நூலோர் தொகுத்தவற்றில் தலையாயது எது தெரியுமா?

Motivation Image
Motivation ImageImage credit pixabay.com

வீட்டில் அப்பொழுதெல்லாம் பழங்கள் எல்லாம் அரிதாகத்தான் கிடைக்கும். அதிலும் தோட்டத்தில் ஒரு பழம் பழுத்து விட்டால் அதையே பல்வேறு துண்டுகளாக போட்டு வீட்டிலேயே அதிகமானோர்  இருப்பார்கள். அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதுண்டு. அக்கம் பக்கத்தினர், அந்தத் தெருவில் உள்ளோர் அனைவருக்கும் கொடுப்பதுண்டு.  சாப்பிடும்பொழுது யாராவது வந்தாலும் அவர்களுக்கும் கொடுத்துவிட்டுத்தான் சாப்பிடுவார்கள். அப்படி பகிர்ந்து சாப்பிட்டால்தான் அதில் வீட்டாருக்கு ஒரு நிறைவு கிடைக்கும். 

இப்படி பகுத்துண்டு வாழ்வதை ஒரு அறச்செயலாக வீட்டினர் செய்து வந்தனர்.

நிறைய மரம், செடி, கொடி வளர்ப்பவர்கள் வீட்டில்  தினசரி அக்கம் பக்கத்தில் தெரிந்தவர்கள் என்று யாராவது இலையோ, காயோ, கனியோ கேட்பதுண்டு. அதை தோட்டக்காரர்களும் பறித்து கொடுப்பதுண்டு. ஒரு முறை என் தோழியின் வீட்டில் இருந்த பப்பாளி மரத்தில் நிறைய பழங்கள் பழுத்திருந்தது. அதைக் கவனித்த ஒரு பையன் வந்து இந்த வீட்டில் பப்பாளி பழம் நன்றாகப் பழுத்திருக்கிறது. எனக்கு ஒரு பழம் வேண்டும். ஆதலால் நான் வெட்டிக் கொண்டு போகிறேன் என்று கூறினான்.

யாரப்பா நீ? உன்னை இதுவரையில் இந்த ரோட்டிலோ, தெருவிலோ பார்த்ததே இல்லை. இப்பொழுது புதிதாக வந்து பப்பாளி பழுத்திருக்கிறது என்று கேட்கிறாயே? உன்னை யார் என்று எங்களுக்குத் தெரியாதே? என்று வினவினார்கள்.

அதற்கு அவன் யாரோ ஒருவரின் பெயரைக் கூறி அவனின் நண்பன் நான் இன்ஜினியராக பணிபுரிகிறேன் என்று கூறினான். அவன் பேசிய விதம்  கொஞ்சம் அநாகரிகமாக தெரிந்தாலும், தோழியின் வீட்டில் அந்த இரவு நேரத்திலும் ஒரு பழத்தைப் பறித்து கொடுத்து அனுப்பினார்கள். அதை வாங்கிச் சென்ற பையன் நன்றி கூட கூறவில்லை. 

இதைப் பார்த்ததும் இந்த கதைதான் என் ஞாபகத்திற்கு வந்தது. பகிர்ந்து உண்பது எவ்வளவு சிறப்பானது என்பதை போதிக்கும் கதை இது. 

பூதான இயக்கத்தின் முன்னோடியானவர் வினோபா பாவே. அவர் சிறுவனாக இருந்தபோது அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பப்பாளி மரம் இருந்தது. அதில் காய்கள் காய்த்தது. வினோபாஜி அந்த காய் எப்போது முற்றி பழுக்கும் என்று ஆர்வமாக தினமும் அந்த மரத்தைப் பார்த்து விட்டு வருவார். 

அவர் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. அதில் ஒரு காய் பழுக்கும் நிலையை அடைந்ததும், தன் தாயின் சம்மதத்துடன் அதைப் பறித்து நன்கு பழுக்க வைத்தார். அது கனிந்தவுடன் தனது தாயிடம் அதை தான் உண்ண அனுமதி கேட்டார். அவரது தாயார், அவரிடம் அப்பழத்தை முதலில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கித் தருமாறு சொன்னார். 

இதையும் படியுங்கள்:
30 பிளஸ் பெண்களுக்கான 6 விதமான சிகை அலங்காரங்கள்!
Motivation Image

வினோபாஜியும் அதை செய்த பின் "பழத்தைச் சாப்பிடலாமா? "என்று கேட்டார். 

தாயார் அவரிடம் ,"மகனே! நமது கிராமத்தில் எவ்வளவு பேர் வீட்டில் பப்பாளி மரம் இருக்கிறது என்று கேட்டார்.

வினோபாஜி நம் வீட்டில் மட்டும்தான் பப்பாளி மரம் இருக்கிறது அம்மா.

தாயார் பழத்தை நீ மட்டும் சாப்பிடுவது நியாயமா? நம் வீட்டில் மரம் இருந்தாலும் அதில் காய்ப்பது நமது ஊரில் உள்ள எல்லோருக்கும் சொந்தமல்லவா? 

அதனால் இந்தப் பழத் துண்டங்களை உன் நண்பர்களுடன் பகிர்ந்துதானே உண்ண வேண்டும்?. 

வினோபாஜியின் மனதில் இந்த அறிவுரை பசுமரத்தாணி போல் பதிந்தது. பழத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார். 

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்று படித்திருக்கிறோம். ஆதலால், இருக்கும் வரை அன்பாய் இருப்போம் அனைவருக்கும் ஆறுதல் சொல்வோம். இருப்பதை பகிர்ந்து இன்புற்று வாழ்வோம்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com