

சிறுக சிறுக பணம் சேர்த்தால்தான் வாய்ப்பு கிடைத்தவுடன் நாம் நினைத்த வீடு வாங்க முடியும். இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்பட்ட பி. டி .உஷா ஒரே நாளில் ஓட்டப்பந்தயத்தில் ஓடி வென்றுவிடவில்லை. அவர் சிறுமியாக பள்ளிக்கூடம் சென்ற காலங்களில் போகும்போதும் ஓட்டம்தான். வீட்டுக்கு திரும்பும்போதும் ஓட்டம்தான்.
இப்படி ஓடி ஓடித் தன்னை தயார்படுத்திக் கொண்டதால் தான் வாய்ப்பு கிடைத்தவுடன் அவரால் தங்கப் பதக்கங்களை ஓட்டப்பந்தயங்களில் அள்ளி குவிக்க முடிந்தது. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் நம் வீட்டின் கதவுகளை தட்டி ,நாம் விரும்பும் அத்தனை செல்வங்களையும் நாம் கேட்காமலேயே, வெற்றி தேவதை நமக்கு கொண்டு வந்து கொட்டிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றிபெற நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணுபவர்கள் குறைவாக இருக்கிறார்கள். எதையும் இலவசமாக கொடுத்தால் வாங்கி மகிழ்ச்சி அடைவதோடு வெற்றியைக்கூட இலவசமாக எதிர்பார்க்கிறார்கள்.
விரைவிலேயே வெற்றியாளனாக ஆகவேண்டும் என எண்ணக்கூடாது. ஏனெனில் ஒரு நாளில் வெற்றியாளனாக ஆக வேண்டுமானால் 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிறார் ஒரு அறிஞர்.
மேலும் வெற்றிபெற எந்த ஒரு குறுக்கு வழியிலோ, அல்லது நீதிக்கு புறம்பான செயல்களிலோ இறங்கி விடக்கூடாது. அவ்வாறு கிடைக்கும் வெற்றி நிலைத்தும் நிற்காது.
எடுத்துக்காட்டாக கனடா நாட்டு ஓட்டப்பந்தய வீரரான பென் ஜான்சன் மற்றும் ஒரு சூப்பர் ஸ்டாராக விளங்கிய டீகோ மரடோனாவும் வெற்றியாளராக விளங்க வேண்டும் என நினைத்து அது போலவும் ஆனார்கள்.
ஆனால் அவர்கள் வெற்றி பெற்றது ஒரு பிரச்னையாக மாறிவிட்டது. உலகில் விளையாட்டு அரங்கில் தன் திறமையை காட்டி நம்பர் ஒன்னாக புகழ்பெற வேண்டும் என்ற லட்சியம் போய், எந்த வழியிலாவது வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என்ற வெறி விளையாட்டு வீரர்களின் ரத்தத்தில் ஊற ஆரம்பித்திருக்கிறது.
சியோல் நகரில் 1988 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்போடு அமெரிக்க வீரர் காரல் லூயிஸ் காத்திருக்கிறார். இவருடன் போட்டியிட வந்த ஜான்சன் ஓடினாரா? அல்லது பறந்தாரா? என அனைவரும் வியக்கும் வகையில் கருஞ்சிறுத்தை போல ஓடி கார்ல் லூயிசை இரண்டாம் இடத்திற்கு தள்ளி புதிய சாதனை நிகழ்த்தினார்.
வெற்றி பெற்ற மிதப்பில் என் பெயர் பென் ஜான்சன்.' உலக சாதனை விளையாட்டு சரித்திரத்தில் பேசப்படும்' என எந்த நேரத்தில் அவர் சொன்னாரோ அது விபரீதமான குற்றச்சாட்டுகளுடன் பலித்துவிட்டது.
உலகின் அதிவேக வீரர் என ஒலிம்பிக் சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய பென் ஜான்சன் போதை வேகவீரர் என்ற மோசமான பெயரை பெற்றதால் அவருக்கு அளிக்கப்பட்ட பதக்கமும் பட்டமும் பறிக்கப்பட்டு காரல் லூயிஸ் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஆகவே வெற்றிக்கனியை எந்த வழியிலாவது பறிக்க முயலாமல் நீதி நேர்மையான வழிகளிலேயே முயல்வதே உத்தமம்.