

கண்களில் தூசி விழுந்தால் வலிப்பதோடு, நீர்வரவும் ஆரம்பிக்கிறது. அதுபோலவே நல்ல பெயருக்கு சிறிதளவு மாசு ஏற்பட்டாலும் நற்பெயர் முழுவதும் கெட்டுப் போய்விடும். கவுரவம் என்பது விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும்.
மாணிக்கத்தில் சிறுகளங்கம் ஏற்பட்டால் அதன் மதிப்புக் குறைந்து விடும். அதுபோல நம்முடைய நற்பெயருக்கு சிறு இழுக்கு ஏற்பட்டாலும் வாழ்வு முழுவதும் கெட்டுப்போய்விடும்.
துருக்கிய பழமொழி 'கவுரவத்தை இழப்பதைவிடக் கண்களை இழப்பது மேல்' என்று கூறுகிறது.
நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நற்பெயரையும் நல்ல புகழையும் மங்காமல் மறையாமல் நம்முடைய திறமையாலும் நல்லொழுக்கங்களாலும் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
ஒழுக்கத்துடன் வாழ்வதே உயர்வான வாழ்க்கையாகும். நற்பெயரை ஒரு நொடிப் பொழுதில் அழித்து விடமுடியும். வீட்டைக் கட்டுவதோ கடினம். ஆனால் அதனை அழிக்க முயல்வது சுலபம்.
சின்ன தீக்குச்சியின் மூலம் வீட்டை சில நிமிடங்களுக்குள் கொளுத்திவிடலாம். ஆனால் ஒரு நாளில் ஒரு வீட்டை கட்டிவிட முடியாது.
நம்முடைய நற்பெயர் பனைமரம் போன்றது. பனை மரத்தின் உச்சியை வெட்டிவிட்டால் அது மீண்டும் துளிர்க்காது. இதேபோல் நம்முடைய நற்பெயர் கெட்டுவிட்டால் மீண்டும் அதனை உருவாக்க முடியாது.
பாலை போன்ற நற்பெயர் கீழே கொட்டிவிட்டால் மீண்டும் அள்ள முடியாது. நற்பெயரானது ஆன்மாவின் அருகிலுள்ள ஆபரணம்' என்கிறார் ஷேக்ஸ்பியர்.
"தன்னுடைய குடும்ப நற்பெயரைப் பற்றிக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாதவனிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டும். எனெனில் குடும்ப கௌரவத்தை பொருட்படுத்தாதவன் எந்த இழிவான செயலையும் செய்யத் தயங்கமாட்டான்.
கவுரவமற்ற வாழ்க்கை வாழ்ந்து பயன் ஒன்றும் இல்லை.. இதனால் தான் சிலர் கௌரவம் போய் விட்டதும் உயிரை விட்டு விடுகிறார்கள். கவரிமானைப்போல இறந்து விடுவது என்பது சற்று நேரம் துன்பம்தான். ஆனால் இழிவான பெயர் பெற்று வாழ்வது என்பது நீண்ட நாள் துன்பம் தரக்கூடியது. இதற்குச் சரியான உதாரணம் சிலப்பதிகாரம்.
நற்பெயர் கெட்டுவிட்டால் மீண்டும் அதனைத் திரும்பப் பெறுவது என்பது இயலாத காரியம். ஒழுக்கத்தின் வாசற்படியில் கால் வைத்துத் தான் கௌரவக் கோயிலுக்குள் போகமுடியும் என்பதனை என்றும் நாம் மறந்துவிடக் கூடாது.
வேங்கையானது ஒரு பசுவைக் கொல்லும்போது அப்பசு இடப்பக்கம் வீழ்ந்து விட்டால், அதனை உண்பது தனக்கு இழிவு என்று கருதி உண்ணாதாம்.
பால்வற்றக் காய்ந்தாலும் அதனுடைய சுவை குன்றாது. சந்தனம் அரைக்கப்பட்ட போதும் அதன் மணம் மாறாது.
அதேபோல நற்குடியில் பிறந்து வளர்ந்த நமக்குப் பல சோதனைகள் ஏற்பட்டாலும் செய்யத்தக்க செயல்களையே செய்ய வேண்டுமே தவிர செய்யத்தகாத செயல்களை ஒருபோதும் செய்யக்கூடாது.