
வாழ்க்கை சிறக்க வேண்டுமானால் உயர்ந்த இலக்குகளைக் குறிவையுங்கள். யார் ஒருவர் மற்றவர்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றார்களோ அந்த குணத்திற்காகவே இவர்களும் நன்றாக இருப்பார்கள். நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை எப்போதும் உயர்ந்த இலக்குகளை நோக்கியே குறிவைத்து பழக வேண்டும்.
விடாமுயற்சி என்பது எவ்வளவு முறை தோற்றாலும் மீண்டும் எழுந்து நிற்பதுதான். இலக்குகளை குறிவைத்து வாழ்வை நகர்த்தினால்தான் நல்லது. இல்லையெனில் வாழ்வே கேள்விக்குறியாகிவிடும். எந்த ஒரு குறிக்கோளும் இல்லாமல் நம்மால் விரும்பிய சாதனையை அடைய முடியாது.
உயர்ந்த இலக்குகளை உருவாக்குங்கள். அதற்கு தேவையான உந்துதல் சக்தி அவசியம். உந்துதல் என்பது ஒரு இலக்கைத் தொடர நம்மை தூண்டும் மனநிலையைக் குறிக்கும். உந்துதல் என்பது கார்களை இயக்க எரிபொருள் எவ்வளவு அவசியமோ அதுபோல்தான் உதுதல் இல்லாமல் எதையும் நம்மால் சாதிக்க முடியாது.
ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலோ, பல ஆண்டுகளாக நாம் கொண்டிருந்த ஆர்வத்தில் திறமைகளை வளர்த்துக் கொண்டாலோ அர்த்தமுள்ள இலக்குகளை நிர்வகிப்பது உயர்வை அடைவதற்கான வேகத்தையும், ஊக்கத்தையும் தரும். அன்றாடம் எதிர்ப்படும் சவால்களை சமாளித்து நம் இலக்கை நோக்கி பயணிக்க ஆர்வமும், உந்துதலும் அவசியம்.
வெற்றிக்காக நாம் அமைக்கும் இலக்குகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை முதலில் கற்றுக் கொள்வது நல்லது. உயர்ந்த இலக்குகளை உருவாக்கி விட்டால் அதை அடைவதற்கான வழியையும் தேட ஆரம்பித்து விடுவோம். இதற்கு முதலில் பெரிய நீண்ட கால இலக்குகளுடன் சிறிய குறுகியகால இலக்குகளையும் மேற்கொள்ள வேண்டும்.
அப்பொழுதுதான் குறுகிய கால இலக்குகளில் அடையும் வெற்றி நமக்கு உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து நீண்ட கால இலக்குகளை நோக்கி நம்மை நகரச்செய்யும். காற்றின் திசையை நம்மால் மாற்ற முடியாது. ஆனால் நம் இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது அதனை எளிதில் அடையும் வகையில் நாம் செலுத்தும் பாய் மரங்களை நம்மால் சரி செய்ய இயலும்.
உந்துதல் என்பது உள்ளார்ந்த உந்துதல் மற்றும் வெளிப்புறத்தில் இருந்து பெறப்படும் உந்துதல் என்று இருவகையாகக் கொள்ளலாம். இதனால் நாம் அடைய வேண்டிய இலக்கிற்கு அதிக அர்ப்பணிப்பை தர முடியும். உள்ளார்ந்த ஊக்க உந்துதல் என்பது நாம் அதற்கான வெகுமதியை, பாராட்டைப் பெறும்வரை இலக்கை அடைவதற்கான செயல்பாட்டில் கவனம் செலுத்துவதும், ஆற்றலை முழுவீச்சாக பயன்படுத்துவதுமாகும்.
வாழ்வில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை குறிவைத்து அதை நோக்கி பயணிக்க வேண்டும். நம் உள்ளார்ந்த உந்துதல் சக்தியாக மாறி முயற்சிகளை மேற்கொள்வதும், சவால்களை எதிர்கொள்வதும் என உயர்ந்த இலக்குகளை அடைய பாடுபடுவோம்.
இவையெல்லாம் நேர்மறையான உந்துதல்கள். இதுவே எதிர்மறையான விளைவுகளைப் பற்றிய பயம், வழக்குகள், வாழ்வில் ஒரு தேக்கம், விரும்பத்தகாத அனுபவத்தை எதிர்கொள்ளுதல் போன்ற பய உந்துதல் காரணமாக இலக்குகளை அமைத்து போராடி வெற்றிபெற உழைப்பது மற்றொரு வகை.
வெளிப்புறத்தில் இருந்து பெறப்படும் உந்துதல்கள் என்பது சமூக உந்துதல். பிறரின் பாராட்டுக்காகவும், அங்கீகரிப்புக்காகவும் இலக்குகளை அமைத்து போராடி வெற்றிபெற நினைப்பது. சமூக உந்துதல் என்பது மக்களிடையே சமூக தொடர்புகளை ஊக்குவிக்கிறது.
உறவினர்களாலும், நம்மைச் சுற்றி உள்ளவர்களாலும் ஏற்படும் உந்துதல் காரணமாக ஒரு செயலில் சிறந்து விளங்கி நினைத்த இலக்குகளை அடைய சிறந்த அணுகுமுறைகளை பின்பற்றுவதும் அதற்காக உழைப்பதும் அதை அடைய முழு அர்ப்பணிப்பை கொடுப்பதும் நம்மை சிறந்த நபராக மாற்றும்.
உயர்ந்த இலக்குகளைக் கொண்டு பொறுப்புடன் செயல்பட வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம்!