெண்கள் மட்டுமே சிறப்பான வாழ்க்கையினை நிர்ணயிக்கும் என்று பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு போதித்ததன் விளைவாக ஆடம்பர வாழ்க்கை, ஏராளமான பணம் இவை மட்டுமே வாழ்வின் ஆதாரம் என்ற கருத்து அவர்களின் மனதில் பதியத் தொடங்கி விட்டது. இதன் விளைவாக புதிய புதிய வாழ்க்கைச் சிக்கல்களும் முதியோர் இல்லங்களும் பெருகத் தொடங்கிவிட்டன.

பெரிய படிப்பு. அதிக சம்பளம். ஆடம்பரமான வாழ்க்கை. இதுவே அனைவரும் விரும்பும் மந்திரச்சொற்களாக அமைந்துவிட்டன. இன்றைய சூழலில் இது தவறில்லைதான். ஆனால் கூடவே அன்பு, கருணை, மகிழ்ச்சி இவற்றை நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக ஏற்றுக் கொண்டு வாழப் பழகுவோம். எவரொருவர் இவை அனைத்தையும் ஒரு சேரப்பெற்று வாழ்கிறாரோ அவரே வாழ்க்கையில் நூற்றுக்கு நூறு பெற்ற சிறந்த மனிதனாகப் போற்றி மதிக்கப்படுவான்.

படிப்பு, அன்பு, கருணை, நேர்மை, சக மனிதர்களை மதித்தல், உயிர்களிடத்து கருணை என எல்லாவற்றிலும் நூற்றுக்கு நூறு வாங்க முயற்சிப்போமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com