
'கல்வி கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகிறான். இது ராமகிருஷ்ண பரமஹம்சரின் வேதவாக்கு.
‘இளமையில் கல்' என்பது ஔவை மூதாட்டியின் அருள்வாக்கு கல்மேல் எழுத்து என்றார்கள். கல்லின் மீது வடிக்கப்பட்ட எழுத்து எக்காலத்திலும் அழிந்து போவதில்லை என்பதாலேயே அப்படி சொல்லப்பட்டது.
மனிதன் கல்வி கற்றதின் பயனாக ஆய்ந்து அறியும் தன்மையை பெற்றான் நன்மை, தீமை என்பவற்றைப் புரிந்துகொண்டான், சிந்திக்கவும் தலைப்பட்டான்.
மரியாதை, ஒழுக்கம், பணிவு, தன்னடக்கம் எனச்சொல்லப்படும் நற்குணங்களை ஒருங்கே கற்றுக்கொடுப்பது கல்வி. ஒருவன் காலம் முழுவதும் கல்வி கற்றுக்கொண்டே இருக்கலாம். ஒருவனுக்கு கிடைக்கப்பெற்ற அழகெல்லாம் அழகல்ல. அவன் மனத்தில் யாதொரு குற்றமும் இல்லாமல் தோன்றக்கூடிய கல்வியின் அழகே அழகு என்று நாலடியார் நவில்கிறது.
நபிகள் நாயகம் கல்வியின் சிறப்பை இவ்வாறு நவில்கின்றது. கல்வியைத் தேடுங்கள் ஏனெனில் இறைவனின் நல் அருளோடு அதைச் தேடுபவன் தூய செயல் செய்தவனாவான், கல்வியைப் பற்றிப்பேசு இறைவனைப் புகழ்ந்தவனாவான்.'
இப்படி ஞானிகளும், மகான்களும், அறிவியல் மேதைகளும் 'மனிதன் ஒவ்வொருவனும் கல்வியைக் கற்கவேண்டும் என்று அறிவுறுத்தி கூறியுள்ளனர். அந்தக்காலத்தில் அரசர்கள் கல்வியிற் சிறந்து விளங்கியதோடு அல்லாமல் புலமைத்துவம் பெற்றவர் களாகவும் விளங்கினர். நாட்டுப்பற்று தேசப்பற்று என்று நாட்டிற்காகத் தன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றனர். அதன் காரணமாகவே பசுவின் கன்றை கொன்றவன் தன் மகன் எனத் தெரிந்த பின்னரும் மகனைத் தேர்க்காலில் வைத்துக்கொன்று உயிருக்கு உயிர் என நீதி வழங்கினான் மனுநீதிச் சோழன்.
மழையில் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த மயிலுக்குப் போர்வை தந்தான் மன்னன் பேகன். தொற்றிப்படர கொழுகொம்பில்லாத சுற்றிக்கிடந்த கொடிக்குத் தன் தேரையே தந்தான் பாரிவள்ளல். இவர்கள் எல்லாம் கல்வியின் மேன்மையைத் தெரிந்த காரணத்தினாலேயே பறவைக்கும், தாவரத்திற்கும் பரிவு காட்டும் பண்பு கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால், அவர்கள் எவ்வளவு உயர்ந்த மனம் படைத்தவர்கள் என்பதை உயத்துணர்தல் வேண்டும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளராக ஜேம்ஸ்கார்பீல்ட் என்பவரைத் தேர்ந்தெடுத்த பிறகு அவர் ஒரு மடலில் இவ்வாறு கூறுகிறார், “சுதந்திரத்திற்கும், நீதிக்கும் அடுத்தாற்போல முக்கியத்துவம் வாய்ந்த கல்வி மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் இல்லையேல் சுதந்திரமும், நீதியும் நிலைத்திருக்க முடியாது" என்று.
மனிதர்களுக்குச் சிறைக்கூடங்கள் கட்டுவதைவிட பையன்களுக்குப் பள்ளிக் கூடங்கள் கட்டுவதுதான் மேல் என்று ஓர் அறிஞன் சொன்னான். அதே கருத்தைத்தான் நம் புரட்சிக்கவியும் அன்னச் சத்திரம் ஆயிரம் வைப்பதை விட ஏழைப் பையனுக்கு எழுத்தறிவித்தல் மேல் என்று எடுத்தியம்பியதைக் கூர்ந்துணர்தல் வேண்டும்.
கல்வி கற்கவேண்டிய காலத்தில் முறையாகக் கற்று நாட்டுக்கும். வீட்டுக்கும் பயனுள்ள வாழ்க்கை வாழ்வது இன்றைய மாணவர்களின் மையாகும். கல்வியால் சிறந்த ஒரு நாடே நாடாகும். கல்வி இல்லாத நாடும். வீடும் வெறுங்காடாகும்.