

ஒரு சிறிய விதையை நட்டு பக்குவமாக வளர்த்தால் அது அழகான பெரிய மரமாக ஆவது இயற்கையின் நியதி. அதேபோல ஆரம்பத்தில் சரியான விதை என்னும் இலட்சியத்தை மனதில் விதைத்து ஆனந்தமாக வாழவேண்டும் என்ற எண்ணம் கொண்டால் அது வளர்ந்து செயல் என்னும் மரமாக கட்சி தரும்.
வெற்றி அவரவர் ஆனந்த வாழ்க்கையையும் எண்ணத்தையும் பொறுத்திருக்கிறது என்று கூறினார் நெப்போலியன். துன்பம் போ, இன்பம் வா என்ற மனப்பான்மையுடன் உங்களுடைய லட்சியத்தில் திடமாகவும் உறுதியாகவும் இருந்தால் வெற்றி அடையலாம்.
உங்களுக்கு இன்ப துன்பங்களை தரும் சக்தி உங்களிடம் மட்டும் தான் இருக்கிறது. ஆகவே உங்களைவிட மேலான நிலையில் இருப்பவர்களை பார்த்து நீங்கள் ஏக்கம் கொள்ளத் தேவையில்லை. நீங்களும் நன்கு முயற்சி செய்து அத்தகைய நிலையை அடைய எண்ணம் கொள்ளவேண்டும்.
இல்லையென்றால் உங்கள் உடல்நிலை கெட்டு, துன்பம் வந்து சேரும். அதற்குப் பதிலாக உங்களை விட கீழ் நிலையில் இருப்பவரை பார்த்து நீங்கள் பெருமிதம் கொள்வதே ஆனந்தம் அடைவதற்கான சிறந்த வழி.
எத்தகைய சூழ்நிலையிலும் மகிழ்ச்சி நிலையில் அணுகும் வழிவகைகளை கடைபிடித்து வரவேண்டும். நல்ல நினைப்புகளும் செயல்களும் ஒரு காலத்திலும் கெட்ட பலன்களை கொடுக்காது. அதுபோல கெட்ட நினைப்புகளும் செயல்களும் ஒருபோதும் நல்ல பலன்களை அளிக்காது.
ஆனந்த வாழ்க்கைக்கு அடித்தளமே நீங்கள் பரிசுத்த எண்ணம் கொண்டவராக இருப்பதுதான். நல்ல எண்ணங்களின் அளவுகோல் ஆனந்தம் அனுபவிப்பதே ஆகும்.
நமது உள்ளத்தை இன்பத்தோடு வைத்திருக்க முயலுவதோடு, போராடவும் செய்யலாம். உருப்படியான எண்ணங்களை எண்ணுவோம். மகிழ்ச்சியை நெஞ்சில் உலாவ விடுவதற்கு பெரும் முயற்சிகள் செய்வோம்.
இதோ உங்கள் முன்னால் ஒரு புதிய திட்டம். இன்றைக்காவது நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எழுந்தவுடன் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள் என்கிறார் பிரான்ஸ் நாட்டின் தத்துவஞானி ஒருவர்.
இன்பமடைந்து அமைதியுடன் வாழ ஒரே வழி மகிழ்ச்சியோடு நினைப்பதும் மகிழ்ச்சியோடு செயல்புரிவதும் ஆகும். உத்வேகம் நிரம்பிய புத்தம் புதிய செயலொன்றை செய்ய தொடங்குவதிலிருந்து நீங்கள் உணர்ச்சி பெற்று விதியையும் எதிர்க்கும் ஆற்றல் உண்டாகி வாழ்க்கையே இனிக்க ஆரம்பிக்கிறது.
உள்ளத்தை எப்பொழுதும் பழமையான தேவையற்ற எண்ணங்களில் இருந்து காப்பாற்றி தெள்ளிய நீரோடையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
உங்களது எதிர்காலம் எவ்வாறு அமைந்தாலும் அதன் முழு பொறுப்பும் உங்களையே சாரும். உங்கள் உள்ளத்தை எத்தகைய சக்திகள் எதிர்த்தாலும் உள்ளத்தில் இருக்கும் உற்சாகத்தை நம்பிக்கையை பலியிட்டு விடக்கூடாது.