
ஒரு பானை செய்ய கற்றுத்தரும் ஆசிரியர் தன்னுடைய வகுப்பில் உள்ள மாணவர்களை இரண்டு குரூப்பாக பிரிக்கிறார். அந்த இரண்டு குரூப்பிற்கும் இரண்டு வித்தியாசமான சவால்களை கொடுக்கிறார். அதில் முதல் குரூப்பிடம், 'இந்த மாத கடைசிக்குள், ஒரே ஒரு பானை செய்து தந்தால் போதும். ஆனால், அந்த பானை பார்ப்பதற்கு பர்பெக்டாக இருக்க வேண்டும். அதைப்பொருத்து உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்' என்று கூறுகிறார்.
இன்னொரு குரூப்பிடம், 'நீங்கள் இந்த மாத கடைசிக்குள் உங்களால் எத்தனை பானை செய்ய முடிகிறதோ அத்தனையை செய்ய வேண்டும். அது பர்பெக்டாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் எத்தனை பானைகள் செய்கிறீர்களோ அதை பொருத்து உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும்' என்று கூறுகிறார்.
ஒரு மாதம் முடிந்து இரண்டு குரூப்பும் அவர்கள் செய்த பானையை ஆசிரியரிடம் காட்டுகிறார்கள். இந்த இரண்டு குரூப் செய்த பானையில் யார் செய்தது நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
Quality பார்த்த முதல் குரூப்பா அல்லது Quantity பார்த்த இரண்டாவது குரூப்பா? Quantity பார்த்த இரண்டாவது குரூப் தான் ஜெயித்தது. இதை தான் 'Perfectionism trap' என்று சொல்வார்கள்.
நாம் ஒரு விஷயத்தை பர்பெக்டாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் செய்ய முடியாது. முதல் குரூப் பர்பெக்டாக ஒரு பானை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்துக் கொண்டிருந்த போது இரண்டாவது குரூப் நிறைய பானைகள் செய்து பழகிக்கொண்டிருந்தார்கள். அப்படி செய்யும் போது ஒவ்வொரு தவறில் இருந்தும் புதிது புதிதாக கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆகவே, அவர்கள் பானை செய்வதில் கைதேர்ந்து இருப்பார்கள். அதனுடைய பலனாக முதல் குரூப்பை விட இரண்டாவது குரூப் செய்த பானைகள் நன்றாக இருந்திருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதை தொடர்ந்து செய்துக் கொண்டே வந்தால் பர்பெக்ஷன் என்பது தானாகவே வந்துவிடும்.
இதுவே பர்பெக்டாக தான் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை ஆரம்பிக்கவும் முடியாது, முடிக்கவும் முடியாது. ஒரு பர்பெக்டான படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தால், உங்களால் அதை எடுத்து முடிக்கவே முடியாது. ஏனெனில், ஒவ்வொரு முறையும் அதில் ஏதோ ஒரு குறை உங்கள் கண்களுக்கு தெரிந்துக் கொண்டேயிருக்கும்.
'நான் பண்ணினால் பர்பெக்டாக தான் பண்ணுவேன்' என்று சொல்லி, எதுவுமே பண்ணாமல் இருப்பதற்கு, ஏதாவது ஒன்று பண்ணுவது சிறந்தது. நீங்கள் நல்ல ஓவியராக வேண்டுமா? வரைய தொடங்குங்கள். அந்த விஷயத்தை செய்ய செய்ய தானாகவே பர்பெக்ஷன் வந்துவிடும்.