எல்லா மதங்களும் மனித குலத்தை ஆட்டிப்படைக்க இரண்டு யுக்திகளை கையாளுகின்றன. ஒன்று பயமுறுத்துவது. இன்னொன்று பேராசையைத் தூண்டுவது. ஒன்று் நரகம். மற்றொன்று சொர்க்கம்.
ஒரு பெரியவர் குதிரை மீது போய்க்கொண்டிருந்தார். பாசத்தால் பின்னாலேயே அவருடைய நாயும் ஓடிவந்தது. நெடுந்தூரம் போனதும் மின்னல் தாக்கி மூவரும் இறந்து விட்டார்கள். ஆனால் மூவருக்கும் அவர்கள் இறந்தது தெரியாது. மூவரும் பாலைவனம் வழியாக போகும்போது கடும் வெயில். குதிரைக்கு வாயில் நுரை தள்ளியது. நாய் சுருண்டு விழுந்தது. பெரியவருக்குக்கண் சொருகியது. பெரியவர் கீழே இறங்கி நாயை குதிரை மீது போட்டபடி நடந்து வந்தார். வழியில் பெரிய மாளிகை. வாசலில் நீரூற்று பொங்கியது. வாசலில் இருந்த காவலாளியை அணுகி தண்ணீர் அருந்தலாமா என்று பெரியவர் கேட்க அவரும் அனுமதித்தார். குதிரையையும் நாயையும் அருகே கொண்டு போனார்.
காவலன் ஓடிவந்தான். அவை அற்ப மிருகங்கள். அவை குடிக்கக் கூடாது. நீங்கள் குடித்துவிட்டு உள்ளே ஓய்வெடுங்கள் என்றான். உடனே பெரியவர் இந்த குதிரை என்னை சுமந்து வந்தது. அதை விட்டு விட்டு நான் மட்டும் எப்படி நீர் அருந்துவது. பாவம் நாய் அதை தவிக்கவிட்டு நான் தாகம் தீர்ப்பது சரியல்ல என்றார். பிறகு இது என்ன இடமப்பா என்றார்.
இது சொர்க்கம் என்றான். சொரக்கத்தில் கூடவா இப்படி? என நொந்து பிறகு சிறிது தொலைவு சென்றதும் மறுபடியும் அதேமாதிரி மாளிகை.வாசலில் சுனை நீர். ஆச்சர்யத்துடன் காவலரிடம் நான் குதிரை மற்றும் நாய் தண்ணீர் அருந்த அனுமதி உண்டா என்றார்.
தாராளமாக என்றான் அவன்.
நீரால் நாய் மயக்கம் தீர்ந்தது. குதிரை களைப்பு நீங்கியது. பெரியவர் தெம்பானார். இது என்ன இடம் என்று கேட்க சொர்க்கம் என்றான் அவன். அப்படியானால் கொஞ்சம் முன்பாக சொர்க்கம் இருந்ததே அது என்ன என்று ஆச்சர்யமாக கேட்க,
அந்த காவலாளி அதுதான் நரகம். இதுதான் நிஜமான சொர்க்கம். நீங்கள் நாயையும் குதிரையையும் விட்டு தண்ணீர் குடித்திருந்தால் அதில் தள்ளப்பட்டிருப்பீர்கள். தனக்கு உதவியவர்களை கை விட்டு விட்டு ஏமாற்றுபவர்கள் சொர்க்கம் வராமலிருக்க கடவுள் செய்த முன் ஏற்பாடு. அன்புடைய நீங்கள் மூவரும் இந்த நிஜமான சொர்க்கத்தில் வரலாம்என்றான் காவலன். அன்பு என்பது நாம் பிறரிடம் எதிர்பார்க்கும் சரக்கல்ல.பிறருக்கு நாம் தரவேண்டியது. அன்பினால் மட்டுமே உலகத்தை சொர்க்கமாக்க முடியும்.
பண்டரிபுரத்தில் பல சாதுக்கள் பாண்டுரங்கனைப் பாடி ஆடி பரவசம் அடைவார்கள். ஒருமுறை ஏகாதசி விரதம் இருந்த சாதுக்கள் மறுநாள் துவாதசி சமையல் செய்து கொண்டிருந்தனர். அங்கு ஒரு கருப்பு நாய் வந்து பலரும் தயாரித்துக் கொண்டிருந்த ரொட்டிகளை முகர்ந்து பார்த்தபடி வந்தது. எல்லோரும் ஒரு கம்பை வைத்து அதை விரட்டினார்கள்.
அந்த இடத்தில் நாம தேவர் என்ற மகான் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு ரொட்டிகளை தயாரித்துக் கொண்டிருந்தார். அவர் கண்மூடி ஜபம் செய்யும்போது பாய்ந்து நாய் ரொட்டியை எடுத்துக் கொண்டு ஓடியது. நாம் தேவர் நெய்க்கிண்ணத்தை வைத்துக்கொண்டு நாயை நோக்கி ஓடினார். நாய் வாய் ரொட்டிக்கு ஓடுகிறானே என்று பலர் அவரை கேலி செய்தனர்.
அவரோ பாய்ந்து நாயின் கழுத்தைச் பிடித்து முட்டாள் நாயே நெய்யில்லாமல் ரொட்டி தின்றால் வயிறு வலிக்காதா. இரு நெய்யில் நினைத்துத் தருகிறேன் என்று ரொட்டியை ஊட்டிவிட்டார்.
கருப்பு நாய், நாம தேவா நான்தான் பாண்டுரங்கன். நான் நாயாக வந்து தோர்க்கடிக்கப் பார்த்தேன். ஆனால் நீ நீயாக இருந்து ஜெயித்துவிட்டாயே என்று கட்டைக் குரலில் கூறியதாம். அன்புதான் சொர்க்கம். பகைதான் நரகம்