

வாழ்க்கை என்பது நதியைப் போன்றது. முடியும் வரை நாம் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். இறுதியில் சங்கமிக்கும் இடத்தில் நம்முடன் எதுவும் வருவது இல்லை. அதைத்தான் நாம் வரும் போது எதுவும் கொண்டு வருவதும் இல்லை. போகும் போதும் எதுவும் கொண்டு போவதும் இல்லை என்கிறார்கள்.
இடைப்பட்ட கால வாழ்க்கையில், நாம் ஒவ்வொருவரும், தனித்தனியாக ஒவ்வொரு வேஷம் போட்டுக்கொண்டு நடிக்கிறோம் அவ்வளவுதான். இதில் சிலர் இலக்கணத்தோடு நடித்து வாழ்ந்து புகழோடு மறைகிறார்கள். பலர் தலைக்கனத்தோடு நடித்து, வாழ்ந்து வீழ்ந்து உருக்குலைந்து போய் காணாமல் போகிறார்கள்.
இப்படிப்பட்ட வாழ்க்கையில் பல அனுபவங்கள் நம்மிடையே அரங்கேற்றம் நிகழ்த்தி விட்டுச் செல்கிறது காலம். சிலரை தோல்வியில் விழுந்தாலும் எழுந்து நின்று வெற்றியின் ரகசியம் கண்டுவிட்ட மகிழ்ச்சியின் உச்சத்தை காட்டுகிறது. சிலரை செக்கு மாடு மாதிரி, சுற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. காலம் நம்மை விழுங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
மனிதன் எந்த நிலையிலும் தன்னைத்தானே ஒருபோதும் தாழ்வுமனப்பான்மைக்குள் தன் மனதை தள்ளிவிடக் கூடாது. அது தன்னைத் தாக்கும் பகைவனைவிட மோசமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த தன்மை இருக்கும் இடத்தில், தன்னம்பிக்கையும், நேர்மறை எண்ணங்களும் இருக்காது. வாழ்க்கையில் மீண்டு வரவும் முடியாது என்பதை உணர்ந்து விழிப்புடன் இருங்கள். எந்த தருணத்திலும் அதனை நழுவ விட்டு விடாதீர்கள்.
வாழ்க்கையில் எப்போதும் நாம் நல்லவர்களை மட்டுமே சந்திக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அது தவறு. சந்தித்த எல்லோரிடமும் நல்லவராக இருக்க முயற்சி செய்வதே நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.
எல்லோர் இடத்திலும் அன்பை மட்டுமே விதைப்போம். ஏனெனில் அது மட்டுமே அதிக வட்டியுடன் நமக்கு திரும்பக் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. ஆகவே, பகை வளர்த்து, மனங்களில் கசப்பான அனுபவங்களை பெறுவதைக் காட்டிலும், அன்பை விதைத்து பிறர் மனங்களில் என்றும் வாசிப்போம்.
வாழ்க்கையில் நம் மனதில் என்றும் சூடக் கூடாத மலர் என்பது அவநம்பிக்கை. அதை நாம் சூடிக்கொண்டால், எலி வலையில் சிக்கிய கதை ஆகிவிடும். ஒரு நிமிடமே வாழ்க்கை இருக்கிறது என்றாலும், அவஸ்தை தரும் அவநம்பிக்கை தவிர்த்து, தன்னம்பிக்கையோடு வாழ்ந்தால், அந்த இறுதி நொடி கூட நல்ல ஒரு தொடக்கமாக மாறும்.
எனவே, நம் வாழ்க்கை நம்மிடையே இருக்கும் ஆழமான தன்னுடைய நம்பிக்கையில் உள்ளது என்பதை அறிந்து, கடைசி வரை, பசுமரத்தில் அடித்த ஆணி போல், நம்பிக்கையை மனதில் ஏற்றி, வெற்றி பெறச்செய்யும் மனதோடு வாழ்வோம்.
வாழ்க்கையில் நம்மோடு மிஞ்சுவது, கடல் அலைகள்போல் நம் கால்களை வருடிச்செல்லும் சில மறக்க முடியாத அனுபவங்கள் மட்டுமே.
நம்முடைய வாழ்க்கையில், நாம் விழுந்தபோது, விலகி ஓடுவதும், எழுந்துவிட்டால் விரைந்து வந்து நம்மோடு ஒட்டிக்கொள்ளும் மனிதர்களை மறந்துவிடுவோம். நம் கஷ்டங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் மனிதர்களை என்றும் மறக்காமல் இருப்போம்.
வாழ்க்கையில் மனதோடு, மனிதம் கலந்து வாழும் வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, நம்மோடு, நம் மனித இனமும் சிறக்க வாழ்ந்து காட்டுவோம்!