
அறியாமை என்கிற இருளைக் கடக்க அறிவு என்கிற ஒளிப்பாலத்தின் மீது நடக்கவேண்டும். அறிவு என்கிற ஒளிப்பாலம்தான் வெற்றிக்கு வழி என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெற்றிப் பாதையில் நடப்பதற்கு உங்கள் அறிவு கண்களில் ஒளி வீச வேண்டும். அறியாமை என்பது ஆபத்தானது.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடையவராக இருங்கள்.
ஒரு நிறுவனம் என்பது குட்டையாகத் தேங்கிவிடக்கூடாது. வற்றாத ஜீவநதியாகக் கருத்து வெள்ளமும் புதிய நிர்வாக முறையும் பெருக்கெடுத்து ஓடவேண்டும்.
விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நிறுவனத்தின் மேலாண்மையில் மாற்றங்கள் வந்த வண்ணம் இருக்கும். அந்த மாற்றங்களின் உட்கருவை உள்வாங்கிக் கொண்டு உங்கள் உள்ளத்தை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படுபவராக நீங்கள் இருக்க வேண்டும்.
நிர்வாக அமைப்பு, அணுகு முறை, தொழில் நுட்பம் போன்றவற்றின் மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனத்தில் நேர்முக மாற்றத்தைத் தோற்றுவிக்கும் சிந்தனையாளராக நீங்கள் விளங்கவேண்டும்.
இவ்வாறு மாற்றத்தைத் தோற்றுவிக்கும் மனநிலையில் நீங்கள் செயல்படும்போது உங்கள் உள்ளத்தில் உற்சாக அலைகள் வீசுவதை உங்களால் உணரமுடியும்.
செக்கு மாடுகள்தான் சென்ற வழியிலேயே சென்று கொண்டிருக்கும்.
எப்பொழுதும் புதியனவற்றைத் தோற்றுவிக்கின்ற ஆக்க மனநிலையை உருவாக்கிக் கொள்ளுங்கள். ஒரு மரம் வளர்கிறது என்றால் அதில் புதிய இலைகள் தோன்ற வேண்டும்.
அதுபோல ஒரு நிறுவனம் வளர்கிறது என்றால் புதிய முறைகள் ஒவ்வொரு துறையிலும் தோற்றுவிக்கப்பட வேண்டும்.நேர்முக மாற்றம் நிகழவேண்டும்.
நிறுவனத்தின் நிர்வாக வழி முறையில் கொண்டு வரப்படும் புதிய முறைகளையும், நவீன உத்திகளையும் செயலாக்க நீங்கள் முழு மனதுடன் உதவவேண்டும்.
நீங்கள் செய்கின்ற தினசரி வேலைகளின் செயல்முறைகளை எளிதாக்க முடியும் என்று முழுமையாக நம்புவதுடன் எளிய முறைகளையும் செயல்திறன் மிக்க முறைகளையும் முன்மொழிந்து அவற்றை நடைமுறைப்படுத்த உதவவேண்டும்.
இவ்வாறு நீங்கள் செயல்படும்போது, நிறுவனத்தில் உங்கள் மதிப்பு உயர்வதுடன் உங்களுக்கு முழு மனத்திருப்தி ஏற்படும்.
மேலும் நீங்கள் முன்மொழியும் கருத்து செயல் வடிவம் பெறும்போது உங்கள் மனதில் ஏற்படும் வெற்றி உணர்வுகளை நீங்கள் சுவைக்க வேண்டும்.
வெற்றியுணர்ச்சி என்பது வெற்றியை விடச் சக்தி மிக்கது.
புதியன புகுத்துவதில் வெற்றி பெறும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டால், உங்கள் முன்னர் தோன்றுகின்ற சவால்களை வெல்வது ஒன்றும் கடினமில்லை.
இவ்வாறு ஒவ்வொரு சவாலையும் சந்தித்து அதில் வெற்றியடையும் போது, வெற்றிபெறும் பழக்கம் உங்களுக்கு ஏற்பட்டு விடுகிறது.
புதிய புதிய சிந்தனைகளும் உத்திகளும் உங்களுக்குத் தன்னிச்சையாகவே தோன்றுவதை நீங்களே உணர்வீர்கள்.
ஆகவே சின்னச் சின்னச் சவால்களை முதலில் தேர்ந்தெடுத்து அவற்றை வென்று உங்கள் முத்திரையை அவற்றில் பதியுங்கள்.