
எதற்கெடுத்தாலும் புலம்புபவர்கள் தங்களுடைய நேரத்தையும் மற்றவருடைய நேரத்தையும் புலம்பியே வீணடிப்பார்கள். புலம்புவதால் எந்த பயனும் இல்லை. ஒருவரை பார்க்கும் போதெல்லாம் நம்முடைய கஷ்டங்களை, இயலாமையை புலம்பிக் கொண்டிருந்தால், அப்படிப்பட்டவர்களை மற்றவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள்.
இப்படி புலம்பிக்கொண்டிருப்பவர்கள் பெண்களாக இருந்தால் இன்னும் ஆபத்து அதிகம். அப்படிப் பட்டவர்களை சிலர் தங்களுடைய சுயநலத்திற்காக உபயோகித்துக்கொள்ள முயல்வார்கள். வாழ்க்கையில் பிரச்னைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. புலம்புவதால் ஒன்றும் மாறப்போவதில்லை. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் வந்து போகத்தான் செய்யும். ஒரு பிரச்னையை தள்ளி நின்று பார்க்க கற்றுக்கொண்டால் அது பெரிதாக தெரியாது. அதுவே நம் அருகில் வைத்துக்கொண்டு பார்க்க மிகவும் பெரியதாகவும், அதிலிருந்து எப்படி மீள்வோம் என்றும் எண்ணத் தோன்றும்.
ஒரு சிறு கல்லை நம் கையில் வைத்துக்கொண்டு கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால் பூதாகரமாக, மிகப் பெரியதாக தெரியும். அதுவே சற்று தள்ளி வைத்துக்கொண்டு பார்க்க மிகவும் சிறியதாக தெரியும். அப்படித்தான் பிரச்னைகளும் சந்திப்பவர்களின் மனநிலையைப் பொறுத்து பெரியதாகவோ, சாதாரணமாகவோ தெரியும். நம் வருத்தங்களுக்கும், பிரச்னைகளுக்கும் என்ன காரணம் என்று பொறுமையாக அலசி ஆராய ஆரம்பித்தால் நம்மால் எளிதில் அதனைக் களையவோ, சரி செய்யவோ, மீண்டு வரவோ முடியும். அதை விட்டு புலம்பிக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? எல்லாம் என் தலைவிதி. என்ன செய்வதென்று தெரியவில்லையே. எல்லோரும் நன்றாக இருக்க நான் மட்டும் ஏன் இப்படி கஷ்டப்படுகிறேன் என்று சதா சர்வகாலமும் புலம்புபவர்களைக் கண்டால் காது கொடுத்து கேட்காமல் எல்லோரும் தப்பித்து ஓடிவிடுவார்கள். புலம்பல் ஆசாமிகளோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் யாரைப் பார்த்தாலும் நிறுத்தி தங்களுடைய மனக்குறைகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். புலம்புவதால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
சின்னச் சின்ன விஷயங்களுக்கு கூட புலம்பி தவிப்பதும், நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டு அது ஈடேறாத பொழுது புலம்பி அழுவதும் என்று இருப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிச் சென்று விடுவது நல்லது. இவர்களால் நம் தன்னம்பிக்கையும், உழைப்புமே கேள்விக்குறியாகிவிடும். மற்றவர்களுடைய சோகத்தையும், புலம்பலையும் கேட்பது நம் வேலை அல்ல. இவற்றால் நாம் தடுமாற வேண்டி வரும். ஆறுதல் சொல்லக் கிளம்புகிறேன் என்று கிளம்பினால் நம் நேரம் வீணாவதுடன் தேவையற்ற மனக்குழப்பத்துக்கும் ஆளாவோம். கடினமான உழைப்பும், திறமையும்தான் வாழ்வில் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும்.
எதையும் சரியாக திட்டமிடாமல், முயற்சி செய்யாமல் புலம்பிக்கொண்டே மட்டும் இருக்கும் மனிதர்களைக் கண்டு ஒதுங்குவதுதான் நல்லது. அளவுக்கு அதிகமான ஆசையும், பொறாமையும், நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்ற ஆற்றாமையும்தான் புலம்ப வைக்கிறது.
ஆசையைக் குறைத்து, பொறாமையை விலக்கி வைக்க இயலாமையால் ஏற்படும் கோபம் விலகிவிடும். பிறகு புலம்பத் தோன்றாது. புலம்பாத மனிதர்களை விரும்பி நட்பு கொள்ளவும், கஷ்டங்களில் தோள் கொடுக்கவும் அனைவரும் ஓடோடி வருவார்கள். நண்பர்களை உருவாக்கிக்கொள்ள போராட வேண்டிய அவசியமும் இருக்காது.