எண்ணத்தில் கவனம் வை!


Focus on the thought...
Motivation articleImage credit - pixabay
Published on

விதைப்பதுதான் விளையும். விதைப்பது நன்றாக இருந்துவிட்டால் பலனும் நன்றாகவே இருக்கும். எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம்.

எண்ணத்தில் கவனமாக இருந்தால் சொல்லும் செயலும் சரியாக இருக்கும். எண்ணத்தின் வெளிப்பாடே சொல்லும் செயலும். எண்ணத்தில் கவனம் இருந்தால்தான் பேசும் சொற்களில் செழுமை இருக்கும். வாழ்க்கை இரண்டு விஷயங்களால் ஆனது. ஒன்று அதை செய்திருக்கலாமோ என்று எண்ணுவது, மற்றொன்று அதை செய்யாமல் இருந்திருக்கலாமோ என எண்ணுவது. எனவே நம் எண்ணத்தில் கவனம் தேவை. 

எண்ணம்தான் சொல்லாகிறது. சொல்தான் செயலாகிறது. நாம் செய்யும் செயலே நம்மை யார் என்று வரையறுக்கிறது.

"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 

திண்ணியராகப் பெறின்"(திருக்குறள் 666)

எண்ணத்தில் உறுதியாக இருப்பவர்கள் தான் நினைத்ததை நினைத்தபடி அடைய முடியும். எண்ணத்தில் உறுதி இல்லாவிட்டால் அது செயலில் முடியாது.

அத்துடன் நாம் எண்ணுவதெல்லாம் உயர்வானதாகவே இருக்க வேண்டும் எண்ணமே வாழ்க்கை. நல்ல எண்ணமும் செயலும் எப்போதும் நம் வெற்றிக்கு துணை நிற்கும். நாம் செய்யும் சிறிய செயல்களில் கூட உண்மையாக இருந்தால் வெற்றி நிச்சயம். நம் எண்ணங்கள் உயர உயர வாழ்க்கைத் தரமும் உயரும்.

எண்ணம் தூய்மையாக இருந்தால் செயலும் தூய்மையாக இருக்கும். தூய்மையான எண்ணத்தில் இறைவன் தங்குவான். நல்ல சொற்களும் நல்ல செயல்களும் ஒருவருக்கு உதிப்பது நல்ல எண்ணங்களின் அடிப்படையில் தான். அங்கும் இங்கும் அலைமோதித் திரியும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி நல்ல சிந்தனை கொண்டு செயல்பட வாழ்வில் உயரலாம்.

மகாகவி பாரதியார் 

"எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெரிந்த நல்லறிவு வேண்டும் என்று நல்ல எண்ணங்களை வேண்டுவதைக் காணலாம்.

நம் மனதில் உருவாகும் எண்ணங்களே நம் வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் தீர்மானிக்கின்றன. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. அதனால் தான் "எண்ணம் போல் வாழ்வு", "மனம் போல் மாங்கல்யம்" எனும் சொல்லாடல்கள் வழக்கில் உள்ளன.

ஜெயிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் வெற்றி பெறுவதற்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு வேண்டும். தெளிவு மட்டும் போதாது. அதன்படி செயலாற்றவும் வேண்டும். முழு மூச்சுடன் இறங்கி செயல்பட எண்ணத்தில் அதிக கவனம் தேவை. எண்ணங்களுக்கு வலிமை உண்டு. "எண்ணம் போல் வாழ்வு" என்றும், "எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பதும் இந்த பிரபஞ்ச வாழ்வில் வலிமை வாய்ந்த வார்த்தைகள்.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட் ஆட்டமும், வங்கி பணம் அபேசும்..!

Focus on the thought...

என்னால் முடியாது என்று எண்ணும் எதிர்மறை எண்ணம் கொண்ட மனிதர்களிடம் பழகும்போது நமக்கும் அத்தகைய எண்ணங்கள் நம்மை அறியாமல் நம்மிடம் புகுந்துவிடும். இதுதான் எண்ணங்களின் வலிமை.

"நீ உன்னை வலிமை வாய்ந்தவன் என்று எண்ணினால் வலிமை படைத்தவனாகவே ஆகிறாய்" என்பது விவேகானந்தரின் கூற்று.

மனிதனின் எண்ணம்  நம்பிக்கையாக வேர் விடும்போது நமக்குள் அசாதாரண சக்தி கிடைத்து விடுகிறது. எனவே நம்முடைய வாழ்க்கையை உருவாக்கும் கருவி நம் மனதில் உதிக்கும் எண்ணங்கள்தான். நம்முடைய நிகழ்கால எண்ணங்கள் வருங்கால வாழ்வை உருவாக்குகின்றன. எனவே  எண்ணத்தில் கவனம் வை.

சமுதாயத்தில் நல்ல எண்ணங்களை விதைத்தால் மட்டும்தான் மாற்றம் வரும். விதைப்பது நன்றாக இருந்துவிட்டால் பலனும் நன்றாகவே இருக்கும். எனவே நல்ல எண்ணங்களை விதைப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com