

வாழ்க்கையில் நாம் பலவித மைகளை பயன்படுத்தி உள்ளோம். உதாரணமாக கண்ணுக்கு மை, குழந்தைகளுக்கு திருஷ்டிபடாமல் இருக்க கருப்பு மை, எழுதுவதற்கு பேனா மை, இப்படி பல்வேறு மைகளை பயன்படுத்தினாலும், வாழ்வின் ஆதாரங்களாய் பலவித நெறிமுறைகளையும் கையாளவேண்டும். அதோடு கடைபிடிக்கவும் வேண்டும்.
அதன் வகையில் எளிமை, தூய்மை, நோ்மை, உண்மை, முதுமை, இவை 5 சாராம்சங்களும் பலவித நெறிமுறைகளுக்கு அப்பாற்பட்டு கடைபிடித்து வாழ்வதே நல்லதாகும். எளிமை, தூய்மை நோ்மைக்கு எடுத்துக்காட்டாய் பல தலைவர்கள் தோன்றி சாதனைகள் பல செய்து மறைந்தாலும், மக்கள் மனங்களில் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாா்கள். காந்தி, காமராஜா், கக்கன், போன்றவர் களைப்போல, தூய்மையை கடைப்பிடிக்கவேண்டும்.
மேற்படி நல்ல குணங்களானது நமக்கு மட்டுமல்லாது நமது சமுதாயத்திற்கும் ஊன்றுகோலாக அமையுமே"!
நோ்மை என்பது உண்மை பேசுதல், நீதி தவறாமல் செயல்படுதல், நல்ல ஒழுக்கம் ஆகியவற்றைக் குறிக்கும்.
இது ஒரு மிகப்பொிய அறநெறியாகும். நம்பகமாக வாழ்வது, கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, தவறு செய்யாமல் இருப்பது, இவைகளே மனிதனை எடைபோடும் தராசு என்றே சொல்லலாம்.
உண்மையாக வாழக்கற்றுக்கொள்ளவேண்டும். மனதில் நினைப்பதை வாா்த்தைகளாகவும், செயல்களாகவும் மாறாமல் நோ்மையுடன் வெளிப்படுத்துவதே உண்மையான செயலாகும். இது உள்ளத்தூய்மையால் இருந்து பிறப்பதாகும்.
பொதுவாக உண்மை பேசுவதே உண்மையான வாழ்க்கைக்கான அடித்தளமாகும். வாக்காலும் செயல்பாடுகளாலும் தவறாமல் நடப்பதே உண்மையின் உயிா்வேராக அமையும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இருக்க வாய்ப்பில்லை.
அதேபோல சுயத்தை உணர்வதும் உண்மையின் உரைகல் எனவும் சொல்லலாம். வாழ்க்கையில் எத்தகைய ஏற்றம் இருந்தாலும் எளிமை கடைபிடிப்பதில்தான் வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஆதாரம் ஆகும். இவை அத்தனையும் கடைபிடித்து வாழ்ந்து வருவதற்கு அளவே கிடையாது.
முதுமையிலும் நம்மால் முடிந்தவரை அனைத்து குணநலன்களையும் கடைபிடித்து அறிவுரை என்ற பெயரில் அதிகம் பேசாமல் வாாிசுகளின் நலன் கருதி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அன்பான அழகான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து பாா்க்கலாமே!
பொதுவாக நல்ல தரமான பழுதில்லாத விதைகளை வாழ்க்கை எனும் நிலத்தில் பயிரிடுவோம். நல்லதே செய்வோம் என்ற எண்ண ஓட்டங்களோடு ஆசை, பொறாமை எனும் நச்சுக்களையை அகற்றி நல்ல நிதானமான வாழ்வெனும் மகசூலை அறுவடை செய்வோம்!