

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் கூட உன்னதமான நேரமாக மாற்றக் கூடிய அற்புத தருணத்தை தருவதுதான் நேர மேலாண்மை. காலத்தோடு பயிரிடும் விதைகள் போல்தான், நாம் எல்லோரும் நேரத்தோடு செயலாற்றும் தன்மையும் என்பதை புரிந்து கொள்வோம்.
வாழ்க்கையில் தவறவிட்ட நேரங்கள் எல்லாமே, வாய்ப்புகளின் வேர்களை பிடுங்கிப் போட்டதற்கு சமம் என்பதே நிதர்சனமான உண்மை. வாழ்வின் உச்சிக்குச் சென்று இருக்க வேண்டிய வாய்ப்பு என்பது நமக்கு அறியாமலே தவறவிட்டு இருப்போம்.
வாழ்க்கையில் லட்சியம் கொண்டு பயணிக்கும்போது, ஒருபோதும் அலட்சியத்தன்மை ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம். இரண்டுக்கும் இருக்கும் ஒரு எழுத்து வித்தியாசம் வாழ்க்கையை புரட்டி போட்டுவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் லட்சியம் நம்மை முன்னோக்கி நகர்த்தும் காரணச் சொல். அலட்சியம் அப்படியே எதிர்வினை ஆற்றும் சொல் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய அலட்சியத்தால் முறையான திட்டமிடல் இல்லாமல், வாழ்க்கையில் சில சமயங்களில் இன்னல்களை சந்திக்க நேரிடும்.
நேற்றைய இழந்த நிமிடங்கள் மற்றும் அலட்சியங்கள் எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்று, ஒவ்வொரு நிமிடமும் அலட்சியப் படுத்தாமல், செயல் ஆற்றும் எண்ணங்களை சுறுசுறுப்பாக இயங்கி, லட்சியப் பயணத்தில் தடையின்றி முன்னேற்றம் அடைந்து சிறப்பாக வாழ்வோம்.
வாழ்க்கையில் லட்சியம் எப்படி நம்மை உயர்த்தும் காரணியாக இருக்கோ, அதேபோல்தான் முடியும் என்ற சொல்லின் தன்மையும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். முடியும் என்ற சொல்லில் முதலில் இருப்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கை கரங்களை வலுப்பெறச் செய்யும்.
சிற்பியின் பார்வையில் கல்லும் சிலையாகும். ஏனென்றால், அவன் பார்வையில் இருப்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கையே அவன் செயலை, மற்றவர்கள் போற்றவும், வணங்கவும் செய்து விடுகிறது. ஆகவே முதலில் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் தன்னாலும் முடியும் என்ற நம்பிக்கை வையுங்கள்.
வாழ்க்கையில் முடியாது என்று எதுவும் இல்லை. தன்னால் முடியாதது எவராலும் முடியாது என்று நினைத்து செயலாற்றும் போதுதான், உங்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வெற்றிப் பெறமுடியும்.
நிற்கும் குதிரையின் கால்களுக்கு என்றும் மதிப்பில்லை உணருங்கள். ஓடும் குதிரையின் கால்களுக்குத்தான் என்றும் மதிப்பு இருக்கும். அதேபோல்தான் உங்களுடைய வாழ்க்கையும். ஓடிக்கொண்டே இருங்கள். மதிப்பு உங்களைத்தேடி தானாக வரும்.
வாழ்க்கையில் தன்னுடைய குறிக்கோளில் உறுதியாக இருக்கும் எவறுமே லட்சியவாதிதான். அந்த லட்சியத்தோடு போராடும் எந்த ஒரு போராளியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஒருபோதும் அவர்களின் சாதனைச் சிறகுகளை எவராலும் வெட்டி வீழ்த்த முடியாது.
பேருந்துகள் மற்றும் விமானங்களை இயக்கம் மனிதர்கள், ஆபத்து என்று தெரிந்தும் பட்டாசு ஆலையில் வேலை செய்பவர்கள், இப்படி இன்னும் எத்தனையோ ஆபத்தான செயலகளில் ஈடுபடும் மனிதர்கள் யாவரும் தன்னம்பிக்கையோடு உழைப்பவர்கள். இரும்பு மனதோடு இருக்கிறவர்களை நினைத்து ஒவ்வொருவரும் தங்களுக்குள் நம்பிக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது ஒரு போராட்டக்களம். ஒவ்வொருவரும் தன் லட்சியப் பயணத்தில் வாழ்ந்து காட்டுவோம். தன்னம்பிக்கை சிறகுகள் விரித்து சிகரம் தொட்டு உயர்வோம்!