
நாம் சுறுசுறுப்பாக ஓடி ஆடி வேலை செய்துக் கொண்டிருக்க வேண்டும் என்றால், நம்முடைய வாழ்கையில் பிரச்னைகள் இருக்க வேண்டியது அவசியமாகும். பிரச்னைகள் தான் நம்மை சோம்பேறிகளாக மாற்றாமல் நம் வாழ்வில் அடுத்தக்கட்டத்தை நோக்கி நம்மை ஓட வைக்கின்றன. இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் (motivation story) பார்ப்போம்.
பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு தீவில் இருக்கும் மக்கள் மீன் உணவை சாப்பிடுவதற்காக படகை எடுத்துக் கொண்டு கடலில் சில கிலோ மீட்டர் தொலைவுக்கு செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகிவிடும். அந்த குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியாக இருக்கும். ஆனால் மீன் பிடித்துக் கொண்டு வர இரண்டு நாட்கள் ஆகிவிடுவதால், மீனின் சுவை குறைந்துவிடும்.
இதைத்தடுக்க மீனவர்கள் கையோடு ஐஸ் கட்டிகளை எடுத்துச் சென்று மீன்களை பதப்படுத்தி எடுத்து வந்தனர். இருப்பினும் மக்களுக்கு திருப்தியில்லை. கடலில் இருந்து நேரடியாக கிடைக்கும் மீனுக்கும் ஐஸ்கட்டியில் பதப்படுத்திக் கிடைக்கும் மீனுக்கும் சுவையில் உள்ள வேறுப்பாட்டை நன்றாக உணர்ந்தனர்.
இப்போது மீனவர்கள் ஒரு சிறு தண்ணீர் தொட்டி ஒன்று செய்து அதில் மீன்களை பிடித்து போட்டுக் கொண்டு வந்தனர். ஆயினும் அத்தனை பெரிய கடலில் நீந்திக் கொண்டிருந்த மீன்கள் சிறிய தண்ணீர் தொட்டியில் சோம்பிக் கிடப்பதனால், மீனின் சுவைக் குன்றிப் போவதாக குறையைக் கண்டனர். இதற்கு தீர்வுக் காண முயன்ற மீனவர்கள் புதிதாக ஒரு யோசனையைக் கண்டுப்பிடித்தனர்.
அந்த தொட்டிக்குள் குட்டி சுறா மீனைப் பிடித்து விட்டனர். இந்த குட்டி சுறாவிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மீன்கள் தொட்டிக்குள் ஓய்வின்றி நீந்திக் கொண்டிருந்தன. இப்போது இரண்டு நாள் கழித்து வந்த அந்த மீன்கள் முன்பைவிட மிக சுவையாக இருந்தனவாம்.
நாம் வாழும் வாழ்க்கையும் அப்படித்தான். நம் வாழ்க்கை சுவைக்க வேண்டும் என்றால் கவலையுடன் கிடக்கக்கூடாது. எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். பிரச்னை என்னும் சுறா இருந்தால் தான் வாழ்க்கை என்னும் மீன்கள் சுவையானதாக இருக்கும். நம் வாழ்வில் பிரச்னைகள் இல்லையென்றால் நாம் ஓட மாட்டோம். சோம்பேறியாக இருப்போம்.
சுறுசுறுப்பாக ஓடி வாழ்க்கையை சுவையானதாக மாற்றுவோம்.