
எந்த ஒரு செயலையும் பொறுப்போடும், திறமையோடும் செய்து முடிப்பவரிடமே நாம் வேலையை ஒப்படைக்க வேண்டும். பொறுப்பற்றவரிடம் வேலையை ஒப்படைத்தால் நேரமும் விரையமாகும், வேலையும் கெட்டுப் போகும். இதை புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம் - (motivation story)
ஒரு தோட்டக்காரன் அவன் தோட்டத்தில் நிறைய குரங்குகளை வளர்த்து வந்தான். குரங்குகள் பல வருடங்கள் அங்கேயே இருந்ததால், தோட்டக்காரனுக்கு நண்பர்களாக ஆகிவிட்டன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்து பார்த்து குரங்குகளும் அவற்றை அப்படியே செய்து விளையாடும்.
ஒருமுறை தோட்டக்காரனுக்கு பக்கத்து ஊருக்கு போக வேண்டிய வேலை இருந்தது. அப்போது தன் தோட்டத்தை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று எண்ணினான் தோட்டக்காரன்.
அவனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. 'குரங்குகள் தான் செய்வதை பார்த்து அப்படியே செய்ய பழகிக் கொண்டன. எனவே, தான் ஊருக்கு போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்ற சொல்லலாமே?' என்று நினைத்தான்.
தோட்டத்தில் இருந்த குரங்குகளை அழைத்து விஷயத்தை சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். உடனே சம்மதித்தன. ஆனால், அவற்றிற்கு ஒரு பிரச்னை இருந்தது. அதாவது எந்த செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்பது குரங்குகளுக்கு தெரியவில்லை. அதற்கு தோட்டக்காரன் சொன்னான், "அது ஒன்றும் பிரச்னையில்லை. வேர் பெரியதாக இருந்தால் நிறைய தண்ணீரும், வேர் சிறிதாக இருந்தால் குறைவாக தண்ணீர் ஊற்றுங்கள்!" என்று யோசனைக் கூறினான்.
குரங்குகளிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளியூர் சென்றுவிட்டான் தோட்டக்காரன். பிறகு ஊருக்கு திரும்பி வந்ததும் தோட்டத்தை பார்க்க சென்ற தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அவன் தோட்டத்தில் வைத்து இதுவரை வளர்த்திருந்த அத்தனை செடிகளும் பிடிங்கப்பட்டு காய்ந்துக் கிடந்தன. 'என்ன ஆச்சு?' என்று குரங்குகளிடம் கேட்டான் தோட்டக்காரன்.
"செடிகளின் வேர் பெரிதாக இருக்கிறதா? அல்லது சின்னதாக இருக்கிறதா? என்பதை பார்க்க செடிகளை பிடிங்கினோம்" என்றன குரங்குகள்.
இந்தக் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவென்றால், தகுதி இல்லாதவர்களிடம் ஒரு செயலை செய்ய சொல்லி பொறுப்பை ஒப்படைப்பது அறிவற்ற செயலாகும். ஒரு பொறுப்பை ஒப்படைக்கும்போது நீங்கள் பார்க்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள், திறன் மற்றும் அனுபவம், நம்பகத்தன்மை, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, பொறுப்புணர்ச்சி ஆகியவையாகும்.