
நம் வாழ்க்கையில் நாம் ஆசைப்படும் எல்லா விஷயங்களும் நமக்கு கிடைத்து விடுவதில்லை. அவ்வாறு நடக்கும் போது, 'அடுத்தவர்களுக்கு எல்லாம் கிடைத்து விட்டது. ஆனால், எனக்கு எதுவுமே கிடைக்கவில்லையே!' என்று எண்ணி வருத்தப்பட வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக இறைவன் நமக்கான சிறப்பான விஷயத்தை தருவதற்கு வைத்திருப்பார். அது சரியான நேரத்தில் நம்மிடம் வந்து சேரும். அதுவரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும். இதைப் புரிந்துக் கொள்ள ஒரு குட்டிக் கதையைப் (Motivation story) பார்ப்போம்.
இறைவன் விலங்குகளையும், பறவைகளையும் படைத்து முடித்த பின்னர் அவைகளுக்கு வண்ணங்களை கொடுப்பதற்காக ஒரு அழைப்பை விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்று விலங்குகளும், பறவைகளும் இறைவனிடம் சென்று தனக்கு வேண்டிய வண்ணங்களை கேட்டு பெற்றுக் கொண்டன.
ஆனால், ஒரு பறவை வருவதற்கு சற்று தாமதம் ஆனது. அது மிகவும் தூரத்தில் இருந்து பறந்து வந்தது. அது வரும் வழியில் புயல் காற்று வீசி மழைப் பெய்ததால் பல சோதனைகளை கடந்து வந்தது. கடைசியாக அந்த பறவை இறைவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தது.
அந்த பறவை தாமதமாக வருவதைப் பார்த்த மற்ற பறவைகள் அந்த பறவையை கேலி செய்ய ஆரம்பித்தன. 'நாங்கள் அனைவரும் நாங்கள் விரும்பிய நிறத்தை இறைவனிடம் கேட்டு பெற்றுவிட்டோம். ஆனால், நீ இவ்வளவு மெதுவாக வந்ததால் நிறங்கள் அனைத்தும் காலியாகி விட்டது!' என்று கூறி ஏளனமாக சிரித்தன.
இதைக் கேட்ட அந்த பறவை மிகவும் வருத்தப்பட்டது. இதைப்பார்த்த இறைவன் பறவையிடம், 'நிறங்கள் அனைத்தும் காலியாகி விட்டது. ஆனால், பாத்திரத்தில் ஒட்டியிருக்கும் அனைத்து நிறத்தையும் எடுத்து உனக்கு கொடுக்கிறேன்' என்று சொன்னார்.
அதைப்போலவே எல்லா நிறத்திலும் இருந்து சிறிதை எடுத்து அந்த பறவைக்கு கொடுத்தார். இப்போது அந்த பறவை மற்ற பறவைகளைக் காட்டிலும் மிகவும் அழகாக மாறியது. அதுவே பஞ்சவர்ணக்கிளி.
இதுப்போல தான் நம் வாழ்க்கையிலும் நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். இறைவன் அதைவிட மேலான சிறப்பான ஒன்றை நமக்காக வைத்திருக்கிறார் என்று மகிழ்ச்சியடைவோம். ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறப்பானது காத்திருக்கிறது என்று அர்த்தம்!