நாம் எதுவாக ஆசைப்படுகிறோமோ அதுவாகவே ஆகிறோம் என்று தத்துவ ஞானிகள் பலரும் கூறுகின்றனர். நம்முடைய ஆசைகள் அனைத்தையும் இந்த பிரபஞ்சத்திடம் கூறினால் , அந்த ஆசைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் உதவி செய்யும். பிரபஞ்சம் என்பது பூமியை விட பெரியதாக இருக்கும் , தூரத்தில் தெரியும் விண்மீன்கள், நட்சத்திரங்கள் , சூரியன் ஆகியவற்றை உள்ளடக்கிய நம் கற்பனைக்கும் ஏற்றாத மிகப்பெரிய பரப்பை குறிப்பதாக நாம் நினைக்கிறோம்.
நம்முடைய பிரபஞ்சம் என்பது நம்மை சுற்றியுள்ளது தான். நம்மை சுற்றியுள்ள கண்ணுக்கு தெரியாத ஆற்றல் , சக்தி, உணர்வுகள் இவை எல்லாம் சேர்ந்தது தான் நமது பிரபஞ்சம். பிரபஞ்சத்தினை நாம் மிகப்பெரியதாக நினைத்து அதைப் பற்றி யோசிக்காமல் விட்டு விடுகிறோம். நாம் எதுவும் அதனிடம் கேட்பதில்லை. ஆனால் , பிரபஞ்சம் நம்மை தொடர்பு கொள்ள பலமுறை முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. நாம் தான் அந்த முயற்சிகளை எதையும் உணர்வதில்லை.
பிரபஞ்சத்தினை நாம் உணர்வது மிகவும் எளிது. நம்முடைய எண்ணங்கள், செயல்கள், ஆசைகள் அனைத்தையுமே பிரபஞ்சத்திடம் விட்டுவிட்டால் அது நம்முடைய ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும். நமது எண்ணங்களை செயல்படுத்தும் , செயல்களை நல்ல விதமாக செயல்பட வைக்கும். பிரபஞ்சத்தினை தொடர்பு கொண்டு நம்முடைய ஆசைகளையும் எண்ணங்களையும் அதனிடம் வெளிப்படுத்தினால் , அந்த ஆசைகளை நிறைவேற்ற பிரபஞ்சம் உங்களுக்கான வழிகளை உருவாக்கி தரும் .
பிரபஞ்சம் வேலை செய்யும் முறை:
இந்த சக்தி எவ்வாறு வேலை செய்கிறது என்பதை சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். நியூட்டன் ஒரு ஆப்பிள் மரத்தடியில் அமைதியாக அமர்ந்திருக்கும் போது , ஒரு ஆப்பிள் அவரது தலையின் மேல் விழுகிறது. நியூட்டன் அந்த ஆப்பிளின் மேல் அல்லது அந்த மரத்தின் மேல் எந்த ஒரு கோபமும் படவில்லை. அமைதியாக அந்த ஆப்பிள் ஏன் மரத்திலிருந்து கீழே விழுகிறது? என்பதைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார், அதிலிருந்து புவியீர்ப்பு விசைக்கான அறிவியல் கோட்பாடுகள் தோன்ற ஆரம்பித்தது. எதிர்கால அறிவியலுக்கு விதையாக அந்த ஆப்பிள் இருந்தது இதுதான் பிரபஞ்சத்தின் சக்தி.
நாம் பிளிப்கார்ட்டிலோ அமேசானிலோ ஏதேனும் ஒரு பொருளை வாங்க வேண்டும் , என்று நினைத்து ஒரு முறை பார்த்திருக்கலாம். ஆனால் , அதன் பிறகு நாம் எந்த இணையதளத்தை திறந்தாலும் நாம் வாங்க நினைத்த , ஆசைப்பட்ட அந்த பொருளை காட்டிக் கொண்டே இருக்கும். இந்த செயல்முறை நாம் அந்த பொருளை வாங்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நம்மை வேவு பார்க்கும் குக்கிகள் மற்றும் மார்கெட்டிங் தொழில் நுட்பம் காரணமாக இருக்கலாம். அவ்வப்போது அந்த பொருள் உங்களின் கண்ணில் படும்போது அதை வாங்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கு அதிகரிக்கும். அதற்காக திட்டமிடலை தொடங்கி விரைவில் வாங்கி விடுவீர்கள் , இது போன்று தான் பிரபஞ்சம் செயல்படுகிறது.
நீங்கள் எதன் மீது ஆசை கொள்கிறீர்களோ? அதை அடிக்கடி பிரபஞ்சம் உங்களுக்கு வேறு வேறு விதங்களில் நினைவூட்டி கொண்டே இருக்கும். காரின் மீது உங்களுக்கு ஆசை என்றால் , அது கார் வாங்குவதற்காக எவ்வாறு திட்டமிடலாம்? எந்த வகையில் பணத்தினை சேர்க்கலாம்? எங்கு வாங்கலாம் போன்ற எண்ணங்களையும்,அதற்கான சூழல்களையும் உங்களை சுற்றி உருவாக்கிக் கொண்டே இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தினை உங்கள் வசப்படுத்த நீங்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.
பிரபஞ்சத்தை தொடர்பு கொள்ள வழிமுறை:
தினமும் அதிகாலையில் நான்கிலிருந்து ஐந்து மணிக்குள் விரைவாகவே நீங்கள் எழுந்து சிறிது நேரம் அமைதியாக அமர்ந்திருங்கள். உங்கள் மனதில் உள்ள நல்ல எண்ணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் ஆகியவற்றை ஒரு டைரியில் எழுதுங்கள்.மேலும் உங்களது கனவுகள், ஆசைகள் ஆகியவற்றைப் பற்றியும் எழுதுங்கள். அதில் எழுதிய தீய எண்ணங்களை , அது தவறு அவற்றை மனதில் இருந்து நீக்க வேண்டும் என்பதை குறித்துக் கொள்ளுங்கள். தீய எண்ணங்களை மட்டும் சிகப்பு மையினால் எழுதுங்கள். இப்போது உங்களுக்கான நல்ல எண்ணங்கள் , நல்ல செயல்கள், ஆசைகள் , கனவுகள் ஆகியவற்றை மனதில் கொள்ளுங்கள் , அதை நிறைவேற வேண்டும் என்று அதைப்பற்றி மட்டும் சிந்தியுங்கள்.
அதிகாலை வேளையில் உலகம் முழுவதும் மிகவும் அமைதியாக இருக்கும் , அந்த நேரத்தில் உங்களது இரு கண்களை மூடி, மூச்சை நன்கு இழுத்து விட்டு ஆழமாக இருபது நிமிடங்கள் தியானம் செய்யுங்கள். இந்த தியானத்தின் முடிவில் நீங்கள் முழு அமைதியை முழுமையாக உணருவீர்கள். அந்த வேலையில் உங்களுக்கு தேவையான ஆற்றல்கள், உங்கள் ஆசைகளை அடைய நீங்கள் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி சிந்தியுங்கள்! உங்களை சுற்றியுள்ள பிரபஞ்சம் உங்களுக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்து , உங்கள் ஆசைகளை நிறைவேற்றி, உங்களது கனவுகளை நினைவாக்கும்.