மகிழ்ச்சியைத் தொலைக்கும் பெரும்பாலோர்க்கு ஏற்படுவது ஸ்ட்ரெஸ்தான். சோஷியல் ஸ்ட்ரெசின் விளைவுகளை அறிய ஹார்வர்டு பல்கலைக்கழகம் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே போட்டி வைத்தது. அதில் அவர்களிடம் பரபரவென்று கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் நிதானிப்பதற்குள் சரமாரியாக கேள்விகள் வந்து விழுந்தன. இதில் ஒரு பிரிவு மாணவர்கள் திணறி தோற்றுப் போனார்கள்.
இன்னொரு பிரிவினர் திறமையோடு பதில் கூறினர். கடைசியில் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ரகசியத்தை வெளியிட்டனர். போட்டி தொடங்குவதற்கு முன் ஒரு பிரிவு மாணவர்களிடம் "உங்களிடம் கேள்விகள் கேட்டு ஸ்ட்ரெஸ்க்கு உட்படுத்துவோம். அதனால் மூச்சு திணறும். வியர்வை சுரக்கும். இதற்கெல்லாம் நீங்கள் பயப்பட வேணடாம். பரபரப்பான சூழலை சமாளிக்க உங்களை தயார் படுத்துவதால் ஏற்படுவதே இது. இதனால் உங்கள் மூளைக்கு ஆக்சிஜன் செலுத்தப்படும். அதன் காரணமாக நீங்கள் விரைவாகவும் கூர்மையாகவும் சிந்திக்க முடியும். நேர்மறை எண்ணத்தோடு இந்த சூழலை அணுகுங்கள் "என்று விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. இப்படித் தயார் செய்யப்பட்ட மாணவர்கள் ஆற்றலோடு செயல்பட்டனர்.
விழிப்புணர்வு கொடுக்கப்படாத மற்றொரு பிரிவினர் எதிர்மறை எண்ணத்தில் பாதிப்பிற்கு ஆளானார்கள். இந்த ஆய்வின் முடிவு என்ன தெரியுமா? பிரச்னையோ சூழலோ உங்களுக்குக் கெடுதல் தராது. எந்த சமயத்திலும் நேர்மறையாக இருந்தால் எந்த சூழலையும் மகிழ்ச்சியாக மாற்றிவிடும் என்பதுதான்.
பர்மாவில் உள்நாட்டு கலவரத்தில் மக்கள் அச்சத்துடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். அடர்ந்த காடு மலை என்று நடுக்கத்தோடு சென்ற கூட்டத்தில் வயதானவர் ஒருவர் இருந்தார். அவரால் நடக்க முடியவில்லை. தன் மகனிடம் "இனிமேல் என்னால் முடியாது நீங்கள் போங்கள்" என்றார். மகன் ஒரு உபாயம் செய்தான். தன் சிறுவயது மகனை அவரிடம் கொடுத்து, "அப்பா இவனாலும் நடக்கமுடியவில்லை. இவனை தூக்கிக் கொண்டு என்னால் நடக்க என்னால் முடியவில்லை. இவனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் இனி இவன் உங்கள் பொறுப்ப," என்றான். அவ்வளவுதான் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாத அவர் பதபதைத்துப் போய் மகனிடம், "உன்னால் முடியாவிட்டால் போ நான் தூக்கி வருகிறேன்" என்று கூறி குழந்தையை வாரி அணைத்து தூக்கிக் கொண்டு மற்றவர்களை விட வேகமாக நடந்தார். பத்திரமாக நாடு கடந்தார். இந்த சம்பவம் நமக்குச் சொல்வது ஒன்றுதான்.
விருப்பமும் பொறுப்பும் இருந்தால் ஸ்ட்ரெஸ் மூலம் நன்மையே விளையும். அதுவே உடலில் திடத்தையும் வேகத்தையும் அளித்து தனக்கு முன் எழும் எந்த சவாலையும் எதிர்கொண்டு வெற்றி பெறும் ஆற்றலையும் தரும். இனிமேல் உங்களுக்கு அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் விழிப்புணர்வுடன் இருந்து அதை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அழுத்தமே ஆனந்தமாக மாறும். அதன் விளைவாக மகிழ்ச்சி மலரும்.