

உலகை வெல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் அலெக்சாண்டரை மாவீரன் ஆக்கியது. 'முடியாது என்ற சொல் இருக்கவே கூடாது' என்ற நம்பிக்கைதான் நெப்போலியனை பிரான்சிற்கு அதிபதியாக்கியது. 'சுதந்திரம் அடைந்தே தீருவோம்' என்கிற காந்தியடிகள் நம்பிக்கைதான் பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சாவு மணி அடித்தது.
வானில் பறக்க முடியும் என்ற நம்பிக்கைதான் ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடிக்க உதவியது. நம்பிக் கெட்டவர்கள் நானிலத்தில் இல்லை. நம்பிக்கையற்றுத் தோற்றவர்கள் நிறைய உண்டு. பாபரின் அழியாத நம்பிக்கைதானே நாடோடி நிலையில் இருந்த மொகலாயர்களை நாடாள வித்திட்டது.
அகத்தில் துணிவு, உதட்டில் இன்சொல் முகத்தில் மகிழ்ச்சி கொண்டு உழைத்தால் முன்னேற முடியும். 'பகைவனுக்கு அருள்வாய் என இறைவனிடம் வேண்டும் பாரதியின் அருள் கொண்ட நெஞ்சினைப் பெறுவோம். உலக மக்களிடம் அன்பு கொண்டதால்தான் புத்தர் கானகம் போனார். மக்களிடம் கொண்ட நேசிப்பால்தான் இயேசு சிலுவை சுமந்தார். நல்ல நேசிக்கும் மனம் கொண்டதால்தான் நபிகள் நாயகம் கல்லடியையும் ஏற்றார்.
நாடு மீதும், மக்கள் மீதும் கொண்ட அன்பால்தான் மகாத்மா தன்னையே நாட்டுக்கு அர்ப்பணித்தார். நேசிக்கப்படும்போது மட்டுமே வாழ்வு சுவையாகிறது. இல்லையேல் வாழ்வே கமையாகிவிடும் 'எல்லோரும் ஒன்றே இந்தச் சிந்தனை நம் தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே பிறந்தது. அது கருதியே ஊருடன் ஒத்து வாழ் என்னும் ஓர் உயரிய முதுமொழி எழுந்தது.
‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’ என்ற எச்சரிக்கை உணர்வு அன்று விதைக்கப்பட்டதே, அதற்கும் ஒருபடி மேலே சென்று புறநானூற்றுக் கவிஞன், கணியன் பூங்குன்றனார். 'யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பாடி மகிழ்ந்தார்.
இந்த நூற்றாண்டிலும் இன்னும் நாம் மனிதர் ஒன்றே எனும் உணர்வை விதைக்காது, மதத்தின் பெயராலும், இனத்தின் பிரிவாலும், நாடு என்கிற உணர்வாலும், பகைதேடி அழிவது முறையாகாது. கணியன் பூங்குன்றனாரின் சமத்துவக் கருத்தைப் புதிதாக ஏற்று இதயத்தில் பதிப்போம். மனித நேயம் மண்ணில் மலர்ந்து, மனிதன் என்பவன் ஓர் குலம் என்பது வேதமாக ஒலிக்கட்டும்.
மனிதர் ஒன்றே என நினைக்கிற புதிய உலகம் காண்போம். ஒற்றுமை விதை விதைத்து, அன்பு நீர்பாய்ச்சி, உறவு என்னும் உரமிட்டு புதிய உறவுப்பயிர் வளர்ப்போம்.
பழைய சோகத்தை பகல் கனவாய் மறந்து ,இனி புதிதாய் பிறப்போம். நேற்றைய சோகம் கனவாகி களைவதோடு ,இன்றைய கவலை கதையாகி முடியட்டும். இனிவரும் பொழுதுகள் நமக்காக விடிந்து நம்பிக்கை விதையினை விதைப்போம்! சோம்பல் என்ற கொடிய நோயை சுருட்டி வைத்து சுறுசுறுப்பாக விழித்தெழுங்கள்!