ஈகை என்னும் இன்பப் பாதை: சொர்க்கத்தை நோக்கிய நம் பயணம்!
நம்மில் பலருக்கும் இறந்த பிறகு சொர்க்கத்திற்கு (Heaven) செல்ல வேண்டும் என்ற ஆசையிருக்கும். சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? நல்ல காரியங்களும், வறுமையில் இருப்பவர்களுக்கு உதவியும் செய்து நல்ல கர்மாவை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் மனதில் இருந்து வரும் போதே சொர்க்க வாசல் நமக்காக திறக்கும். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு பெண் இறந்த பிறகு மேலோகம் சென்றாள். அவளை அழைத்து செல்ல இரு தேவதைகள் வந்தன. அந்த தேவதைகள் அவளிடம், 'நீ உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு நிறைய நல்லது செய்துள்ளாய்! அதனால் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக உனக்கு சொர்க்கத்தையும், நரகத்தையும் சுற்றி காண்பிக்கும்படி கடவுள் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்' என்று கூறினார்கள்.
முதலில் நரகத்திற்கு சென்றனர். அங்கே ஒரு பெரிய டைனிங் டேபிள் முழுவதும் விதவிதமான உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. அவ்வளவு உணவுகள் கண்ணெதிரே இருந்தும் அங்கிருந்த மக்கள் பசிக்கிறது என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். 'இவ்வளவு உணவு இருந்தும் ஏன் இந்த மக்கள் பசியால் அழுகிறார்கள்!' என்று அந்த பெண் கேட்டாள். அதற்கு அந்த தேவதைகள், 'இங்கிருக்கும் விதியின்படி இந்த ஐந்து அடி நீளமுள்ள ஸ்பூன்களால் மட்டுமே உணவை எடுத்து சாப்பிட வேண்டும்' என்று கூறினர் தேவதைகள்.
'அவ்வளவு பெரிய ஸ்பூனால் எப்படி சாப்பிட முடியும்?' என்று அதிர்ச்சியடைந்தாள் அந்த பெண். பிறகு அவளை சொர்க்கத்திற்கு (Heaven) அந்த இரு தேவதைகளும் அழைத்துச் சென்றனர். சொர்க்கத்திலும் அதேப்போல பெரிய டைனிங் டேபிள், ஆடம்பர உணவுகள், நீளமான ஐந்து அடி ஸ்பூன்கள் எல்லாமே இருந்தன.
ஆனால், அங்குள்ள மக்கள் பசியால் அலறாமல் மகிழ்ச்சியாக இருந்தனர். அதை பார்த்து ஆச்சர்யமடைந்த பெண், 'இது எப்படி சாத்தியம்?' என்று இரு தேவதைகளிடம் கேட்டாள். அதற்கு அந்த தேவதைகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?
"சொர்க்கத்தில் உள்ள மக்களிடமும் ஐந்து அடி ஸ்பூன் இருக்கிறது. ஆனால், அவர்கள் ஒருவருக்கொருவர் உணவை ஊட்டிக் கொள்கிறார்கள். அதனால் தான் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அடுத்தவருக்கு கொடுத்தால் அது நமக்கும் வந்து சேரும் என்பது தெரியாததால் தான் அது நரகமாகவும், இது சொர்க்கமாகவும் இருக்கிறது" என்று கூறினர்.