

மரங்களை வளர்த்தால் கனிகளை பறிக்கலாம். அறிவுத் திறனை வளர்த்தால் பல சாதனைகளை எட்டலாம். வளர்த்த மரங்கள் என்றும் கனிகளை தராமல் இருப்பது இல்லை. அதைப்போல் அறிவுத் திறனை வளர்க்கும் கல்வி தனை கற்றால், அது நல்வாழ்வு தனை தராமல் இருப்பது இல்லை.
மனிதனாக பிறப்பது அரிது என்பதால் நாம் அனைவரும் கல்விக் கண் திறந்து, கற்றவனாக வளர்ந்து, உயர்வான இடத்தினை அடைவோம்.
கற்றறிவு வளர்ந்தால் மனித வளம் சிறக்கும். மனித வளம் சிறந்தால், நாட்டின் வளம் பெருகும். மனித வாழ்க்கையை அழிக்கும் போதைப் பொருட்கள் மண்ணோடு மண்ணாக மடிந்து போகும். மனித மனங்களை சூறையாடும் மது அரக்கன் வீழ்ந்து, மண்ணோடு சிதைந்து போவான்.
வருடங்கள் மாறும், மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை வைத்தால், உங்கள் வாழ்க்கை மாறாது. விடாமுயற்சியும் உழைப்பும் இருப்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம். அதனால் வருடங்களை கடத்தாமல், கடினமான உழைப்பினால் காலத்தோடு பயணித்து, வருடங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், உங்கள் வாழ்க்கையை பதிவேற்றம் செய்து கொல்லுங்கள்.
சின்னச் சின்ன மழைத் துளிகள் பூமியின் தலையெழுத்தையே மாற்றும். அதைப் போல்தான் உங்கள் உழைப்பால் உடம்பில் உதிரும் வியர்வைத் துளிகளும் உங்களின் வாழ்வு தனை வென்று காட்டும். உழைப்போடு காலத்தைக் கடத்துங்கள். காலம் தந்து விட்டு செல்லும் அறிய வாழ்க்கையை அனுபவித்து மகிழ்நதிடுங்கள்.
தேனீக்கள் எந்த அறிவியல் தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு, தேன்கூடு எப்படி கட்டியது என்று ஆச்சரியமாக பார்க்கிறோம். தேனீக்கள் தன் கூட்டை விட்டு மூன்று மைல்களுக்கு அப்பால் சென்று, தன் வாழ்வாதாரம் தேடி சென்று, பின் எப்படி தன் கூட்டுக்குள் வந்து சேர்கிறது என்று வியப்பாக பார்க்கிறோம். அதனுடைய வாழ்க்கை அமைப்பை வடிவமைத்து வாழ்கிறது, ஆறறிவு இல்லாத தேனீக்கள்.
பிறப்பில் ஆறு அறிவுடன் இருக்கும் மனித இனமாகிய நாம், வாழ்வியல் முறையைத் தழுவி, வழுவாமல் வாழ்கிறோமா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுப்பாருங்கள். உள்ளுணர்வு நம்மை தலைகுனிய வைக்கும்.
வாழ்க்கையில் வியர்வை சிந்தி, உழைப்பால் உயர்ந்து, தான் இதுவரை அனுபவித்த கஷ்ட காலத்திற்கு இப்போது விடிவு காலம் வந்திருக்கு என்று நினைப்போம். மற்றவர்கள் சொல்வது அவனுக்கென நல்ல காலம் பிறத்திற்கு என்று வாய் கூசாமல் சொல்வார்கள். உழைப்பிற்கு தகுந்த மரியாதையைத் தர ஏனோ அவர்கள் மனம் இடம் தராது.
வாழ்க்கையில் துன்பம் வரும் போது துணையாக நிற்க யாரும் வரமாட்டார்கள். அவன் யாருக்கு என்ன துரோகம் செய்தானோ? இப்ப கஷ்டங்களை அனுபவிக்கிறான் என்று மற்றவர்களிடம் பகிர்ந்து, கேலி செய்வார்கள். அதே நல்ல நிலையில் வாழ்ந்ததால், முதுகு சொரிந்து விட படையெடுத்து வருவார்கள். இப்படிப்பட்ட மனித குணங்கள், மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல் மாறிவிடுகிறது.
வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் ஏணியாக இருந்து, மனித நேயத்தோடு வாழ்வோம். ஆயிரம் உந்துசக்தி கிடைத்து, உயர்வாக வாழ்ந்தாலும், மனிதனாக வாழ்வோம். ஆயிரம் கவலைகள் சூழ்ந்தாலும், மனதை அழிவு சக்திக்கு இடம் கொடுக்காமல், நல்ல விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் கால் தடம் பதித்து வாழ்ந்து காட்டுவோம்!