உறவை வளர்ப்பது எது தெரியுமா?

motivation image
motivation imageImage credit - pixabay.com

சில வீடுகளில் தம்பதியர் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்களைப் பார்த்து உங்களுக்குள்  சண்டையே வராதா என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு அவர்கள் கூறும் பதில், கடவுளுக்கே கணவன் மனைவிக்குள் சண்டை வந்ததாக புராணங்களில் படித்திருக்கிறோம். அப்படி இருக்கையில் சாதாரண மனித பிறவிகளாகிய நாம் எம்மாத்திரம். ஆதலால் நாங்களும் அப்படித்தான் என்று இயல்பாக கூறினாலும், தங்களுக்குள் அந்நியோன்யம் குறையாமல் இருப்பதைப் பார்க்க முடியும். அப்படி இருப்பதால் ஏற்படும் நன்மை என்ன என்பதை இப்பதிவில் காண்போம். 

59 ஆண்டுகள் மிகவும் ஒற்றுமையாகவும், சுதந்திரமாகவும், சுகமாகவும், இயல்பாக சேர்ந்து வாழ்ந்து தம்பதியர் பலரிடம் உங்கள் நீடித்த இல்லறத்தில் ரகசியம் என்ன? என்று தனித்தனியே கேட்டுப் பார்த்தால் அவர்கள் கூறும் பதில் நம்மை வியக்க வைக்கும். 

என் கணவர் நான் ஒரு முறை நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தபோது என்னைக் கவனித்துக் கொண்ட விதம், என் பெற்றார் பிறந்தாருக்கு சிரமம் என்று வந்த பொழுது வைத்த கை வைத்து தாங்கிய விதம், இப்படி என் கணவர் எனக்காக செய்த தியாகங்கள் என்று மனைவிமார்கள் பட்டியலிடுவார்கள்.

அதையே கணவன்மார்களிடம் கேட்டாலும், என் அக்கா தங்கைகள் மற்றும் என் பெற்றோருக்காக அவள் விட்டுக் கொடுத்த தியாகங்கள். ஒவ்வொருவர் திருமணத்திலும் அவள் நடந்து கொண்ட விதம் மற்றும் பங்களிப்பு என்று பார்த்தால் அளவிட முடியாதது. எல்லாவற்றுக்கும் மேலாக நான் கடுமையாக பேசிய வார்த்தைகளையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவ்வப்பொழுது ஆறுதல் தேறுதல் வார்த்தைகளை சொல்லி, குடும்பத்தையே "நுகத்தடி மாடுகள் போல்" இழுத்துச் செல்ல வைத்த விதம் என்று அவர் ஒரு பட்டியல் இடுவார். இப்படிப்பட்ட அனுசரணைதான் குடும்பத்தை  ஒற்றுமைப்படுத்தி உறவுகளை ஒன்றோடு ஒன்று ஒட்ட வைத்து இழுத்துச் சென்றன என்பதை சாதாரணமாக நீண்ட வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பவர்களி டம் கேட்டால் புரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலில் உதடுகள் வறண்டு போகாமல் இருக்க 4 எளிய வழிகள்!
motivation image

எல்லாவற்றுக்கும் மேலாக இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து இப்படி பேசிக் கொள்கிறார்களோ? இல்லையோ? மூன்றாவது நபர் யார் வந்து இவர்களிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டாலும் அவர்களிடம் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் அன்பு கலந்த நெஞ்சத்தோடு பாராட்டி பேசுவதை நன்றாக கேட்கலாம். அதைக் கேட்கும் பொழுதே நமக்குள் ஒரு பரவசம் தோன்றும். இன்னும் சொல்லப்போனால் ஒரு பாசிட்டிவ் எனர்ஜியை இது ஏற்படுத்தும். 

இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவென்று  யோசித்துப் பார்த்தால், அவர்கள் திருமண வாழ்க்கை என்பதை உரிமைகளை நிலை நாட்டவே என்று நினைத்து  தோற்காமல், உரிமைகளை விட்டுக் கொடுப்பதே உறவுகளை வளர்க்கும் என்று தெரிந்து வைத்திருந்து ஜெயித்திருக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. வருங்கால தூண்களும் இதை செயல்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.  சின்னச் சின்ன பிரச்னைகளை தாமே  தங்களுக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாமே!  நாமும் நல்வழியில் நடந்து இளைய சமுதாயத்தினருக்கும் இதை புரிய வைப்போமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com