

வாழ்க்கையில் கோபம் என்பது பொல்லாதது. அதனுடன் பயணிக்கும், எவரும் பல இன்னல்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கோபத்தில் எது கிடைத்தாலும் வீசி எறிய எல்லோராலும் முடியும். ஆனால் அந்த கோபத்தையே வீசி எறிய ஒரு சிலரால்தான் முடியும். அந்த ஒரு சிலரில் நீங்களும் ஒருவராக இருங்கள்.
கோபத்தின் ஆரம்பம், முதலில் மனதில் கள்ளி செடியாக முளைக்கும். கொஞ்சம் கொஞ்சமாக புத்தியில் படர்ந்து வினைகள் ஆற்றச் செய்யும். முடிவில் விஷம்போல் உடலில் ஏறி, கண்முன் தெரியாமல் வார்த்தைகளை கக்கும். இதைத் தவிர வேறு எந்த விதத்திலும் நல்வினை ஆற்றாது. ஆகவே கோபம் தவிருங்கள். ஒரு புன்னகையில் அதனை கடந்து வெல்லுங்கள்.
கோபம் என்பது நம்முடைய உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உணர்வுகளை கட்டுப்பட்டு இருப்பவன் நிம்மதியோடு நல்வாழ்வின் கரங்களை பற்றி இருப்பான். மாறுபட்டு இருப்பவன் பல கஷ்டங்களையும், கவலைகளையும், இன்னல்களையும் சுமந்து வாழும் நாட்கள், காலத்தை தொலைத்து விட்டு, நஷ்டப்பட்டு போவான். உங்கள் கரங்களை நல்வாழ்வு பற்றற்றும்.
வாழ்க்கையில் உங்கள் மேல் அன்பு செலுத்தும் நபர்களை நேசியுங்கள். உங்கள் மேல் கோபம் கொண்ட நபர்களை, ஏன் இப்படி நம்மீது கோபப்படுகிறார்கள் என்று சற்று யோசியுங்கள். உண்மையில் உங்கள் மீது தவறுகள் இருப்பின், அவர்களை அதிகமாக நேசியுங்கள். மாறுபட்டு இருந்தால் அவர்களை தவிர்க்க பாருங்கள். வாழ்க்கையில் சிந்திக்கும்போதுதான் பல நல்ல பதில்களும் பதிவுகள் ஆகும்.
கோபம் என்பது இருமுனை ஆயுதம். கோபத்தில் ஒருவர் தன்னை இழக்கும் போது, எதிர்வினை தாக்குதல் அதிகமாக இருக்கும். இதன் முடிவில் இருதரப்பும் தீங்கு விளைவிக்கும். ஆகவே கோபம் கொள்வதால் இரு தரப்பினரும் நன்மை இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து பெரும்பாலும் நம்மை சிக்கலில் சிக்க வைக்கும் கோபத்தை தவிர்த்து பொறுமையுடன் பேசி தீர்த்துக்கொள்ள முற்படுவது நல்லது.
வாழ்க்கையில் நிதானமான கோபம் கொள்ளும் மனிதர்கள், எதிரிகளைக் காயப்படுத்துவதும் இல்லை. தானும் காயப்படுவதும் இல்லை. அது எச்சரிக்கை மணியாகவே இருந்து, இரு தரப்பினரையும், யோசிக்கவைக்கும். இதனால் கோபப்படும் போது, தன்னிலை இழக்காமல், நிதானத்துடன் கையாளும் தன்மை கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் கோபத்தை மனதில் அடக்குவதை பெருந்தன்மை என்று நினைப்பவர்களின் செய்கை முட்டாள்தனமானது. அது உள்ளுக்குள் புரையோடி, மன அழுத்தம் கூடி, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் எதிர்வினை ஆற்றி, பலவீனத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து கோபத்தை அடக்காதீர்கள்.
வாழ்க்கையில் சிலபேர் புயலென சீற்றம் கொண்டு, கோபத்தை வன்மத்தில் கலந்து, தான் அப்போது வீரமாக இருப்பதாக நினைத்து, தானே அழிந்து போவார்கள். இது பெரும் ஆபத்தானது. இது சிலநேரம் சமூக நல்லிணக்கத்தின் ஆணிவேரை புடுங்கி விடும். தயவுசெய்து கனவில் கூட இப்படி நடக்கவேண்டாம்.
ஐயன் வள்ளுவன் தன் குறலில், உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்' என்று கூறியிருக்கிறார். அதாவது, உள்ளத்தால் சினப்படாதவனாக இருப்பானாயின், அவன் விரும்பியவை யாவும் உடனே கைகூடும். நாமும் அவ்வாறே கடைபிடித்து வாழ்வோம்!