வெற்றிக்கு இத்தனை அளவுகோல்களா?

motivation image
motivation imageImage credit - pixabay.com

வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வேறுபடும். அதன் அளவுகோல்கள் அவரவர் சூழலுக்கேற்ப மாறுபடும்.

பணம் நிறைய சம்பாதிப்பதை சிலர் வெற்றி என்பார்கள். உயர் பதவி பெறுவதையும்  மற்றும் நகைகள், பங்களா, கார், வேலைக்காரர்கள் போன்ற சகல வசதிகளுடன் வாழ்ந்து வருவதை சிலர் வெற்றி எனலாம். நன்கு வாழ்ந்து வருகிறோம் என மன நிறைவுடன் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் நன்கு அனுபவித்து சந்தோசமாகவும் பயனுள்ளதாக வாழ்ந்து வருவதுதான் வெற்றி என்பார்கள் சிலர். நான் என்ற அகந்தையை ஒழித்து மற்றவர்களுடைய அன்புக்காக உழைத்து வருவதில் இன்பம் கண்டு வருவதை வெற்றியாக  நினைப்பவர்கள் உண்டு.  

வங்கியில் சேர்த்து வைத்திருக்கும் பணம், சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் போன்றவைகளை வெற்றியை அளக்கும் அளவுகோல்களாக சிலர் சொல்வதுண்டு. மனித குலத்திற்கு செய்திருக்கும் சேவையை வெற்றியை அளக்கும் அளவுகோல்களில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளலாம். நேர்மை, சத்தியம், நியாயம், சகிப்புத்தன்மை, கடமை, தயை, தானம் போன்றவைகளை வெற்றியை அளக்கும் அளவு கோல்களாக உபயோகப்படுத்துகின்றனர்.

பல அளவுகோல்கள் கொண்ட  வெற்றி என்பது சாவியை போன்றது. அந்த சாவியைக் கொண்டு பணம், புகழ், உயர் பதவி, பாதுகாப்பு சுதந்திரம் போன்ற மாளிகையின் கதவுகளைத் திறந்து அவைகளை அனுபவித்து வாழ்க்கையை நன்கு வாழ முடியும். வெற்றி என்பது ஒரு மன நிறைவு. ஒரு சாதாரண மனிதனுக்கு கிடைக்க கூடிய இன்பம் அனைத்தும் வெற்றி என்ற ஒரு வார்த்தையில் அடங்கி இருக்கிறது. ஒருவன் எதிர்காலத்தில் காணப்போகும் வெற்றி அவன் தான் கண்ட தோல்விகளிலிருந்து எவ்வளவு படிப்பினைகளை கற்றுக்கொண்டு அவைகளை எந்த அளவில் பயன்படுத்தி வருகிறான் என்பதை பொறுத்தே அமையும்.

வெற்றி என்பதன் அளவுகோல் ஹிட்லர் விஷயத்தில் மாறுபடும் . ஹிட்லர் ஆரம்ப கட்டத்தில் பல பெரிய சாதனைகளை செய்து காட்டினார். தன் நாட்டில் உற்பத்தியை பல மடங்குகள் அதிகரிக்கும் படி செய்தார்.  உலக நாடுகள் அனைத்தும் பயன்படும் வகையில்  தன் நாட்டின் படை பலத்தை அதிகரித்தார். தன் இனம் தான் உலகத்தில் சிறந்தது என்று அகம்பாவத்தின் அடிப்படையில் அவன் முயற்சி அமைந்திருந்ததனால் அவன் கண்ட வெற்றிகள் நிலைத்து நிற்காமல் போய்விட்டன. அவனுடைய அகம்பாவத்தின் காரணமாக எண்ணற்றவர்கள் உயிர் துறக்க நேர்ந்தது அவனும் முடிவில் தற்கொலை செய்து கொண்டான். இதில் வெற்றியின் அளவுகோல் என்பதை ஹிட்லரின் விஷயத்தில் வேறு மாதிரியாக உள்ளது. 

இதையும் படியுங்கள்:
மெட்டி, குங்குமம், வளையல் அணிவதால் இவ்வளவு நன்மைகளா..!
motivation image

மாபெரும் வெற்றி என்பது எண்ணற்ற சிறிய வெற்றிகளின் கூட்டுத்தொகையாகும்.  மலர் படுக்கையில் படுத்து கொண்டிருப்பதைப் போன்று மிருதுவானது அல்ல வெற்றி. சோதனை என்ற முட்கள் பாதங்களில் குத்தி காயப்படுத்தும். எதிர்ப்பு என்ற கல் இடறி கீழே  விழ வேண்டிஇருக்கும் இவைகள் அனைத்தையும் பொருட்படுத்தாமல் முன்னேறி செல்பவனுக்குத் தான் வெற்றி தேவதை மாலை சூட்டி வரவேற்பாள்.

மனிதனுக்கு இரண்டு வகை சக்திகள் தேவைப்படுகிறது. ஒன்று உடல் சக்தி. ஒருவன் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வரும்போது வெற்றிக்குத் தேவையான செயல் புரியும் உடல் சக்தி கிடைக்கிறது. இன்னொன்று மனோ சக்தி. இது எவ்வளவு சோதனைகள் வந்தாலும் மனம் தளராமல் உழைப்பதற்கு தேவையான ஊக்கத்தை கொடுக்கிறது. உடல் சக்தியை விட மனோசக்திதான் மிகவும் சக்தி வாய்ந்தது. இரண்டு சக்திகளையும் நிறைய அளவில் வளர்த்துக் கொண்டவன் சிறந்த வெற்றி வீரனாக உருவெடுப்பான்.

ஆகவே, நமது வெற்றிக்கு அளவுகோல்கள் எது என்பதை நாமே தீர்மானித்து அதை நோக்கி நம் பயணம் இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com