

வாழ்க்கையில் பயணிக்கும் பொழுது ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க வேண்டியது இயற்கையின் நியதி. யாராலும் தவிர்க்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி ரூபத்திலோ, தருணத்திலோ முன்னேற்றம் நோக்கி செல்லும் பொழுது தோல்வி என்னும் தடங்கல் வந்து செல்லும்.
அதற்கு எதிர்பார்க்கும் காரணங்களைவிட, எதிர்பாரத, சில சமயங்களில் சிந்தித்து பார்க்க முடியாத அளவிலும் புரட்டிப் போடும் நிகழ்வுகளும் ஷாக் கொடுக்கலாம். அத்தகையவை குறிப்பிட்ட நபரின் கட்டுப்பாட்டிற்கு மீறியும் நடைபெறலாம்.
வாழ்க்கை பயணம் கரடு, முரடான ஏற்றம், தாழ்வுகளின் இடையே நகர்வதால் பயணம் முழுவதும் இன்பமாகவும், மேலேறி செல்லும் என்று உறுதியாக கூற முடியாது. பெரும்பாலான வெற்றியாளர்கள், சாதனை புரிந்தவர்கள் எப்பொழுதும் வெற்றிக்கனியை மட்டும் ருசித்தவாறு பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருப்பது இல்லை.
தோல்வியை தழுவி சறுக்கல்களை அனுபவிக்காமல் வெற்றி அடைந்தவர்களோ, சாதித்தவர்களோ இருக்கவே முடியாது.
எந்த துறையாக இருந்தாலும் சரி, எப்படிப்பட்ட திறமைசாலியாக இருந்தாலும் சரி, அனுபவஸ்தர்களும் சரி தோல்வியை சந்திக்காமல் அடுத்த கட்டங்களுக்கு நகர்ந்ததாக சரித்திரமே கிடையாது.
தோல்விகள் எப்பொழுதும் இழப்புகள், நஷ்டங்களில் முடிவது இல்லை. சற்று கூர்ந்து சிந்தித்தால் தோல்விகள் தெரிவிக்கும் நன்மைகள் புலப்படும்.
வெற்றிப் பாதையில் தோல்வியை தழுவிய சிலர் துவண்டுவிடாமல் நிதானமாக சிந்தித்தவர்களுக்கு வெற்றி காத்திருக்கும் அல்லது மறைந்து இருக்கும். இருந்த வாய்ப்புக்கள், சந்தர்ப்பங்கள் முன்னேறி செல்ல மறுபடியும் சந்தர்ப்பங்களை அளித்துள்ளன என்பது நிதர்சனமான உண்மை.
அத்தகைய நபர்கள் தோல்வியை சந்திக்கும் பொழுது ஏற்படும் வலி, வலிமை மிக்க ஷாக் மற்றும் தடங்கல்களால் அந்த கூறிப்பிட்ட அத்தருணத்தில் மனம் கலங்கி, எப்படி மீண்டு வருவது, வருவோமா என்று தவித்தாலும், காலம் கடக்க, அந்த தோல்வியின் முக்கிய காரணங்களை அலசி, ஆராயந்து, அனுபவஸ்தர்களுடன், நலம் விரும்பிய, விவேகமுற்றவர்களுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்க அத்தகைய தோல்விகள் வாய்ப்புக்களுக்கு வழி வகுக்கின்றன.
அவற்றை புரிந்துக்கொண்டு உரிய தேவையான நடவடிகைகளை மேற்கொண்டால் முன்னேற்றப் பாதையில் மேலும் அனுபவத்துடனும், தன்னம்பிக்கை, மனோதைரியத்துடன் களத்தில் இறங்கி பாடுபட்டு உழைத்து முன்னேறுவதை தடுக்க முடியாது.
முக்கியமாக, சந்திக்கும் தோல்விகள் தொய்வை மட்டும் அளிப்பதில்லை, கற்றுக்கொள்ள கடினமான புதிய பாடங்களையும் கொடுகின்றது.
தோல்வியை சந்தித்தவர் அதை ஒரு அரிய வாய்ப்பாக கருதி செவ்வன திருத்திக்கொண்டும் மேற்கொண்டு முன்னேற தேவையான நடவடிகைகளில் நம்பிக்கையுடன் தொடர்ந்தால் சாதிக்க முடியும்.