உங்களை யாராவது அவமானப்படுத்தி இருக்கிறார்களா? நீங்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்.
தாய் தந்தை இல்லாத அனாதை என்று கர்ணனை துரோணர் இகழ்ந்தார். தேரோட்டி மகன் என்று கேலி செய்யப்பட்டார். சல்லியன் என்ற அரசன் தேரோட்ட தேரேறி கர்ணன் வந்தான். அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளலாக வாழ்ந்தான். அனாதை ஆக்கிய அம்மா குந்தியே கை ஏந்தினாள். ஆண்டவன் கண்ணனே கையேந்தி கொடையால் விளைந்த தானத்தைக் கொடு என்றான்.
அவமதிப்பு அலட்சியம் இவையாவும் அக்கினிக் குஞ்சுகள். விண்ணில் பாயும் நம் வெற்றிக்கான எரிசக்தி கள். தன்னை அவமதித்த பிரிட்டிஷ் அதிகாரியும் மதிக்கும்படி விஸ்வரூபம் எடுத்தவர் மகாத்மா காந்தி.
கவியரசர் கண்ணதாசன் செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினாலு வயது பையனாக வந்தார். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்கும் பின்னால் பெட்டியை தலைக்கு வைத்துப்படுக்கிறார். நள்ளிரவு போலீஸ் வந்து அவரைத் தட்டி மிரட்டியது. காலை நகரத்தார் விடுதிக்குப் போகவேண்டும். இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது என்று கூறி படுக்க அனுமதி கேட்டார். பதினாலு வயசு பையனை மிரட்டி படுக்கணும்னா நாலணா குடு என்றது போலீஸ். மறுநாள் கையில் காசின்றி நடந்தே சென்றார்.
அவர் வளர்ந்து கவியரசு ஆகி சுமைதாங்கி என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த நடிகர் ஜெமினியை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்து அதே காந்தி சிலையைத்தான் தேர்ந்தெடுக்கிறார்.
நள்ளிரவு ஷூட்டிங். படத்தில் 7மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வரவேண்டும். ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருவது போல் படம் எடுக்கிறார்கள். அந்த படத்தை வீட்டில் போட்டுக் காண்பித்த அவர் பிள்ளைகளிடம் எந்த இடத்தில் நாலணா இல்லை என்று என்னை போலீஸ் நடக்க விட்டதோ அதே இடத்திலிருந்து ஏழு கார்கள் ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன் என்றாராம். இதற்கு அந்த கவியின் நம்பிக்கைதான் காரணம். எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு தம் வெற்றியை கவிஞர் அரங்கேற்றி இருக்கிறார். அவமானம் ஒரு மூலதனம். இது புரிந்தால் வெற்றி நிச்சயம்.